இந்தியா- ஆஸ்திரேலியா: டிராவை நோக்கி செல்கிறதா 4வது டெஸ்ட்?
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் முதல் மூன்று நாட்களில் முடிவுக்கு வந்த நிலையில், இந்த ஆட்டம் 4வது நாளுக்கு சென்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் இறுதியில் இந்தியா 36 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. ரோஹித் ஷர்மா 17 ரன்களையும் சுப்மன் கில் 18 ரன்களையும் எடுத்திருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கி மூன்றாவது ஓவரில் இந்த நாளுக்கான முதல் பவுண்டரியை ஷுப்மன் கில் அடித்தார். ரோஹித் ஷர்மா 35 ரன்கள் எடுத்திருந்தபோது, மேத்யூ குன்னேமன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்டான பிறகு இந்திய அணியின் பேட்டிங்கில் எந்தவித தடுமாற்றமும் இல்லை என்பதை சுப்மன் கில், புஜாரா கூட்டணி உறுதி செய்தது. ஆஸி அணிக்கு சவாலாக அவர்களுடைய பேட்டிங் இருந்தது.
மதிய இடைவேளைக்குப் பிறகு 221 பந்துகளில் சுப்மன் கில், புஜாரா கூட்டணி 100 ரன்களைக் கடந்திருந்தது. சுப்மன் கில் 194 பந்துகளில் 100 ரன்களை கடந்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். புஜாரா 121 பந்துகளில் 42 ரன்களை எடுத்து வெளியேறியதைத் தொடர்ந்து விராத் கோலி களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 245 ஆக இருந்தபோது எல்பிடபிள்யு முறையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 128 ரன்களை எடுத்திருந்தார்.
கில்லை தொடர்ந்து ரவிந்திர ஜடேஜா களமிறங்கினார். 3வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவை விட 191 ரன்கள் பின்தங்கியுள்ளது. விராத் கோலி 59 ரன்களுடனும் ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



