You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 6 நாட்கள் சிக்கியிருந்த குழந்தை மீட்பு - வெனிசுவேலா மீட்புப்பணிகளின் நிலவரம்
- எழுதியவர், கெய்ட்லின் டோஹெர்டி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
வெனிசுவேலாவில் பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கங்களுக்கு, ஆறு நாட்களுக்குப் பின் இடிபாடுகளிலிருந்து மூன்று வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
கிளீபர் மோரான் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, லா குவைரா மாநிலத்தில் உள்ள இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாக இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். ரோட்ரிக்ஸ் அந்த குழந்தையின் மீட்பை "நமது மக்களுக்கு நம்பிக்கையின் ஆதாரம்" என்று விவரித்தார்.
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவசரமாக உணவும் தங்குமிடமும் தேவைப்படுவதாக ஐநா எச்சரித்துள்ள நிலையில் இது நடந்துள்ளது.
கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 அளவிலான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 10,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, இந்த அதிர்வுகள் அநேகமாக 58,870 கட்டடங்களை சேதப்படுத்தியிருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம்.
கிளீபருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், முக்கிய உடல்நலக் குறியீடுகள் நன்றாக இருப்பதாகவும் ஜோர்டான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. அவர் தலைநகர் கராகஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெனிசுவேலா நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிருடன் கண்டறியப்படுவதற்கான சிறந்த வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய ஆரம்ப மூன்று நாள் காலத்திற்குப் பிறகு இந்த மீட்பு நடவடிக்கை நடந்துள்ளது.
லா குவைரா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், அங்குள்ள உள்ளூர் மக்கள் பலரே மீட்புப் பணிகளைத் தாங்களாகவே மேற்கொள்ள முயன்று வருகின்றனர்.
லா குவைராவில் உணவுத் தட்டுப்பாடு பரவலாக இருப்பதாகவும், அடிப்படைச் சேவைகள் முடங்கியுள்ளதாகவும், தகவல்தொடர்புகள் பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநாவின் அகதிகள் முகமை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
"உதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால் சமூகப் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன," என்று யுஎன்ஹெச்சிஆர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து காயமடைந்த லா குவைராவைச் சேர்ந்த 18 வயது வியாபாரியான டேனியலா அர்மாஸ் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், சில பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன, "ஆனால் சில நேரங்களில் உணவிற்காக மக்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் நிலைக்குச் செல்கிறார்கள்... இது ஒரு சேவற்சண்டையைப் போல இருக்கிறது." என்றார்.
"நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 30,000 மக்களுக்கு ஆறு மாத காலத்திற்குப் பாதுகாப்பு, முக்கிய நிவாரணப் பொருட்கள் மற்றும் தற்காலிக தங்குமிட உதவியை விரிவுபடுத்துவதற்கு" ஆரம்பகட்டமாக 15 மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக யுஎன்ஹெச்சிஆர் கூறியுள்ளது.
இதற்கிடையில், சுகாதார சேவைகள் "தீவிர அழுத்தத்தில்" இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
குறைந்த தடுப்பூசி பரவல் காரணமாக தட்டம்மை மற்றும் டிஃப்தீரியா போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்கள் பரவும் அபாயம் இப்போது அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் கூறினார்.
கிளீபரின் மீட்பு நடவடிக்கை, மக்கள் உயிருடன் தொடர்ந்து கண்டறியப்படுவதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும், உள்நாட்டு மற்றும் சர்வதேச குழுக்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் தேடி வருகின்றன என்றும் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் கூறினார். லா குவைரா மற்றும் பிற மாநிலங்களில் தங்குமிடங்கள் ஏற்கெகனவே திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பல டஜன் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுக்கள் பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் கனரக உபகரணங்களுடன் உயிர் பிழைத்தவர்களைத் தேடினர்.
சில சர்வதேச உதவிகள் நாட்டிற்கு வந்தடைந்து கொண்டிருக்கின்றன. அவசரகால மருத்துவ உதவிக்கான சுகாதாரக் கருவிகள், பாதுகாப்பான பிரசவங்களுக்கான பொருட்கள், பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு மற்றும் நோய் தடுப்புப் பொருட்கள் உள்ளிட்ட 47 டன் மனிதாபிமான பொருட்கள் செவ்வாய்க்கிழமை வந்தடைந்ததாக ஐநா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் வெனிசுவேலா மக்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்ட இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். இன்னும் பலர் இறந்துவிட்டதாகக் கருதப்படும் தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.
லா குவைரா துறைமுகத்தில் உள்ள தற்காலிகப் பிணவறையில், வில்கர் மொலல்லா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தனது சகோதரி, அவளது குழந்தைகள் மற்றும் தனது சகோதரனின் குழந்தைகளின் உடல்களை அடையாளம் காணக் காத்திருப்பதாகக் கூறினார்.
"எனது வீட்டில் 11 பேர் இருந்தனர்," என்று அவர் கூறினார். "நாங்கள் வேலைக்குச் சென்றிருந்ததால் எங்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தோம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு