பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் - மனு பாக்கர் வரலாற்றுச் சாதனை

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் - மனு பாக்கர் வரலாற்றுச் சாதனை
பிரசுரிக்கப்பட்டது

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா. 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில், வெண்கலப் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி, 16-10  என்ற கணக்கில் கொரிய அணியை வீழ்த்தி பதக்கத்தை பெற்றது.

மனுபாக்கர் பங்களிப்பில் இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் கிடைத்துள்ள இரண்டாவது வெண்கலப் பதக்கம் இதுவாகும். முன்னதாக கடந்த ஜூலை 28-ம் தேதி  நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை மனுபாக்கர் வெண்கலம் வென்று இந்தியவின் பதக்க கணக்கை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியின் மூலம் அவர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர் 2020-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'வளரும் வீராங்கனை'க்கான விருதைப் பெற்றவராவார்.

ஒலிம்பிக் மூலம் இந்தியாவின் பதக்க பெண்மணியாக உருவெடுத்துள்ள மனுபாக்கரின் பின்னணி என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

ஹரியானாவின் ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு. இவரது தாய் ஒரு பள்ளி ஆசிரியை., தந்தை மரைன் என்ஜினியர்.

2018-ல் மெக்சிகோவில் சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றார் மனுபாக்கர். அப்போது அவருக்கு வயது 16.

தற்போது சாதனை படைத்துள்ள மனு பார்க்கர் தொடர் வெற்றிகளை மட்டும் பார்த்தவர் அல்ல. தோல்விகள் தந்த ஏமாற்றங்களை பின்னுக்கு தள்ளிதான் அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

2020 ஒலிம்பிக்கில் மனு பாக்கர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் எந்தப் போட்டியிலும் அவரால் பதக்கச்சுற்றை எட்ட முடியவில்லை. இது அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு போட்டியில் அவரது கைத்துப்பாக்கி செயலிழந்தது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் அவரது முழு பங்கேற்பும் தடம் புரண்டது. தனது தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தனது அப்போதைய பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா மீது குற்றம் சாட்டினார் மனு.

முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான ராணா அதை மனுவின் பக்குவமின்மை என்று அழைத்தார். இருவரும் பிரிந்தனர். இந்நிலையில்தான் ஒரு நாள் மனுபாகர் தன்னைச் சுற்றியிருந்த யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார்.  ஜஸ்பால் ராணாவை அழைக்கும் முடிவுதான் அது.

ஜஸ்பால் ராணாவால் மட்டுமே தனது தலைவிதியை மாற்ற முடியும் என்பதை உணர்ந்திருந்தார்.

அந்த உணர்வு சரி என தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

தற்போது பயிற்சியாளர் ஜஸ்பாலின் வழிகாட்டுதலில் தனது மகள் மகத்தான சாதனையை படைத்துள்ளதாக மனுவின் தாய் தெரிவித்தார்.

நான் மனுவிடம் நன்றாக சாப்பிட வேண்டும். நன்றாக தூங்க வேண்டும் அது மிக முக்கியம் என்பேன். மேலும் எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அதை என்னிடம் முதலில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன் என்கிறார் மனு பாக்கரின் தாய்.

சரப்ஜோத் சிங் யார்?

அம்பலாவில் உள்ள தீன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரப்ஜோத் சிங்.

ஹங்கேரி நாட்டை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரான கரோலி டக்காஸின் வாழ்க்கைதான் சரப்ஜோத்க்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக குறிப்பிடுகிறார் சரப்ஜோத் சிங் பயிற்சியாளர் அபிஷேக் ராணா.

ஹங்கேரி நாட்டை சேர்ந்த கரோலி டக்காஸ் கண்ணி வெடி தாக்குதலில் தன்னுடைய வலது கையை இழந்த நிலையிலும், துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று அவர் தங்கப் பதக்கமும் வென்றார். அவரின் இந்த வெற்றிக் கதை என்னை வெகுவாக ஈர்த்தது. எத்தனை துன்பங்கள் வந்தாலும், மனம் தளராமல் முயற்சி செய்தால் நீங்கள் உங்கள் இலக்கை அடையலாம் என்பதை இது உணர்த்தியது. இந்த கதையை நான் தொடர்ந்து சரப்ஜோதிற்கு பயிற்சியின் போது கூறி வந்தேன். இது ஒலிம்பிக் பதக்கம் என்ற எங்கள் இலக்கின் மீது கவனம் செலுத்த எங்களை ஊக்குவித்தது" என்று கூறினார்.

கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டிக்கான தகுதி சுற்றில் தோல்வி அடைந்தார் சரப்ஜோத். இது அவரை வருத்தமடைய செய்தது.

"அவருடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்து போனது. அன்று மாலை நான் அவருக்கு மீண்டும் ஊக்கமளித்தேன். ஹங்கேரி நாட்டு வீரரைப் பற்றி மீண்டும் கூறினேன். அது நாங்கள் முன்னோக்கி செல்ல உந்துதல் அளித்தது. அடுத்த நாள் அவர் கலப்பு இரட்டையர் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்ற அனைத்தையும் மறந்துவிடு. இந்த இலக்கில் மட்டும் கவனம் செலுத்து என்று கூறி தான் இன்று நடைபெற்ற போட்டிக்கு அனுப்பினேன் என்கிறார் பயிற்சியாளர் அபிஷேக்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)