சிலருக்கு பால் குடித்தால் ஒவ்வாமை ஏற்படுவது ஏன்? - இதற்கு மாற்று என்ன?

செரிமானம், லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவரின் உடலால் இந்த லாக்டோஸை உடைக்கவோ அல்லது செரிமானம் செய்யவோ முடியாதபோது லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை ஏற்படுகிறது
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிலருக்கு பால் பொருட்களை சாப்பிட்ட பிறகு வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படும். இதற்குக் காரணம் லாக்டோஸ் ஒவ்வாமை தான்.

லாக்டோஸ் என்பது விலங்குகளின் பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படும் ஒரு வகை சர்க்கரை ஆகும். இந்த லாக்டோஸை உடைக்கவோ அல்லது செரிமானம் செய்யவோ முடியாத போது லாக்டோஸ் ஒவ்வாமை ஏற்படும்.

லாக்டோஸை செரிமானம் செய்ய நமது சிறுகுடலில் லாக்டேஸ் என்ற நொதி உள்ளது. பாலில் உள்ள லாக்டோஸ் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதே இதன் பணியாகும்.

லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் பால் அல்லது பால் பொருட்களை உட்கொள்வது பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆசியா, ஆஃப்ரிக்கா, மெக்சிகோ மக்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்களிடையே லாக்டோஸ் ஒவ்வாமை ஒப்பீட்டளவில் அதிகம் காணப்படும்.

பால் பொருட்கள், லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பால் பொருட்களை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே லாக்டோஸ் ஒவ்வாமையின் அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன

பால் பொருட்களை உட்கொண்ட சில நிமிடங்கள் முதல் சில மணி நேரத்திற்குள் லாக்டோஸ் ஒவ்வாமையின் அறிகுறிகள் தோன்றும்.

  • வயிற்றுப் பொருமல் அல்லது வாயு வெளியேற்றம்
  • அடிக்கடி ஏப்பம் வருவது
  • வயிற்று வலி அல்லது அசௌகரியம்
  • வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்

பலருக்கு உடலில் தடிப்புகள், தலைவலி, மூட்டு வலி, சோர்வு மற்றும் கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருப்பது, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம் கலந்து வருவது, வயிற்றில் அதிகப்படியான வீக்கம் அல்லது அசாதாரணமான எடை இழப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக இரைப்பை குடல் நிபுணரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பால், லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உணவு ஒவ்வாமை மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை ஆகிய இரண்டும் வேறுபட்டவை

ஒவ்வாமைகள்

உணவு ஒவ்வாமை என்பது லாக்டோஸ் ஒவ்வாமையை விட மிகவும் தீவிரமானது. ஒருவருக்கு லாக்டோஸ் உள்ள உணவுகளுக்கு ஒவ்வாமை இருந்தால், அறிகுறிகள் கடுமையாக இருக்கலாம்.

அறிகுறிகள்

  • பால் குடித்த உடனே உதடுகள், முகம், தொண்டை அல்லது நாக்கில் திடீர் வீக்கம் ஏற்படுவது
  • வீங்கிய பகுதியில் அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படுவது
  • சாதாரணமாக சுவாசிப்பது கடினமாக இருப்பதால் மூச்சிரைப்பு ஏற்படும்
  • தொண்டையில் இறுக்கம் அல்லது விழுங்குவதில் சிரமம்
  • தோல், நாக்கு, உதடுகள் நீலம், சாம்பல் அல்லது வெளிர் நிறமாக மாறும் (தோல் கருமையாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ இருந்தால், இந்த மாற்றம் உள்ளங்கைகள் அல்லது உள்ளங்கால்களில் தெரியும்)
  • திடீரென்று மிகவும் குழப்பமாக, தூக்கம் வருவதுபோல், மந்தமாக அல்லது தலைச்சுற்றுவதாக உணர்வது
  • குழந்தைகளுக்கு உடல் மரத்துப் போகும், தலை சாயும், அழைத்தாலும் அவர்கள் எதிர்வினையாற்ற மாட்டார்கள்

உணவு ஒவ்வாமையின் கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

லாக்டோஸ் ஒவ்வாமை மற்றும் உணவு ஒவ்வாமை ஆகிய இரண்டும் ஒன்றல்ல என்பது கவனிக்கத்தக்கது. உணவு ஒவ்வாமை சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தானதும் கூட.

லாக்டோஸ்

பட மூலாதாரம், Getty Images

லாக்டோஸ் எவற்றில் உள்ளது?

