டெக்சாஸ் வெள்ளம்: கோடை முகாமில் உயிரிழந்த 28 பெண் குழந்தைகள் - டிரம்ப் கூறியது என்ன?
மத்திய டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது 81 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 41 பேரின் நிலை என்னவென இதுவரை தெரியவில்லை. இந்த வெள்ள பாதிப்பின் தற்போதைய நிலை என்ன?
அமெரிக்காவின் டெக்ஸாஸில் கடந்த வெள்ளிக்கிழமை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குவாடலூப் ஆற்றில் திடீரென ஒரு மணி நேரத்திற்குள் 26 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
28 குழந்தைகள் உட்பட 68 பேர் கெர் கவுண்டி பகுதியில் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியின் ஆற்றங்கரையில் உள்ள கேம்ப் மிஸ்டிக் எனப்படும் பெண்களுக்கான கிறிஸ்தவ கோடைக்கால முகாம் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த முகாமில் இருந்த 10 குழந்தைகள் மற்றும் ஒரு ஆலோசகர் காணாமல் போயுள்ளனர்.
கெர் கவுண்டியில் மீட்கப்பட்டவர்களில், 18 பெரியவர்கள் மற்றும் 10 குழந்தைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை.
டெக்சாஸின் சூழல் குறித்து ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப் இதனை மிகவும் பயங்கரமான விஷயம் எனக் கூறினார்.
வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ உள்ளூர் மக்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெக்சாஸில் உயிரிழந்தவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் ரோம் நகரில், போப் லியோ XIV, சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்தினார்.
"அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள குவாடலூப் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிகழ்ந்த பேரழிவில், குறிப்பாகக் கோடை முகாமில் இருந்த தங்கள் மகள்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று போப் லியோ கூறினார்.
அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்துக்கு கடும் காற்றுடன் கூடிய கனமழை பொழியும் வாய்ப்பிருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே சேறு மற்றும் விஷப் பாம்புகளை மீட்புக் குழுக்கள் எதிர்கொண்டு வருவதால், மீட்புப் பணிகளில் மேலும் சவாலானதாக மாற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



