டெல்லியை நோக்கி மீண்டும் டிராக்டர் பேரணிக்கு ஆயத்தமாகும் விவசாயிகள் - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, 2 ஆண்டுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் போராட ஆயத்தம் ஏன்?
டெல்லியை நோக்கி மீண்டும் டிராக்டர் பேரணிக்கு ஆயத்தமாகும் விவசாயிகள் - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

Delhi Chalo என்ற பெயரில் பிப்ரவரி 13ஆம் தேதி தலைநகர் டெல்லிக்கு நுழையப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில், அவர்களை தடுக்கும் விதமாக முன்னேற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் டெல்லியை நோக்கி செல்லும் பல முக்கிய சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆணி போன்றவை சாலையில் பதிக்கப்பட்டுள்ளன. போலீசார், எல்லையோர பாதுகாப்பு படையினர், விரைவு அதிரடிப் படையினர் போன்றோர் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுதா கிஷான் மோச்சா மற்றும் கிசான் மஸ்டோர் மோச்சா ஆகிய விவசாய அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 11ஆம் தேதி காலை முதல் பிப்ரவரி 13ஆம் தேதி இரவு வரை ஹரியானாவின் 7 மாவட்டங்களிலும் மொபைல் இணைய வசதி நிறுத்தப்பட்டுள்ளது. எல்லைகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் டெல்லி முழுவதும் 144 தடை விதிப்பதாக டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த 30 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)