லெபனானில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியது - ஹெஸ்பொலா கூறுவது என்ன?
ஹெஸ்பொலாவுக்கு எதிராக லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல் வரையறுக்கப்பட்டது என்றும் இலக்கை குறிவைத்து நடத்தப்படுவது என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தாக்குதலை நிறுத்த அழைப்பு விடுத்துவரும் சூழலில், இஸ்ரேல் இந்த தரைவழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது.
முன்னதாக, இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் நயீம் காஸிம் கூறியிருந்தார்.
ஹெஸ்பொலாவை குறிவைத்து, லெபனானில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல்களை தொடுத்து வருகிறது, இதில், ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்பொலாவின் மூத்த உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது
லெபனானில் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் ஏற்கனவே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக லெபனான் பிரதமர் நஜிம் மிகாட்டி கூறியுள்ளார்.
கடந்த 2 வாரங்களில் 1000 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் அதிகாரப்பூர்வ குறிப்புகள் கூறுகின்றன.
முன்னதாக, தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யெஹோவ் கேலன்ட் கூறியிருந்தார்.
மறுபுறம், லெபனானுக்குள் இஸ்ரேலின் எத்தகைய நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாக ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் நயீம் காஸிம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் லெபனானுக்குள் தரைவழி தாக்குதலை தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. உளவுத்துறையின் துல்லிய தகவல்களின் அடிப்படையில் ஹெஸ்பொலாவின் இலக்குகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு எதிராக வரையறுக்கப்பட்ட தாக்குதலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு படை கூறுகிறது.
பெய்ரூட்டின் தெற்கில் அமைந்துள்ள புறநகர் பகுதியான தஹியேவில் இருந்து வெளியேறும்படி அங்குள்ள மக்களுக்கு இஸ்ரேல் புதிய எச்சரிக்கையை வெளியிட்டது.
தஹியேவில் ஆயுத உற்பத்தி தளங்கள், ஹெஸ்பொலாவின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து துல்லிய தாக்குதலை நடத்தியதை இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்துள்ளது. தாக்குதலுக்கு முன்பாக மக்கள் காயமடையாமல் இருப்பதற்காக எச்சரிக்கை விடுத்தல், வான்வழி கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
இதனிடையே, இஸ்ரேலேய படைகளை குறிவைத்து, இஸ்ரேலின் எல்லையில் அமைந்துள்ள மெதுலா நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹெஸ்பொலா கூறியுள்ளது. இவற்றில் சில இடைமறித்து அழிக்கப்பட்டன என்றும் சில வெளிப்புற பகுதிகளில் விழுந்தன என்றும் சில விபத்துகள் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
ஹெஸ்பொலா கடும் பின்னடைவுகளை சந்தித்து வந்தாலும், அது இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை. தற்போதும் எதிர்ப்பாளராக உள்ளது. மேலும் எந்த படையெடுப்பையும் எதிர்ப்போம் என சபதம் செய்துள்ளது என்கிறார் பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளரான ஹியுகோ பச்சேகா.
மேலும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து பெய்ரூட்டில் உள்ள ஹியுகோ பச்சேகா கூறும்போது, ஹெஸ்பொலாவுக்கு எதிரான ஒரு பரந்த நடவடிக்கையின் தொடக்கமாக இது இருக்குமோ என்ற அச்சம் உள்ளதாக குறிப்பிடுகிறார். மேலும், இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு நுழைவது எளிதானதாக இருந்தாலும், வெளியேறுவது கடினம் என்பதைத் தான் வரலாறு காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



