சுமார் 1500 கடைகள் சூறை: மாணவர் போராட்டத்தில் வன்முறையால் கலக்கம் - பிரான்சில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Pool/AFP via GettyImages
- எழுதியவர், கட்டியா அட்லர்
- பதவி, ஐரோப்பியப் பிரிவு ஆசிரியர், பாரிஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பிரான்ஸில் வார இறுதியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள், நவீன கால பிரான்ஸ் வரலாற்றில் காணப்பட்ட மிகக் கடுமையான பொது ஒழுங்கு சீர்குலைவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
உள்துறை அமைச்சர் லோரான் நூனேஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முயன்றதாக பிரெஞ்சு அதிபர் மக்ரோங்கின் அதிகாரப்பூர்வ அலுவலகமான எலிசே மாளிகை திங்கள்கிழமை காலை அறிவித்தது. ஆனால், அதற்குப் பதிலாக, பிரான்ஸ் வீதிகளை எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றுவது என்பதையும், வார இறுதியில் நிகழ்ந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்களை எவ்வாறு நீதியின் முன் நிறுத்துவது என்பதையும் ஆராயுமாறு அவரிடம் மக்ரோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தரமான அரசுப் பள்ளிக் கல்வி உள்ளிட்ட அத்தியாவசியப் பொதுச் சேவைகள் கிடைப்பது குறைந்து வருவதைக் கண்டித்து, சனிக்கிழமை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெரும்பாலும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், கருப்பு உடை அணிந்து முகமூடி அணிந்த சில தீவிரச் செயற்பாட்டாளர்களும், நாசவேலையில் ஈடுபட்டவர்களும் போராட்டக் களங்களில் நுழைந்ததைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்தது.
சுமார் 1,500 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கலவரத் தடுப்புக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், கூட்டத்தினர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
பல இடங்களில் அவர்கள் தடியடியில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. சனிக்கிழமை சுமார் 1,000 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அவர்களில் ஏழு பேர் படுகாயமடைந்ததாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சனிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்வதற்கு முன்பாக, போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்றும், போதுமான காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்தவில்லை என்றும் உள்துறை அமைச்சர் நூனேஸ் மீது எதிர்க்கட்சிகள், சில தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பட மூலாதாரம், Thibaud MORITZ / AFP via Getty Images
'ஒளி நகரத்தில் இருள் சூழ்ந்துள்ளது'
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையான தேசிய அவையின் தலைவர் யாயெல் பிரான்-பிவே, உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக ஆராய விசாரணை ஒன்றைத் தொடங்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமடைந்த கடைகளின் வரிசைக்கு அருகிலிருந்த சுவரில் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை கண்டேன். "ஒளி நகரத்தில் இருள் சூழ்ந்துள்ளது" என்பதே அந்த வாசகம். 'ஒளி நகரம்' என்பது பாரிஸின் புனைப்பெயர்.
பிரான்ஸின் சில பகுதிகளில் அதிபர் மக்ரோங் தற்காலிக ஊரடங்கை அறிவிக்கக்கூடும் அல்லது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அவசரநிலையைப் பிரகடனப்படுத்தக்கூடும் என்ற வதந்திகள் அந்நாட்டில் பரவியிருந்தன.
இறுதியில், ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய மக்ரோங், தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரான்ஸ் மக்களுக்கு உறுதியளிக்க முயன்றார்.
ஆனால், அவரது உரையில் உறுதியான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இல்லை என்று பிரெஞ்சு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.
நாசவேலைகளிலும் கலவரத்திலும் ஈடுபட்டவர்கள் எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்?
இன்னும் இரண்டு வாரங்களில் புதிய பொதுப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸின் நகரங்களையும் சிற்றூர்களையும் எவ்வாறு சிறப்பாகப் பாதுகாக்க முடியும்?
சேதமடைந்த வணிக நிறுவனங்களுக்கு எப்படி இழப்பீடு வழங்கப்படும்?
கல்வி தொடர்பாக மாணவர் அமைப்புகள் மற்றும் ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கப்படும்? கடந்த மாதம் இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதற்கான முக்கிய காரணமும் இதுவே ஆகும்.

பட மூலாதாரம், AFP via Getty Images
ஞாயிற்றுக்கிழமை, சிஜிடி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சோஃபி பினே, மாணவர்களின் கவலைகள், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் பிரான்ஸில் பொதுச் சேவைகளின் தரம் குறைந்து வருவது ஆகியவற்றுக்கு மக்ரோங் உரிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அந்தப் பொறுப்பை மக்ரோங் பிரதமர் லெகோர்னுவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. பிரான்ஸில் மக்ரோங் தற்போது செல்வாக்கு இழந்துவரும் அதிபராகப் பார்க்கப்படுகிறார். அவரது பதவிக்காலம் முடிவடையவுள்ளது.
