You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிக் பாஸ் 6: யார், யார் காப்பாற்றப்பட்டார்கள்? அஸீம் குறிவைக்கப்பட்டது ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
பிக் பாஸில் கடந்த வாரம் முழுக்க ராஜா - ராணி டாஸ்க் நடந்த நிலையில், டாஸ்க்கில் மோசமாக நடந்துகொண்டதாக எல்லோரும் அஸீமையே குற்றம்சாட்டினார்கள். கமல் என்ன சொன்னார்? சனிக்கிழமையன்று காப்பாற்றப்பட்டது யார்?
பிக் பாஸ் வீட்டில் நடந்த ராஜா - ராணி டாஸ்க் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், வார இறுதிக்காக எல்லோரும் காத்திருந்தனர். "ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க" என்று சொல்லி, வார இறுதியை விறுவிறுப்பாக துவக்கிவைத்தார் கமல்.
பிக் பாஸ் வீட்டில், கடந்த வாரம் முழுக்க ராஜா - ராணி டாஸ்க் நடந்தது. இதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும், தளபதியாக அஸீமும், ராஜ குருவாக விக்ரமனும், இளவரசியாக ஜனனியும் நடித்தனர். மைனாவும் அமுதவாணனும் சேவகர்களாக நடித்தனர்.
கடந்த வார டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்களாக தனலட்சுமி, கதிரவன், மைனா ஆகிய மூவரும் தேர்வுசெய்யப்பட்டனர். மிக மோசமாக பங்களிப்புச் செய்தவர்களாக, ராஜா - ராணி வேடத்தில் நடித்த ராபர்ட் மாஸ்டரும் ரச்சிதாவும் தேர்வுசெய்யப்பட்டனர். இதனால் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
ராஜா - ராணி டாஸ்க் நெடுக, ராணியிடம் சற்று ஓவராகவே நடந்துகொண்டிருந்த ராபர்ட், டாஸ்க்கில் ரச்சிதாவும் அஸீமும் தனக்குத் தெரியாமல் ரகசியம் பேசியதைப் பார்த்து மனதைவிட்டுவிட்டார். இதன் காரணமாக சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்ட போதிலும், அவருக்கு வேதனையே எஞ்சியது.
"ஆசைப்படும்போதெல்லாம் ஒன்னா சேக்கல,.. இப்ப பார்த்தாலே கடுப்பா வருது" என்றார் ராபர்ட் மாஸ்டர். ரச்சிதா என்ன நினைத்தாரோ, இரவில் கேவிக் கேவி அழுதுகொண்டிருந்தார். அவரைச் சமாதானப்படுத்த முயன்றார் ராபர்ட் மாஸ்டர். ரச்சிதா அவரிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. இருந்தாலும் பழசையெல்லாம் மறந்துவிட்டு, தன் பழைய பாணிக்குத் திரும்பினார் ராபர்ட்.
இதற்குப் பிறகு, கடந்த வாரம் நடந்த டாஸ்க் குறித்து விசாரிக்க ஆரம்பித்தார் கமல். டாஸ்க்கில் யார் யாருக்கு எந்த பாத்திரம் என்று முடிவுசெய்யும்போது, அஸீம் தானே தளபதி பாத்திரத்தை எடுத்துக் கொண்டதை குத்திக்காட்டினார்.
பிறகு, செந்தமிழில் பேச வேண்டும் என்பதற்காக ராணியாக வந்த ரச்சிதா, சிறிது நீர் வேண்டும் என்பதை, "சிறுநீர் வேண்டும்" என்று சொன்னதைச் சொல்லி, ஓட்டினார். பிறகு, மோசமாகச் செயல்பட்டவர் யார் என்ற கேள்வி வந்தபோது, விக்ரமும் ஏடிகே உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் அஸீமையே சொன்னார்கள். அதற்குப் பழிவாங்கும் வகையில், விக்ரம் தன் பாத்திரத்திற்குப் பொருந்தாதவகையில் நடந்து கொண்டதாகச் சொல்லி பழிதீர்த்துக் கொண்டார் அஸீம்.
ஆனால், பெரும்பாலானவர்கள், அஸீம் படைத் தளபதியாக செயல்படாமல் தானாகவே வெளிப்பட்டதாக சரியாகவே சுட்டிக்காட்டினார்கள்.
இதற்குப் பிறகு அடுத்த பிரச்னையை எடுத்தார் கமல். அதாவது, வாக்களிப்பு நடக்கும்போது, பலரது வாக்களிப்பை தனலட்சுமி மாற்றியதைக் குறிப்பிட்டார் கமல். குறிப்பாக, விக்ரமன் குயின்சிக்கு வாக்களிக்க இருந்ததைத் தடுத்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். தான் இப்படி, அடுத்தவருக்குக் கிடைக்கும் வாக்குகளைத் தடுத்ததைப் பற்றி துளியும் குற்ற உணர்ச்சி இல்லாமல், கமல் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டுவதை பெரிய குற்றம்போலச் சொல்லி, வழக்கம்போல புலம்பித்தள்ளினார் தனலட்சுமி.
சனிக்கிழமை எபிசோடில் மொத்தமாக பெரும்பாலானவர்கள் அஸீமையே குற்றம்சாட்டிய நிலையில், அதைத் தன் மீதான தனிப்பட்ட தாக்குதலாக முன்னிறுத்தினார் அஸீம். நடுநடுவில் விக்ரமையும் டார்கெட் செய்ய அவர் தவறவில்லை.
யார் என்ன தவறாகச் செய்தாலும் அதை அரசியல் சரித்தன்மையோடு கண்டிக்கும் விக்ரமன், ஏடிகே 'ரோமம்' என்று திட்டிதைக் கண்டிக்கவில்லை என்றார் கமல். அவர் அப்படிச் சொன்ன பிறகுதான் இதுபோல நடந்திருப்பதே பார்வையாளர்களுக்குத் தெரியவந்தது.
காரணம், அது மோசமான வசவுச் சொல்லாக இருந்ததால், விஜய் டிவியே அதை ஒளிபரப்பவில்லை. அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டார் ஏடிகே. குழந்தைகள் நிறையப் பேர் பிக் பாஸைப் பார்ப்பதால்,வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்தும்படி அறிவுறுத்திவிட்டு சனிக்கிழமை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார் கமல்.
இந்த எபிசோடில், கதிரவன், குயின்சி, ஆயிஷா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நிகழ்ச்சியின் முடிவில் கேமரா முன்பாக வந்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் அஸீம். அதோடு சனிக்கிழமை நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்