இரான்: மீண்டும் தலைதூக்கும் ஹிஜாப் பிரச்னை? என்ன நடக்கிறது?
இரானின் தெஹ்ரானில் ஒரு பெண்ணை அறநெறிக் காவலர்கள் தாக்கியதாகவும், அவ்வழியே சென்றவர்கள் இதுகுறித்து காவலர்களிடம் வாக்குவாதம் செய்வது போலவும் ஒரு காணொளி வெளியானது.
மற்றொரு காணொளியில் இரானின் தலைநகரம் முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரு காணொளிகளையும் பிபிசி உறுதி செய்துள்ளது. சிரியாவில் உள்ள இரானிய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் இரானின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் மீது 300 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவியது இரான்.
இதற்குப் பதிலடியாக ஒரு இஸ்ரேலிய ஏவுகணை இரானை தாக்கியது என அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், ANONYMOUS / MIDDLE EAST IMAGES / MIDDLE EAST IMAGE
இந்தப் போர் பதற்றத்தின் காரணமாக, இரானில் புதிதாக எந்தப் போராட்டமும் உருவாகக்கூடாது என்பதற்காகவே குடிமக்கள் மீது அரசு பல கட்டுப்பாடுகள் விதிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
“எல்லோரும் ஹிஜாப் விதியைப் பின்பற்ற வேண்டும், இந்த விஷயத்தில் அரசும் நீதித்துறையும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்,” என்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் இரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமனெயி பேசியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மஹ்சா அமினியின் மரணத்தால் (ஹிஜாப் அணிவதற்கு எதிராகப் போராடிய இரான் பெண்), பல பெண்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அத்தகைய சாத்தியமான மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்போதைய அரசு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