இன்னும் ஆறு மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக யார் வருவது என்ற போட்டி தீவிரமடைந்துள்ளது.
குடியேற்றத்துக்கு எதிரான தேசியவாத வலதுசாரித் தலைவர் மரீன் லு பென் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு இடதுசாரித் தலைவர் ஜீன்-லூக் மெலன்ஷோன் ஆகியோர் ஊடகங்களில் கவனம் ஈர்க்கப் போட்டியிடுகின்றனர்.
இது பிரான்ஸில் அரசியல் களத்திலும் வீதிகளிலும் நிலவும் தற்போதைய பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.
ஒன்றோடொன்று போட்டியிடும் மூன்று முக்கிய அரசியல் அணிகளுக்கிடையேயான ஆழமான பிளவால் பிரான்ஸ் நாடாளுமன்றம் தற்போது முடங்கியுள்ளது.
இதற்கிடையே, பிரான்ஸ் கடுமையான நிதி நெருக்கடியையும் எதிர்கொள்கிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பொதுக் கடனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முதலீட்டாளர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், பொதுச் சேவைகளுக்கான செலவுகளையோ சமூக நலத் திட்டங்களுக்கான நிதியையோ குறைத்தால், மேலும் பலர் கோபத்துடன் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள் என்று பிரெஞ்சு அரசு கவலைப்படுகிறது.
'இனி என்ன நடக்கும்? அடுத்து என்ன? நமது நாடு சீர்குலைந்துவிட்டதா?' என்ற கேள்விகளை இப்போது அடிக்கடி கேட்க முடிகிறது.
சனிக்கிழமை நடந்த சம்பவங்கள் பிரான்ஸ் முழுவதும் மக்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தின. கண்ணீர்ப்புகையால் சூழப்பட்ட நகரங்கள், தடுக்கப்படாமல் நடந்ததாகத் தோன்றிய கொள்ளைகள், தீக்கிரையான பொதுக் கட்டடங்கள் ஆகியவற்றின் காட்சிகள் நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம், Remon Haazen/Getty Images
மக்கள் கூறுவது என்ன?
நான் பேசிய பல வழிப்போக்கர்கள், எதிர்காலம் குறித்து தாங்கள் கவலைப்படும் நிலையில், நாட்டின் முன்னணி அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதிலேயே தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக விரக்தி தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையற்ற சூழலுக்கு ஒருவர் மற்றவரைக் குற்றம்சாட்டுவதிலேயே அவர்கள் கவனம் செலுத்துவதாக மக்கள் கருதுகின்றனர்.
"எங்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். ஆனால், அவர்கள் இந்தச் சூழலை அடுத்த அதிபர் தேர்தலுக்கான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்" என்று மூன்று குழந்தைகளின் தந்தையும் ஆசிரியருமான எட்வார்ட் என்னிடம் கூறினார்.
சனிக்கிழமை ஏற்பட்ட வன்முறைக் குழப்பங்களுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களும், சமூக விரோதிகளுமே காரணம் என மக்ரோங்கும் பிரதமரும் குற்றம்சாட்டினர்.
தீவிர இடதுசாரித் தலைவர் ஜீன்-லூக் மெலன்ஷோன், அரசின் "திறமையின்மை"தான் இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் தேசியவாத வலதுசாரித் தலைவர் மரீன் லு பென், பிரெஞ்சுக் கொடியின் முன் அமர்ந்து அதிபர் உரையைப் போன்ற பாணியில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அதில், "மக்ரோங் நிர்வாகம் வலுவிழந்து, சோர்வடைந்து, திசை தெரியாமல் உள்ளது" என்று அவர் குற்றம்சாட்டினார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிலைமை ஓரளவு தணியும் என்று பிரெஞ்சு அதிகாரிகள் நம்புகின்றனர். திங்கள்கிழமை முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.
ஆனால், நவம்பர் 5-ஆம் தேதி பல்வேறு தொழிற்சங்கங்களும், 2018-ஆம் ஆண்டு மக்ரோங்கின் முதல் பதவிக்காலத்தில் ஓராண்டுக்கும் மேலாகப் போராட்டங்களை நடத்திய, பல்வேறு பிரிவுகளைக் கொண்ட 'மஞ்சள் சட்டை' இயக்கமும் இணைந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
பிரான்ஸ் இப்போது மூச்சைப் பிடித்தபடி அடுத்த நிகழ்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























