காணொளி: அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் தொடர்பாக எழும் கவலைகள் என்ன?
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையிலான மோதல் தணிவதற்கான அறிகுறிகள் தெரியாத நிலையில், கடந்த வாரம் அமெரிக்கா, இரான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா, இரான் பதற்றத்தில் சிக்கியுள்ள வளைகுடா அரபு நாடுகள், நிலைமையை கவலையுடன் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
ஒருவேளை மீண்டும் பதற்றம் அதிகரித்தால், இந்த நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.
ஏனெனில் இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளையும் இரான் இலக்கு வைத்தது.
இரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், எண்ணெய் வளம் மிக்க இந்த நாடுகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பிம்பத்துக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
லெபனான் சுகாதார அமைச்சக தகவலின்படி, ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்துக்குள் அங்கு நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். அதே போல, இந்த தாக்குதல்களில் தங்கள் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
இரான், அமெரிக்கா இடையே எட்டப்பட்ட ஒப்பந்தபடி, லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் மோதல் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
லெபனானை தளமாகக் கொண்டு செயல்படும் ஹெஸ்பொலா குழு, நீண்ட காலமாகவே இரானின் முக்கிய கூட்டாளியாக கருதப்படுகிறது. லெபனானில் புதிய போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இது போன்ற ஒப்பந்தங்கள் பெரும்பாலும் தற்காலிகமானவை மற்றும் எளிதில் முறியக் கூடியவையாகவே இருந்துள்ளன.
இது பற்றி கூறும் கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் ஜுனோ, "லெபனான் மற்றும் இரான் ஆகிய இரு இடங்களிலும் மோதல் முற்றிலும் நின்றுவிடும் என்பதற்கான யதார்த்தமான சூழல் எதுவும் இருக்கவில்லை. லெபனானில் சில காலத்துக்கு மோதல் அதிகரிப்பது என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்றுதான். வளைகுடா பகுதியிலும் இதேநிலை ஏற்படக்கூடும்" என்கிறார்.
அதே நேரம், வளைகுடா பிராந்தியத்தின் பல நகரங்களில் உள்ள மக்களிடம் நாங்கள் பேசியபோது, அவர்களுக்கு நம்பிக்கையும் சந்தேகமும் கலந்தே உள்ளன. இந்த ஒப்பந்தம் நீண்டகால அமைதிக்கான தொடக்கமாக அமையலாம் என சிலர் கருதினாலும், சிலர் இதன் வெற்றியை நம்ப தயாராக இல்லை.
சரி, இந்த ஒப்பந்தம் வெற்றிபெற வேண்டும் என வளைகுடா நாடுகள் விரும்புவது ஏன்?
அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் வெற்றியடைய வேண்டும் என வளைகுடா நாடுகள் விரும்ப காரணம் தங்கள் எண்ணெய் ஏற்றுமதியை எந்தவித தடையுமின்றி உலக நாடுகளுக்கு அனுப்ப அவை விரும்புகின்றன. இதற்கு ஹோர்மூஸ் நீரிணை மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளின் எண்ணெய் சர்வதேச சந்தைகளை சென்றடைகிறது. போர் தொடங்கியதில் இருந்து, இந்த வழியை இரான் கிட்டத்தட்ட முழுமையாக மூடியிருந்தது.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கப்பல் போக்குவரத்து படிப்படியாக மீண்டும் தொடங்கியது. செளதி அரேபியாவின் எண்ணெய் டாங்கர்களும் இந்த வழித்தடம் வழியே பயணித்தன. ஆனால், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்த நிலையில், ஹோர்மூஸை மூடுவதாக இரான் அறிவித்தது.
இது பற்றி கூறும் ஜோர்டானைச் சேர்ந்த சர்வதேச சட்ட பேராசிரியர் ஹஸ்ஸா மஜலி, ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு என்பது இரானுக்கு அதன் அணுசக்தி திட்டத்தை விடவும் பெரிய கருவியாக மாறியுள்ளது என்கிறார். அவரது கூற்றுப்படி, இந்த கடல் வழித்தடம் மூடப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை போர் இன்னும் நீண்ட காலம் நீடித்திருக்க கூடும்.
மறுபுறம், இரானுக்கு 300 பில்லியன் டாலர் பணத்தை கொடுக்கப் போவது யார் என்ற கேள்வியும் நீடிக்கிறது.
அமெரிக்கா, இரான் இடையிலான 14 அம்ச ஒப்பந்தத்தில், இரான் மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவது, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள இரானிய சொத்துகளை விடுவிப்பது, 300 பில்லியன் டாலர் மதிப்பில் இரானுக்கு மறுசீரமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது போன்ற பல பொருளாதார சலுகைகள் உள்ளன.
இருப்பினும், இந்த வாக்குறுதிகள் குறித்த விவரங்கள் இன்னும் தெளிவற்றதாகவே இருப்பதாக தாமஸ் ஜுனோ கூறுகிறார்.
பொருளாதார உதவிகள் எப்போது தொடங்கும், எவ்வளவு சொத்துகள் விடுவிக்கப்படும், இந்த 300 பில்லியன் டாலர் நிதி எங்கிருந்து திரட்டப்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்கிறார் தாமஸ் ஜுனோ.
வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு இந்த நிதியை வழங்கும் என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறுகிறார். ஆனால், இது தொடர்பான மேலதிக விவரங்களை அவர் தரவில்லை.
மறுபுறம், எந்தவொரு வளைகுடா நாடும் இரானுக்கு நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.
இதுகுறித்து கூறும் அரசியல் ஆய்வாளர் அலி அல்-ஹைல், "எங்கள் நாடு இரானுக்கு ஒரு பைசா கூட வழங்க கூடாது என நான் விரும்புகிறேன். இரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் நாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், இரான் தான் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்கிறார்.
இந்த திட்டத்துக்கு நிதி பங்களிப்பை வழங்குமாறு வளைகுடா நாடுகளை அமெரிக்காவால் சம்மதிக்க வைக்க முடியுமா என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. எதிர்கால ஸ்திரத்தன்மை குறித்து தங்களுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படும் வரை, 300 பில்லியன் டாலர் போன்ற பெரிய தொகையை வழங்க வளைகுடா நாடுகள் அவ்வளவு எளிதில் சம்மதிக்காது என்றே தாமஸ் ஜுனோ கருதுகிறார்.
இரானுக்கும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுவது என்பது இன்னும் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்கிறார் அவர்.
எதிர்கால முதலீடுகள் மூலம் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் சாத்தியம் என்றாலும், வளைகுடா நாடுகள் இதில் ஈடுபட வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை எதிர்பார்க்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாகவே தோன்றுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



