'பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற முனைவர்கள்' - அரசு உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடா?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"டிசம்பர் மாதம் நடந்த உதவிப் பேராசிரியர் தேர்வில் இந்தியப் பொருளாதாரம் குறித்த கட்டுரைக்குப் பதில் எழுதினேன். நான் நன்கு அறிந்த பாடம் என்பதால் நன்றாக தேர்வு எழுதினேன். ஆனால், ஆறு மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இந்தத் தேர்வு எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது"

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றும் பன்னீர்செல்வத்தின் வார்த்தைகள் இவை.

இவர் உள்பட தேர்வர்கள் பலரும் தேர்வு நடத்தப்பட்ட விதம், வினாத்தாள் திருத்தம், மதிப்பெண் ஆகியவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமையன்று முறையிட்டனர்.

அரசியல் கட்சிகளும் உதவிப் பேராசிரியர் பணியிட தேர்வை விமர்சித்துள்ள நிலையில்,''உயர்கல்வித்துறையில் எந்தவித அழுத்தமும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தரப்படவில்லை" என, உயர்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று எழுத்துத் தேர்வு நடந்தது. மொத்தம் 48 பாடப் பிரிவுகளுக்கு 42,064 பேர் தேர்வை எழுதினர்.

கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக ஐந்து பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவை வெளியிட்டது. இதர 43 பாடப் பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள், கடந்த ஜூன் 25 ஆம் தேதி வெளியானது.

"தேர்வு முடிவுகள் வெளியானபோது அதிலேயே பல உண்மைகள் வெளிவந்துவிட்டன" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ்.

ஆசிரியர் தகுதித் தேர்வைப் பொறுத்தவரை 280 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றில் தமிழ்மொழி தேர்வுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படுகிறது.

"தகுதிக்கான அளவுகோலாக உள்ளதால் 50 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை," என்கிறார் தங்கராஜ், "மீதமுள்ள 230 மதிப்பெண்ணில் 150 மதிப்பெண்ணுக்கு பிரதான பாடப்பிரிவில் கொள்குறி வகையில் தேர்வு நடக்கும்," எனக் கூறினார்.

அடுத்து, 50 மதிப்பெண்ணுக்கு பொதுப் பாடப்பிரிவில் கட்டுரை வடிவில் தேர்வு நடக்கும். இதன்பிறகு ஆசிரியர் பணிக்கால அனுபவத்துக்கு 15 மதிப்பெண்ணும் நேர்முகத் தேர்வில் 15 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

'ஒரே நபர்... மூன்றுவிதமான மதிப்பெண்'

"தேர்வு நடத்திய முறையிலேயே குளறுபடிகள் நடந்தன. ஒரு தேர்வரின் பெயருக்குப் பதிலாக அவரது விண்ணப்ப எண் இடம்பெற்றுள்ளது. தேர்வறையில் இதனைச் சோதிக்காமல் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து வாங்கியுள்ளனர்," என்கிறார் தங்கராஜ்.

"அவரின் ஹால் டிக்கெட்டிலும் விண்ணப்ப எண் மட்டுமே உள்ளது. ஆனால், அந்தத் தேர்வரின் விடைத்தாள்களைத் திருத்தியுள்ளனர். தற்போது வரையில் அவர் பெயருக்குப் பதிலாக விண்ணப்ப எண் மட்டுமே உள்ளது. அவர் எப்படி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்வு முடிவுகளில் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணத்தில் தேர்வான நபர்களைக் கோடிட்டுக் காட்டும் வகையில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.

இதனை பிபிசி தமிழிடம் பகிர்ந்த தங்கராஜ், "ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றோம். அதில் ஒருவரின் விடைத்தாளை அவர் எங்களுக்குக் காண்பித்தார்." என்கிறார்.

"50 மதிப்பெண்ணுக்கான கட்டுரையில் அவர் 24 மதிப்பெண் பெற்றிருந்தார். இரண்டாவதாக அதே தாளை வேறொருவர் மதிப்பீடு செய்தபோது 11 மதிப்பெண் பெற்றுள்ளார். மூன்றாவது மதிப்பீட்டில் அவர் 9 மதிப்பெண் மட்டும் பெற்றுள்ளார்," என்கிறார் தங்கராஜ்.

