கோவை 'மைவி3 ஆட்ஸ்' நிறுவனர் சக்தி ஆனந்தன், மண்டல இயக்குநர்கள் 5 பேர் கைது ஏன்?

காணொளிக் குறிப்பு, கோவை மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன், மண்டல இயக்குநர்கள் 5 பேர் கைது ஏன்?
கோவை 'மைவி3 ஆட்ஸ்' நிறுவனர் சக்தி ஆனந்தன், மண்டல இயக்குநர்கள் 5 பேர் கைது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனத்தை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். யூடியூப் தளத்தில் இந்நிறுவனம் சார்பில் சேனல் ஒன்றும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணிநேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களைச் சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராகச் சேர முடியும் எனவும், தினசரி யூ டியூபில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் அந்நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.

செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால் தனியாக கமிஷன் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கான ரூபாயை அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இதனிடையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில், தங்கள் நிறுவனம் குறித்து அவதூறாகப் பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மை வி3 நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றனர்.

காவல் ஆணையரைச் சந்தித்து மனு அளித்த பிறகே கலைந்து செல்வோம் என்று கூறி சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சக்தி ஆனந்தன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். தனது ஆதரவாளர்களுடன் சக்தி ஆனந்தன் பேச முயன்றபோது காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அரசு ஊழியர் கடமையை செய்ய வரும்போது,அவரை தாக்க வேண்டும் அல்லது தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது, பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டும் வகையில் நடந்து கொண்டது ஆகிய இரு பிரிவுகளில் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மைவி3 ஆட்ஸ் நிறுவனர் கைது

நீதிமன்ற உத்தரவின் பேரில் சக்தி ஆனந்தன் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 180 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம், மைவி3 ஆட்ஸ் முதலீட்டாளர்கள், யார் வேண்டுமானாலும், தனியாக வந்து புகார் அளிக்கலாம். கூட்டம் சேர்த்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது. மாநகரத்தில் கூட்டம் சேரும் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்," என்றார்.

சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 5 பேர், மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தனை விடுவிக்குமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். மைவி3 ஆட்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் மண்டல இயக்குநர்களாக இருந்தவர்கள் ஆவர்.

அவர்கள் ஐவர் மீது்ம இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 353 மற்றும் 505 (1) (பி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)