You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பா.ஜ.க.வின் மேட்ச் பிக்சிங்கை முறியடிக்க மும்முரமாக வேலை' - ராகுல் காந்தி கூறியது என்ன?
இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு ‘ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி’ என்று பெயரிடப்பட்டது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கலந்துகொண்டார்.
இந்த பேரணியில் சிவசேனா (யுபிடி), சமாஜ்வாதி கட்சி, என்சிபி (சரத் பவார்), திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திமுக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “பாஜக இந்தத் தேர்தலில் ஜெயிக்க ‘மேட்ச் ஃபிக்சிங்கில்’ (சூதாட்டத்தில்) ஈடுபட முயல்வதாக” குற்றம் சாட்டினார்.
பாஜகவின் இந்த முயற்சியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் மும்முரமாக வேலை செய்து வருவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். மேலும், பாஜகவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால் நம் அரசமைப்பு முடிவுக்கு வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
“இது சாதாரண தேர்தல் அல்ல, இது அரசமைப்பு சட்டத்தைப் பாதுகப்பதற்கான தேர்தல். நாட்டைப் பாதுகாப்பதற்கான தேர்தல். ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேர்தல்” எனவும் ராகுல் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “உங்களுக்கு ஜனநாயகம் வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் விஷம் போன்றது. அதைச் சுவைத்தால் உங்களுக்கு மரணம் நேரிடும்,” எனக் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)