"அப்படியானால் இந்தத் தேர்வு முறை தவறு என்று தானே பார்க்க முடியும்" எனக் கேள்வி எழுப்பிய அவர், "ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மதிப்பீட்டு முறையைப் பற்றி அதன் உயர் அதிகாரி எங்களுக்கு காண்பித்த தாளில் இந்தத் தவறைக் கண்டறிய முடிந்தது," எனக் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் தேர்வு நடந்த பிறகு அதற்கான விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படவில்லை.

இதனைக் குறிப்பிட்டுப் பேசும் தங்கராஜ், "அப்படியானால் எந்த அடிப்படையில் மதிப்பெண் போடப்பட்டது எனக் கேள்வியெழுப்பினோம். அதற்கு வாரியத்தில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை" என்கிறார்.

'பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற முனைவர்கள்'

உதவிப் பேராசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரை முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். "தேர்வு எழுதிய பலருக்கு பொது பாடத்திற்கான கட்டுரை பிரிவில் பூஜ்ஜிய மதிப்பெண்ணை அளித்துள்ளனர். தமிழ்ப் பாடத்தில் மட்டும் சுமார் 600 பேருக்கு மேல் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்றுள்ளனர்" என்கிறார், தங்கராஜ்.

"பலரும் தற்போது கௌரவ விரிவுரையாளர்களாகவும் தனியார் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகவும் பணிபுரிவதால் பூஜ்ஜிய மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் எடுத்துக் கூறினோம்," எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதில் ஒரு தேர்வரின் விடைத்தாளை ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தங்களிடம் காட்டியதாகக் கூறும் அவர், " அந்த விடைத்தாளை இரண்டு பேர் மதிப்பீடு செய்து பூஜ்ஜியம் போட்டுள்ளனர்." என்கிறார்.

ஆனால், அந்தத் தாளில் தேர்வர் விடையை எழுதியுள்ளதாகக் கூறும் அவர், " சூரிய ஆற்றல் குறித்தும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்தும் அவர் எழுதியுள்ளார். ஆனால், பூஜ்ஜியம் எனப் போட்டுள்ளனர். இதன்மூலம் மெத்தனமாக திருத்தியுள்ளதாக அறிகிறோம்." எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலரும் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வை எழுதியுள்ளனர்.

'ஏமாற்றத்தையே அளித்தன'

"தேர்வு முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தன" என்கிறார், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வரும் பன்னீர்செல்வம்.

"வணிகவியல் துறையில் 11 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். இதர ஆசிரியர் பணி அனுபவத்தையும் சேர்த்தால் 18 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன்," என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

மதிப்பெண் குளறுபடிகள் தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம், கல்லூரி கல்வி இயக்குநர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்குக் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'மதிப்பெண்ணே சான்று' - திருமாவளவன் விமர்சனம்

இந்த விவகாரம் அரசியல்ரீதியாகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வுகளில் முதல் தாளில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவர், இரண்டாம் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றுள்ளார்' எனக் கூறியுள்ளார்.

'முதல் தாளில் 150 மதிப்பெண்ணுக்கு 54 மதிப்பெண் பெற்ற ஒருவர் இரண்டாம் தாளில் 98 சதவீத மதிப்பெண் பெறுவது சாத்தியமற்ற ஒன்று' என அவர் விமர்சித்துள்ளார்.

மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள நீல, மஞ்சள் வண்ண குறியீடுகள் குறித்துப் பேசியுள்ள அன்புமணி ராமதாஸ், 'சாதகமாகவோ, பாதகமாகவோ மதிப்பெண்ணில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன' என்கிறார்.

இதே கருத்தை முன்வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 'உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்ணே சான்றாக உள்ளன' எனக் கூறியுள்ளார்.

