மேடே என்பது என்ன? விமானத்தில் எத்தகைய சூழலில் அதனை பயன்படுத்துவார்கள்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஆமதாபாத் விமான விபத்துக்குப்பின் 'மேடே' என்ற சொல்லைச் செய்திகளில் நீங்கள் கேட்டிருப்பீர்கள். மேடே என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் இந்த வீடியோ உங்களுக்கானது தான்.

மேடே என்றால் என்ன?

கேம்பிரிட்ஜ் அகராதியின் படி, 'மேடே' என்பது ஒரு விமானம் அல்லது கப்பல் ஆபத்தில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் ஒரு சொல்.

Camera - "M'aidez" என்ற பிரஞ்சு வார்த்தையிலிருந்து 'மேடே' வந்துள்ளது. இதற்கு 'எங்களுக்கு உதவுங்கள்' என்று பொருள்.

அமெரிக்காவின் Federal Aviation Administration-ன் கூற்றுப்படி, 'மேடே' என்பது அவசர சூழ்நிலையில் உதவிக்காக விடுக்கப்படும் அழைப்பு. இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ரேடியோ சிக்னலாகும்.

லண்டனின் க்ராய்டன் விமான நிலையத்தில் ரேடியோ அதிகாரியாக பணியாற்றிய ஃப்ரெடரிக் மாக்ஃபோர்ட் 1923-ஆம் ஆண்டு 'மேடே' என்ற சொல்லை உருவாக்கினார்.

1924-ஆம் ஆண்டில் வெளியான 'புக் ஆஃப் வயர்லெஸ் டெலிகிராஃபி' என்ற புத்தகம் 'மேடே' என்ற சொல்லைச் சர்வதேச அவசர அழைப்பாக அங்கீகரித்தது.

பின்னர், 1927-ஆம் ஆண்டு நடந்த International Radiotelegraph Convention-ல் இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவசர அழைப்புச் சொல்லாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சரி, இந்த மேடே வார்த்தை எப்போது பயன்படுத்தலாம்?

விமானி அல்லது கப்பலின் கேப்டன் அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது 'மேடே' அழைப்பை மேற்கொள்ளலாம்.

இயந்திரக் கோளாறு, கப்பலில் தண்ணீர் புகுதல், கப்பல் அல்லது விமானத்தில் தீப்பற்றுவது அல்லது கட்டுப்பாட்டை இழப்பது போன்ற காரணங்களுக்காக 'மேடே' அழைப்பைப் பயன்படுத்தலாம்.

இந்த மேடே அழைப்பை ரேடியோ மூலம் விமானி, விமான கட்டுப்பாடு அறையுடன் தொடர்புகொள்கிறார். மேடே அழைப்பு வந்தவுடன் அந்த ரேடியோ அதிர்வெண்ணில் உள்ள மற்ற தொடர்புகள் நிறுத்தப்படும். அதன் பின் விமான கட்டுப்பாடு அறை இந்த அவசர நிலைக்கு முன்னுரிமை கொடுத்து மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கத் தொடங்கும்.

தெளிவான தகவல் பரிமாற்றத்துக்காக மேடே என்ற சொல்லை மூன்று முறை சொல்லை சொல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேடே-க்கு அடுத்தபடியாக உயிருக்கு ஆபத்து இல்லாத இரண்டாம் கட்ட அவசரக் கால உதவிக்கு பான்-பான் என்ற அழைப்பு பயன்படுத்தப்படுகிறது.

ஆமதாபாத்தில் என்ன நடந்தது?

ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக டிஜிசிஏ அறிவித்தது.

விமானத்தின் கேப்டனுக்கு 8,200 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும், துணை விமானிக்கு 1,100 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும் டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஆமதாபாத்தில் உள்ள ஓடுபாதை 23இல் இருந்து மதியம் 1:39 மணிக்குப் புறப்பட்டது.

புறப்பட்ட பிறகு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மேடே எனும் உயிருக்கு ஆபத்து இருப்பதைக் குறிக்கும் அவசர அழைப்பு வந்தது. ஆனால், அதன் பிறகு விமானத்தில் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. விமான நிலைய எல்லைக்கு வெளியே விமானம் விபத்துக்குள்ளானது.

விமான ரேடார் தரவுகளின்படி...

மதியம் 1:30 மணிக்கு விமானம் தரையில் இருந்தது, வேகம் பூஜ்ஜிய நாட்ஸ் (Knots- விமானங்களின் வேகத்திற்கான அலகு)

மதியம் 1:34 மணிக்கு, விமானம் இன்னும் ஓடுபாதையில்தான் இருந்தது, ஆனால் மெதுவாக நகர்ந்தது. அந்த நேரத்தில் விமானத்தின் வேகம் மணிக்கு 10 நாட்ஸ் (மணிக்கு 18.5 கிமீ).

விமானம் மதியம் 1:38 மணிக்குப் புறப்பட்டது. அது 174 நாட்ஸ் என்ற வேகத்தில் தரையில் 425 அடி உயரத்தை எட்டியது. அதன் பிறகு, விமானத்தில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு