You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்கு (காணொளி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.
மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன.
கடந்த 11ஆம் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி குமரி மாட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்ததுடன் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும் பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் குமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
பாலியல் குற்றம் தொடர்பாக இதுவரை ஐந்து பெண்கள் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீது ஆன்லைன் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீதான புகார்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினார். இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்