முனைவர் பட்டம் பெற்றவர்கள் பூஜ்ஜியம் பெறும் நிலையில் தேர்வு எழுதியிருப்பார் என்பது நம்பக் கூடிய ஒன்றாக இல்லை எனக் கூறியுள்ள திருமாவளவன், 'தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது' என்கிறார்.

'இது திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. இதனால் தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கானோரின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்' எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

பணி நியமன உத்தரவில் அவசரம் ஏன்?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இவர்களில் ஐந்து பாடப்பிரிவுகளில் தேர்வான ஐந்து பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

"நான்கு மாதங்களாக அவர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். தேர்வு முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்னரே ஏன் அவசர கதியில் ஆணைகளை வழங்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார் தங்கராஜ்.

"தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பணி நியமனங்களை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மேற்கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருந்ததால் கடந்த மார்ச் மாதம் ஆணைகளை வழங்கியுள்ளனர்," என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும்போது, "பணி நியமன ஆணைகளை வழங்கியது தொடர்பாக உயர்கல்வித் துறையில் என்ன நடந்தது என்பது குறித்து த.வெ.க அரசு உரிய விசாரணையை நடத்த வேண்டும்" என்கிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் கோவி.செழியன்.

'எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை' - கோவி.செழியன்

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " பல ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்துவது எனக் கடந்த ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது." என்கிறார்.

"ஆசிரியர் தேர்வு வாரியம் தன்னிச்சையாக செயல்படுகிறது. வாரியத்துக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. மதிப்பெண் வழங்கப்பட்ட முறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தான் விளக்கம் அளிக்க வேண்டும்," என்கிறார் கோவி.செழியன்.

ஐந்து பாடப்பிரிவுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் உதவிப் பேராசிரியர்களை நியமித்தது குறித்து பதில் அளித்த கோவி.செழியன், "சில இடங்களில் முறைகேடு நடந்திருந்தால் அதை சரிசெய்யுமாறு கூறலாம்" எனத் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஜெயந்தியிடம் பேசும் முயற்சிகள் பலன் அளிக்காததால் வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சேதுராம வர்மாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "சேர்மன் அல்லது செயலாளர் மட்டுமே இதுகுறித்து விளக்கம் அளிப்பார்கள். மேலதிக கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது" என்று மட்டும் தெரிவித்தார்.

அமைச்சர் கூறியது என்ன?

உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் கூறும் குற்றச்சாட்டு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புதன்கிழமையன்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உதவிப் பேராசிரியர் தேர்வு மூன்று மூன்று வகைகளில் நடத்தப்படுகிறது. இதில், விளக்கக் கட்டுரை தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் போடப்பட்டதாகப் புகார் வந்தது" எனக் கூறியுள்ளார்.

முனைவர் பட்டம், நெட் தேர்வு போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எப்படி பூஜ்ஜிய மதிப்பெண் பெற முடியும் என்ற கேள்விகளை தேர்வர்கள் முன்வைத்ததாகக் கூறிய அவர், "இதுதொடர்பாக நேற்று (ஜூன் 30) ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கூட்டம் ஒன்று நடந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், உயர்கல்வித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்ததாகக் கூறிய விஸ்வநாதன், "புகார் தொடர்பாக இன்று அல்லது நாளை எனக்கு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்" என்கிறார்.

"அறிக்கையைப் பொறுத்து முடிவெடுப்போம்" எனக் கூறியுள்ள அவர், "இதுதொடர்பாக நிபுணர் குழு அமைக்கலாமா என்பதைப் பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்யும்" எனக் கூறியுள்ளார்.

வரும் ஜூலை 4 ஆம் தேதி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

விடைத்தாள் பாதுகாப்பு மையங்களில் இரட்டைப் பூட்டு வசதி, சி.சி.டி.வி கண்காணிப்பு, தடையற்ற மின்சார வசதி, காவல்துறை பாதுகாப்பு ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

'தேர்வு செயல்முறை முழுவதும் ரகசியத்தன்மையும் நேர்மையையும் பின்பற்ற வேண்டும் என்றும் முறைகேடுகள் இல்லாத நியாயமான தேர்வை உறுதி செய்ய வேண்டும்' எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு