ஐரோப்பாவிலும் விவசாயிகள் போராட்டம்: பிரான்ஸ் அதிபரை சூழ்ந்து சரமாரி கேள்வி - என்ன காரணம்?

ஐரோப்பாவிலும் விவசாயிகள் போராட்டம்: பிரான்ஸ் அதிபரை சூழ்ந்து சரமாரி கேள்வி - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

இதேபோல, ஊதிய உயர்வு, ஐரோப்பா அல்லாது வெளிநாட்டு வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நாடுகள் அனைத்திலும் முக்கிய நகரங்களின் பிரதான சாலைகளை டிராக்டர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

பிரான்ஸ் அதிபர் மக்ரோனை சூழ்ந்து சரிமாரி கேள்வி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய வேளாண் கண்காட்சியில் பங்கேற்க வந்த அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் முழக்கம் எழுப்பினர். அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

அதிபரை சூழ்ந்து கொண்டு விவசாயிகள் முறையிட்டனர். "இன்று விவசாயிகள் அனைவரும் வருமானம் இன்றி மடிந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் உயிரிழக்கிறோம். அரசு அமைப்புகளால், கடுமையான விதிகளால் எங்களால் வாழ முடியவில்லை" என்று விவசாயிகள் முறையிட்டனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக, வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு உரை நிகழ்த்த இருந்த மக்ரோன் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார். விவசாயிகளுக்கான நிகழ்ச்சியிலேயே விவசாயிகள் இப்படி நடந்து கொண்டது வேதனையளிக்கிறது என மக்ரோன் கூறினார்.

ஊதிய உயர்வு, விவசாயத்தில் அதிகரித்து வரும் அரசின் தலையீடு, பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள், ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பதால் உள்நாட்டு விளைபொருட்களின் விலை குறைவு என நான்கு முக்கிய பிரச்னைகளை ஐரோப்பாவில் உள்ள விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

யுக்ரேனில் இருந்து விளைபொருட்களை இறக்குமதி செய்ய எதிர்ப்பு

இது அல்லாது வேறு சில பிரச்னைகளையும் சில நாடுகள் எழுப்புகின்றன. யுக்ரேனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை விவசாய பொருட்களை தடுக்க வேண்டும் என போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்

அதிக இறக்குமதி காரணமாக உள்ளூர் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

கிரீஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

இத்தாலியை சேர்ந்த விவசாயிகள் வருமான வரியில் இருந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ள முடிவை எதிர்த்து போராடி வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)