வக்ஃப் சட்டத்திருத்த மசோதா கூறுவது என்ன? எதிர்ப்பு ஏன்?
நடந்துமுடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் திருத்த மசோதா 2024-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறார். தற்போது அமலில் இருக்கும் வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்கள் மேற்கொள்ள இந்த மசோதாவில் பரிந்துறைக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரின் விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலும், சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வழி செய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மறுபுறம், எதிர்க்கட்சி கூட்டணி, இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த மசோதா பரிசோதனைக்காக நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் வலுப்பது ஏன்? அந்த மசோதா கூறுவது என்ன? மசோதாவின் சாதக பாதகங்கள் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?
‘வக்ஃப்’ என்பது இஸ்லாத்தை நம்பும் எந்தவொரு நபரும் மத நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடை அளிக்கும் அசையும் அல்லது அசையாச் சொத்து ஆகும்.
நாடு முழுவதும் வக்ஃப் வாரியத்தின் கீழ் 8 லட்சத்து 72 ஆயிரம் கோடி அசைய சொத்துக்கள் உள்ளன. மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 3.56 லட்சம் எஸ்டேட்களும் உள்ளன. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிக சொத்துக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வக்ஃப் வாரியம்தான்.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தப் பொறுப்பு கலெக்டர் அல்லது துணை ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தில், யாரும் எந்த அசையும் அல்லது அசையா சொத்தையும் நன்கொடையாக அளிக்கலாம் என்று உள்ளது. திருத்தப்பட்ட மசோதாவில், இஸ்லாத்தை குறைந்தது 5 ஆண்டுகள் பின்பற்றும் நபர்கள்தான் நன்கொடை வழங்க முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய சொத்தின் மீது அவருக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
எந்தவொரு நபரும் சொத்தின் சட்டப்பூர்வ உரிமையாளராக இல்லாவிட்டாலோ அல்லது சொத்தை அர்ப்பணிக்க, மாற்ற தகுதி உடையவராக இல்லாவிட்டாலோ வக்ஃப் வழங்க முடியாது என்றும் திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தங்களின் கீழ், போஹ்ரா (Boharas) மற்றும் அகாஹானி (Aghakhanis) சமூகத்தினருக்கென தனி வக்ஃப் வாரியம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
வக்ஃப் சொத்துக்கான பதிவு மத்திய போர்டல் மற்றும் தரவுத்தளம் மூலம் செய்யப்பட வேண்டும். இந்த போர்ட்டல் மூலம், முத்தவல்லிகள் (Mutawalli) அதாவது வக்ஃப் சொத்தைக் கவனிப்பவர்கள் சொத்துக் கணக்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். இதனுடன், ஆண்டு வருமானம் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள சொத்துக்கு வக்ஃப் வாரியத்திற்கு முத்தவல்லி (Mutawalli) செலுத்த வேண்டிய தொகையும் ஏழு சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு சொத்து வக்ஃப்-க்கு கீழே வருமா இல்லையா என்பதை முடிவு செய்யும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை திரும்பப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய முன்மொழிவின்படி, தற்போதுள்ள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் தீர்ப்பாயமும் இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் இறுதியானதாகக் கருதப்படாது, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
வரம்பு சட்டத்தை (Limitation Act) அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கப் புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது. அதன்படி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், இந்தத் திருத்தத்தின் மூலம் உரிமையாளர்களாக முடியும்.
மேலும் ஒரு முக்கிய திருத்தமும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ வக்ஃப் சொத்தமாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட அரசு சொத்து வக்ஃப் சொத்தாக கருதப்படாது.
அத்தகைய சொத்துக்களில் அரசு சொத்துக்கள் ஏதேனும் உள்ளனவா என கேள்வி எழுந்தால், சொத்து அமைந்துள்ள பகுதியின் அதிகார வரம்பை உடைய கலெக்டருக்கு இந்த விவகாரம் பரிந்துரைக்கப்படும். அவர் விசாரணையை மேற்கொண்டு அந்த சொத்து அரசாங்கச் சொத்தா இல்லையா என்பதை முடிவு செய்து, மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கலெக்டர் அறிக்கையை தாக்கல் செய்யும்வரை அந்த சொத்து வக்ஃப் சொத்தாக கருதப்படாது.
வக்ஃப் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தகங்கள் குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரகுமான், "வக்ஃப் சட்டம் 1995, முழுமையான சட்டமாக இருக்கிறது. அதற்கு சட்டத் திருத்தம் தேவையில்லை. வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்கும் அதிகாரம் உள்ள வக்ஃப் வாரியத்தைப் பலவீனமாக்கக் கூடியதாக, புதிய சட்டத் திருத்தங்கள் அமைந்துள்ளன," என்று தெரிவித்தார்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, முஸ்லிம் செல்வந்தர்கள் கொடுத்த சொத்துகளை பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் ஆரோக்கியமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
"வக்ஃப் சொத்துகளில் முறைகேடு நடந்தால் அதைத் தடுப்பதற்கு வக்ஃப் வாரியமும் வக்ஃப் தீர்ப்பாயமும் உள்ளது. மேல் முறையீடுகளுக்கு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளன. இதில், தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது, அந்தந்த அமைப்புகளின் பொறுப்பு.
முந்தைய சட்டத்தில், வக்ஃப் சொத்துகளை தனிநபர்கள் வளைத்துப் போடுவதற்கு வாய்ப்பில்லை. தற்போது அதற்கான வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தித் தருகிறது. இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது விரைவில் தெரியவரும்," என்றும் மேற்கோள் காட்டினார் ரகுமான்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



