சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தொடர்கதையாகும் போராட்டம் - உண்மை என்ன?
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறி தொடர்ந்து 2-வது நாளாக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், வழக்கமான அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். உண்மை என்ன?
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பயணிகள் தரப்பில் இருந்து வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், வார இறுதியையொட்டி கடந்த பிப்ரவரி 9 மற்றும் 10ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் அதிகளவு பயணிகள் குவிந்தனர். எனினும் திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்குப் போதிய எண்னிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நள்ளிரவில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
நேற்றைய தினம் சனிக்கிழமை இரவிலும் பேருந்துகள் போதுமான எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயணிகள் போராட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருவதாகக் கூறினார்.
வார இறுதி என்பதால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைவிட கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நள்ளிரவு நேரத்தில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிப்பதாகவும், கிளாம்பாக்கத்திற்கு நள்ளிரவு வரும் பயணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், X/K.ANNAMALAI
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



