அமெரிக்க அரசு முடக்கத்தால் 5000 விமான சேவைகள் பாதிப்பு
அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை 5,000-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டன. அவை ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாக புறப்பட்டன. அரசு முடக்கம் எதிரொலியாக விமான சேவைகளைக் குறைக்க விமான நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தும் புதிய உத்தரவுகள் அமலுக்கு வந்த முதல் நாளில் இப்படி நடந்திருக்கிறது.
அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சம்பளம் இன்றி பணியாற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மற்ற அரசுப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக விமான சேவையைக் கட்டுப்படுத்தும் புதிய உத்தரவுகள் வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்காவின் 40 பெரிய விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டன.
பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, விமான சேவைகள் 4% குறைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த வார முடிவில் இது 10% ஆக உயரும்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் விமான சேவைகள் 20 % குறைக்கப்படும் என Fox News-க்கு அளித்த பேட்டியில் போக்குவரத்துத் துறைச் செயலாளர் சீன் டஃபி (Sean Duffy) கூறினார்.
தற்போது ஒவ்வொரு விமான நிலையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், தங்கள் பயணத்தை வேறு வழிகளில் தொடர திட்டமிட்டு வருகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



