ஜொமேட்டோ: சைவ உணவு டெலிவரிக்கு பச்சை சீருடை அறிவிப்பு வாபஸ் - என்ன காரணம்?
இந்தியாவில் உணவு டெலிவரியில் புகழ்பெற்ற நிறுவனமான Zomato. சுத்த சைவ விரும்பிகளுக்காக, சைவ உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு சென்று வழங்கும் பணியில் தனி ஊழியர்கள் ஈடுபடத்தப்பட உள்ளதாக அறிவித்தது. அவர்கள் பச்சை நிற சீருடை அணிவார்கள் என்றும் கூறியது. ஜொமாட்டோவின் இந்த புதிய திட்டம், சாதியத்தை வலுப்படுத்தும் விஷயம் என ஆன்லைனில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
எதிர்ப்பு எழுந்த நிலையில், பச்சை நிற ஆடை முறையை கைவிடுவதாக ஜொமாட்டோ CEO தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். அதேநேரம், சைவ உணவுகளை மட்டுமே வழங்கும் சேவையை தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

பட மூலாதாரம், DEEPIGOYAL
ஜொமாட்டோ நிறுவனம் திடீர் அறிவிப்பு
ஜொமாட்டோவின் தலைமை நிர்வாக இயக்குநர் தீபிந்தர் கோயல் கடந்த மார்ச் 19ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், உலகிலேயே சைவ உணவை சாப்பிடுவோரின் சதவீதம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. அதேநேரம், தங்கள் உணவு எவ்வாறு சமைக்கப்படுகிறது, கையாளப்படுகிறது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவதாக சில பயனர்கள் கூறியுள்ளனர்.
எனவே, சுத்த சைவ உணவகங்களுக்கு மட்டுமே சென்று, உணவை வாங்கி வாடிக்கையாளர்களிடம் தருவதற்கென பிரத்யேக ரைடர்களை கொண்ட புதிய சேவையை தொடங்குகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஜொமாட்டோவில் இந்த சேவையை தேர்வு செய்யும் பயனர்களுக்கு சைவ உணவை வழங்கும் ஹோட்டல்களில் பெயர்கள் மட்டுமே காட்டப்படும், அசைவ உணவுகளை வழங்கும் ஹோட்டல்களின் பெயர்கள் தவிர்க்கப்படும் என்று குறிப்பிட்ட தீபிந்தர் கோயல், சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடும் பிரத்யேக ஊழியர்கள் பச்சை நிற சீருடையும் பச்சை நிற டெலிவரி பேக்கையும் பயன்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த சேவை எந்தவொரு மத மற்றும் அரசியல் விருப்பதற்கு ஆதரவானதோ அல்லது முரண்பட்டதோ அல்ல என்றும் அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் இறைச்சி உண்பது என்பது நாட்டின் சாதிய பழக்கவழக்கங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்று. சுத்த சைவ உணவை மட்டுமே உண்பவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்பவர்கள், உணவை சமைப்பதற்கு தனி பாத்திரத்தை பயன்படுத்துவது, அது எந்த வகையான இறைச்சியுடனும் கலக்காமல் உள்ளதா என்பதை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார்கள்.
இத்தகைய சூழலில் ஜொமாட்டோவின் இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான தமிழ் இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பு எழுந்தது. .
அசைவ உணவுகளை ஆர்டர் செய்து உண்பதன் மூலம் அண்டை வீட்டாரால் துன்புறுத்தலுக்கு உள்ளான நிகழ்வுகளை பலரும் தெரிவித்திருந்தனர். சைவ உணவுகளை சாப்பிடும் நபர்களை அண்டைவீட்டாராக வைத்துகொண்டு இனி அசைவ உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது கடினமாகிப் போகும் என்று பயனர் ஒருவர் கூறியுள்ளார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Xவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.X பதிவின் முடிவு, 1
இனி, ஜொமாட்டோ டெலிவரி ஊழியர்களின் சீருடை மூலம் உங்களைப் பற்றி வீட்டின் உரிமையாளர்களும் அண்டை வீட்டாரும் முடிவு செய்ய முடியும் என்று ஒரு நபர் பதிவிட்டுள்ளார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Xவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.X பதிவின் முடிவு, 2
உணவு டெலிவரி செய்யும் நபர்களின் பாதுகாப்பு குறித்தும் சிலர் கவலை தெரிவித்தனர். அசைவ உணவு சாப்பிடுபவர்களும், இஸ்லாமியர்களும் Pure Veg உணவுகளை டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுவார்களா? அப்படி அனுமதிக்கப்பட்டால் அவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த பச்சை நிற ஆடை மூலம் ஜொமாட்டோவில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு குடியிருப்புகளில் சிக்கல் ஏற்படும் என்று ஒரு பயனர் கூறியிருந்தார்.
