காணொளி: அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - இரான்.
இரானில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது. இரான் விவகாரத்தின் சமீபத்திய தகவல்கள் என்ன? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
இரானில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இதில் ஹோர்மூஸை திறப்பதும் அடங்கும் என இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்துள்ளார்.
அரசு ஊடகத்திடம் பேசிய அவர், இரான் மீதான அமெரிக்காவின் முற்றுகையை நீக்குவதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என கூறினார். அதேவேளையில், இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பின்னர் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். அதே நேரம், இரானுக்கான பொருளாதார பலன்கள் இரான் ஒப்புக்கொண்டவற்றை பின்வற்றுவதை பொறுத்தே அமையும் என்றும் கூறினர்.
பிப்ரவரி 28ஆம் தேதி இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து போர் மூண்டது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் மீது இரான் தாக்குதல்களை நடத்தியதுடன், உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்திற்கான முக்கிய பாதையான ஹோர்மூஸ் நீரிணையையும் முடக்கியது.
ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட போதிலும், அமெரிக்காவும் இரானும் அவ்வப்போது தாக்கிக்கொண்டன. இந்த வாரம் கூட இரண்டு சுற்று தாக்குதல்கள் நடந்தன.
பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு சிறந்த உடன்பாட்டை எட்டியுள்ளதால் இரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல்களை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை கூறினார்.
இரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான அதி உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஒப்பந்தத்தின் சமீபத்திய நிபந்தனைகளை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் உள்ளனர் என அப்பாஸ் அராக்சி கூறியதாகவும் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இது குறித்து இன்னும் ஒருமித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் நேரடி சந்திப்பு இல்லாமலேயே அது கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.
போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கும், இரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் வழிவகுக்கக்கூடிய இந்த பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை.
இரான் அணு ஆயுதத்தை உருவாக்க முயற்சிப்பதாக பல தசாப்தங்களாகவே மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் இரான் தங்கள் அனுசக்தி திட்டம் மின்சாரம் தயாரித்தல் மற்றும் ஆராய்ச்சி போன்ற அமைதியான நோக்கங்களுக்கானது என கூறுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்த சில தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி, இரான் துறைமுகங்கள் மீதான தடையை அமெரிக்கா நீக்குவதற்கு பதிலாக, ஹோர்மூஸை இரான் முழுமையாக திறக்கும்.
இந்த நடவடிக்கைகள் ஏறக்குறைய உடனடியாக நடைமுறைக்கு வரும். அதைத் தொடர்ந்து 60 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் முக்கியமாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்த விவகாரங்கள் இடம்பெறும். அவை அனைத்தும் அங்கேயே அழிக்கப்பட்டு நாட்டிலிருந்து அகற்றப்படும் என அதிகாரிகள் கூறினர். அவர்கள் கூற்றுப்படி, இதைச் செய்வதற்கான துல்லியமான வழிமுறைகள் இன்னும் வகுக்கப்பட வேண்டியுள்ளது.
ஹெஸ்பொலா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதை இரான் நிறுத்த வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தம் வலியிறுத்துகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நம்பிக்கை அல்லது வாக்குறுதிகளின் அடிப்படையில் அல்லாமல், செயல்பாட்டின் அடிப்படையிலானது என அந்த அதிகாரிகள் கூறினர். அதாவது, இரான் ஒப்புக்கொண்டவற்றை செயல்படுத்தியதை உறுதிப்படுத்திய பின்னரே பொருளாதார ரீதியான பலன்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
அமெரிக்கா, இரான், பாகிஸ்தான் மற்றும் மத்தியஸ்த முயற்சிகளில் உதவிய கத்தார் ஆகிய அனைத்து தரப்பிடமும் ஒருவித எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை வெளிப்பட்டாலும், இன்னும் சிறிது தூரம் கடக்க வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு மாதங்களில் இத்தகைய ஒப்பந்தங்கள் பலமுறை எதிர்பார்க்கப்பட்டு, பின்னர் இறுதி கட்டத்தில் கைகூடவில்லை.
ஆனால், கடந்த முறைகளுடன் ஒப்பிடும் போது தற்போதைய சூழலில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அதிக அளவிலான நம்பிக்கையும், ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தில் கூடுதல் வெளிப்படைத்தன்மையும் இருப்பதுமே என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரான் வெளியுறவு அமைச்சர் இது குறித்து கூறும் போது, இது வரும் நாட்களில் நடக்கக்கூடும். நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