  • பசு, எருமை, ஆடு மற்றும் செம்மறி ஆட்டின் பால் உள்பட விலங்குகளின் பாலிலும், அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களிலும் லாக்டோஸ் இருக்கிறது.
  • பால் பொருட்களில் பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, கிரீம், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவை அடங்கும்.
  • சில பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களிலும் லாக்டோஸ் இருக்கலாம்.
  • கோதுமை, ஓட்ஸ், அரிசி, பார்லி, சோளம் போன்ற தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள்
  • ரொட்டி, கேக், பிஸ்கட் மற்றும் பேஸ்ட்ரிகள், சாஸ்கள், மில்க் ஷேக், புரோட்டீன் ஷேக்

லாக்டோஸ் ஒவ்வாமை சோதனை

லாக்டோஸ் ஒவ்வாமையைக் கண்டறிய எளிதான சோதனை, எந்த உணவு உங்களுக்கு வயிறு உப்புசம், வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிவதாகும்.

லாக்டோஸ் உள்ள உணவை சாப்பிடுவதை நிறுத்தினால், இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும்.

இதை லாக்டோஸ் ஒவ்வாமை சோதனை மற்றும் ஹைட்ரஜன் சுவாச பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

பால் பொருட்கள், லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

லாக்டோஸ் ஒவ்வாமை சோதனை

இந்த சோதனை உங்கள் செரிமான மண்டலத்தால் லாக்டோஸை எவ்வளவு நன்றாக செரிமானம் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது.

சோதனைக்கு முன்பு சுமார் நான்கு மணி நேரம் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும்.

இதற்குப் பிறகு, லாக்டோஸ் கொண்ட பானம் வழங்கப்படும், அதற்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் உங்கள் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்படும்.

ஹைட்ரஜன் சுவாசப் பரிசோதனை

இந்த பரிசோதனையில், அதிக அளவு லாக்டோஸ் உள்ள திரவம் குடிக்க கொடுக்கப்படும்.

பின்னர் உங்கள் சுவாசத்தை பல முறை சோதித்துப் பார்ப்பார்கள். உங்கள் சுவாசத்தில் அதிக அளவு ஹைட்ரஜன் இருந்தால் உங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளது என்பதைக் குறிக்கிறது.

மல அமில சோதனை

சிறு குழந்தைகளுக்கு இந்த சோதனை செய்யப்படுகிறது. இது மலத்தில் எவ்வளவு அமிலம் உள்ளது என்பதை அளவிடுகிறது.

லாக்டோஸை செரிமானம் செய்ய முடியாதவர்களின் மலத்தில் லாக்டிக் அமிலம், குளுக்கோஸ் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் இருக்கும்.

பயாப்ஸி

அறிகுறிகள் கடுமையாக இருந்து நீண்ட காலமாக சரியாகவில்லை என்றால், காஸ்ட்ரோஸ்கோபி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இது உங்கள் வாயின் வழியாக ஒரு நீண்ட, மெல்லிய குழாயை உங்கள் வயிற்றுக்குள் செருகுவதை உள்ளடக்கியது. உங்கள் சிறுகுடலில் இருந்து ஒரு சிறிய மாதிரி செல்கள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை, சிகிச்சை
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிகிச்சை என்ன?

லாக்டோஸ் ஒவ்வாமைக்கு நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை. ஏனெனில் ஒருவரின் உடல் அதிக லாக்டேஸ் நொதியை உற்பத்தி செய்ய உதவும் எந்த சிகிச்சையும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இருப்பினும், உங்கள் உணவுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது லாக்டேஸ் சப்ளிமெண்ட்களைப் பயன்படுத்துவதன் மூலமோ அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.

லாக்டோஸ் ஒவ்வாமைக்கு ஒரே அடிப்படை சிகிச்சை லாக்டோஸ் கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைந்த அளவில் சாப்பிடுவதுதான். லாக்டோஸ் கொண்ட உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு லாக்டேஸ் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது இந்த அறிகுறிகளைத் தடுக்கலாம்.

பலருக்கு லாக்டோஸ் ஒவ்வாமைக்கு ஒரு முக்கிய காரணம் சீலியாக் நோய். சீலியாக் நோய்க்கு சிகிச்சையளிக்க முடிந்தால், லாக்டோஸ் ஒவ்வாமையையும் குணப்படுத்த முடியும்.

செரிமானம், லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை

பட மூலாதாரம், Getty Images

பால் ஒரு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இது கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

எந்த பால் அல்லது பால் பொருட்கள் லாக்டோஸ் ஒவ்வாமையின் மிகக் குறைந்த அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்து, அவற்றை மிதமாக சாப்பிடுங்கள்.

சந்தையில் கிடைக்கும் லாக்டோஸ் இல்லாத பால் மற்றும் லாக்டோஸ் இல்லாத உணவுகளையும் தேர்வு செய்யலாம், அவற்றில் லாக்டேஸ் நொதி உள்ளது.

பாலாடைக்கட்டி மற்றும் தயிரில் லாக்டோஸ் மிகக் குறைவு. எனவே நீங்கள் அவற்றை முயற்சி செய்யலாம்.

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உலக சுகாதார அமைப்பு (WHO), அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்டவை.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு