You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரண்டே நாட்களில் 127 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 49 எம்.பிக்கள் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாடாளுமன்ற அவைக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளள எம்பிக்கள் எண்ணக்கை 141 ஆகியுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
டிசமபர் 13-ம் தேதியன்று மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென அவை மேசைகளில் குதித்து தாவினர். அவர்கள் கைகளில் வண்ணப்புகை பீச்சும் கருவிகள் இருந்ததாக சம்பவத்தின் போது அவையில் இருந்த எம்பிக்கள் பின்னர் வெளியே வந்து பேட்டியளித்தனர். அதுமட்டுமின்றி நாடாளுமன்ற வளாகத்தின் வெளியிலும் இருவர் புகை பீச்சும் கருவிகளுடன் கோஷமிட்டனர். இந்த விவகாரத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அனைத்தும் இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான நினைவு நாளில் நடந்தது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள், பிரதமர் மோதி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வந்தனர்.
நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் திங்களன்று மக்களவை மற்றும் மாநிலங்களைவை என இரு அவைகளிலும் சேர்த்து 78 எம்பிக்கள் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்டதாக கூறி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முழுக்க இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் 78 எம்.பிக்கள் இடைநீக்கம் என்பது இந்திய நாடாளுமன்றம் இதுவரை காணாத சம்பவம் என உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.
எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் ஒரு ஜனநாயக படுகொலை என குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை டிசம்பர் 18-ம் தேதி மேலும் 49 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னதாக கடந்த டிசம்பர் 14-ம் தேதி 13 மக்களவை உறுப்பினர்களும், 1 மாநிலங்கவை உறுப்பினரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆகவே கடந்த ஒரு வாரத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை மட்டும் 141-ஐ தொட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு எதிரான இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் எம்.பிக்கள் ஆவர்.
543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் இந்தியா கூட்டணி சார்பில் 142 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 95 பேர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், 250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியின் 101 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 46 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நிறைவடைய உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இவர்கள் பங்கெடுக்க முடியாது. அதுமட்டுமின்றி சுமார் டஜன்கணக்கான எம்பிக்கள் அவையில் பங்கெடுப்பது குறித்து முடிவெடுக்க நாடாளுமன்ற உரிமை குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மேலும் சில காலம் காத்திருக்க நேரிடலாம்.
" துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நாம் இரங்கல் எழுதத் தொடங்க வேண்டும்" என காங்கிரஸ் எம்பி சஷி தரூர் கூறினார்.
ஆனால் நாடாளுமன்ற அவை நடவடிககைகளில் வேண்டுமென்றே குறுக்கீடு செய்யவேண்டுமென எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டுகின்றன.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி குறித்து விவாதிக்க வேண்டும் என தொடர்ச்சியாகவே எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் பிரதமர் நரேந்திர மோதி இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவில்லை. எனினும், ஒரு இந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், நடந்த விஷயம் மிகவும் தீவிரமானது. இதற்கு விவாதம் தேவையில்லை, தீவிர விசாரணை தான் தேவை என தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை. எனினும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்கட்சிகள் இதை அரசியலாக்க முயல்கின்றன என்றும் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரம் பற்றி பேசுகையில், பிரதமர் நாளிதழுக்கு பேட்டியளிக்கலாம், உள்துறை அமைச்சர் தொலைக்காட்சி சேனலக்ளுக்கு பேட்டியளிக்கலாம். ஆனால் நாடு மக்களை பிரதிநித்துவதுப்படுத்தும், நாடாளுமன்றத்துக்கு அவர்களுக்கு பொறுப்புகூற ஒன்றுமில்லை என கூறினார்.
பல முக்கியமான மசோதாக்களை எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்ற, அரசு வேண்டுமென்றே எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்துள்ளதாக கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், எதிர்க்கட்சிகள் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுக்க வேண்டுமென்ற அவை நடவடிக்கைகளில் திட்டமிட்டு குறுக்கீடு செய்ததாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தை அவமதிதாகவும் லோக்சபா, ராஜ்யசபா சபாநாயகர்களின் கோரிக்கைகள் ஏற்க மறுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)