தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய சாவுகள்: என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு
தமிழ்நாட்டின் இருவேறு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மரக்காணத்தில் மட்டும் 79 பேர் இந்தச் சாராயத்தை குடித்துள்ளனர். வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் இதுபோன்ற மரணங்கள் நேர்ந்தது எப்படி?
மரக்காணம் எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் ஒரு மீனவர். மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். மே 13ஆம் தேதி காலையில் 11 மணிவாக்கில் வெளியில் போய்விட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற சுரேஷ், சில மணி நேரத்திற்குப் பிறகு குடித்துவிட்டு வீடு திரும்பினார். உடனே படுத்து உறங்கவும் ஆரம்பித்தார். இது அவருடைய வழக்கம்தான் என்பதால் வீட்டினர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் வயிற்று வலி தாங்காமல் தான் படுத்திருந்த அறை முழுக்க உருள ஆரம்பித்தார் சுரேஷ். வாந்தியும் எடுக்க ஆரம்பித்தார்.
இரவில் சாப்பிடாமல் படுத்ததால், இப்படியாகியிருக்கலாம் என நினைத்த குடும்பத்தினர் அவருக்கு சாப்பாடு கொடுத்தனர். அவரால் அதைச் சாப்பிட முடியவில்லை. சிறிது நேரத்தில் உடல் முழுக்க எரிவதாகக் கூறினார். இதையடுத்து வீட்டினர் அவரை குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தனர். அப்போதும் எரிச்சல் தீரவில்லை. பிறகு கண்கள் சிவக்க ஆரம்பித்,து மூச்சுத் திணற ஆரம்பித்தது.
அப்போதுதான் குடும்பத்தினருக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கே இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறப்பட்டதால் புதுச்சேரியில் இருந்த புதுச்சேரி இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சிற்கும் கொண்டுசெல்லும்படி கூறப்பட்டது. ஆம்புலன்ஸ் உடனடியாகக் கிடைக்காததால் காரில் அவரை ஏற்றிச் சென்றனர். அங்கு சென்ற சில மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