இது சாதி ரீதியிலானது என்றும் குற்றம் என்று ஒரு குறிப்பிட்டிருந்த ஒரு பயனர், ஜொமாட்டோ செயலியை Un install செய்யப்போவதாகவும் குறிப்பிட்டார்.
செயலில் சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்திய கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளரும் தெலங்கானா GiG and Platform workers union-ன் நிறுவன தலைவரமான ஷேக் சலாவுதீன் வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு தற்போது தூய சைய சேவையை அறிமுகம் செய்யும் ஜொமாட்டோ எதிர்காலத்தில் தங்களுக்கு யார் உணவு டெலிவரி செய்ய வேண்டும் யார் செய்யக்கூடாது என்ற வாடிக்கையாளர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளுமா? சாதி, மதம் அடிப்படையில் டெலிவரி நபர்களை வகைப்படுத்துமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து pure veg சேவையில் சிறு திருத்தம் செய்வதாக தீபிந்தர் கோயல் அறிவித்திருக்கிறார். அதன்படி, மற்ற உணவுகளை டெலிவரி செய்யும் நபர்களும் சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்யும் நபர்களும் ஒரே விதமாக சிகப்பு நிற ஆடையை மட்டுமே அணிவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சைவ உணவுகளை வழங்கும் நபர்களை தனித்து பிரித்து பார்க்க முடியாது. அதேநேரம், தூய சைவ உணவுகளை டெலிவரி செய்யும் சேவை தொடரும் என்றும் செயலியில் இது குறிப்பிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், சிகப்பு ஆடை அணிந்த டெலிவரி செய்யும் நபர்கள், அடுக்குமாடிகள் போன்ற இடங்களில் தடுத்து நிறுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் தங்களின் ஊழியர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நிறுவனம் வெறுமனே சீருடை நிறம் விஷயத்தை மட்டுமே சரி செய்கிறது; அந்த பிரத்யேக சேவையை மாற்றவில்லை என குற்றம் சாட்டினர்.

பட மூலாதாரம், DEEPIGOYAL
ஜொமாட்டோ - முந்தைய சர்ச்சைகள்
ஜொமாட்டோ சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல , கடந்த 2019ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ஜொமேட்டோ செயலி மூலம் தான் ஆர்டர் செய்த உணவை தம்மிடம் கொண்டு சேர்க்க இந்து மதத்தைச் சேராத ஒருவரை அனுப்பி வைத்ததால் உணவை வாங்க மறுத்துவிட்டதாக ஜொமாட்டோவை டேக் செய்து சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஜொமாட்டோ, "உணவுக்கு மதம் கிடையாது; உணவே ஒரு மதம்தான்` என்று தெரிவித்தார். இந்த பதிலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்தனர்.சிலர் ஜொமாட்டோ செயலியை அன் இன்ஸ்டால் செய்தனர்.
இதேபோல், 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார். அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் ஜொமாட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். எதிர் தரப்பில் தமிழில் பேசாததால் வாடிக்கையாளர் இதுகுறித்து கேட்டிருக்கிறார். அப்போது, இந்தி இந்தியாவின் தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளவும் என்று எதிர்தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாக, உடனடியாக ஜொமாட்டோ வருத்தம் தெரிவித்தது. சம்பத்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்துவிட்டதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜொமாட்டோ நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. குப்பையை மறுசுழற்றி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் கூடிய அந்த விளம்பரத்தில் தலித்துகளை முன்னிறுத்தி அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக பலத்த எதிர்ப்பு எழும்பியதைத் தொடர்ந்தது அந்த விளம்பரத்தை ஜொமாட்டோ திரும்பப்பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



