You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே ஆட்டத்தில் சச்சினின் 2 சாதனைகளை தகர்த்த கோலி - என்னென்ன தெரியுமா?
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 117 ரன்கள் எடுத்த கோலி, தனது 50வது சதத்தை அடித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இது வரை சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களே அதிகமாக இருந்தன. தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி. தனது 50வது சதம் அடித்த பிறகு, அரங்கில் அமர்ந்து இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சச்சினை நோக்கி தன் ஹெல்மெட்டை கழற்றி தலைகுனிந்து மரியாதை செலுத்தினார். சச்சின் டெண்டுல்கர் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்.
கோலியின் இந்த சாதனை குறித்து X சமூக தளத்தில் பதிவிட்ட டெண்டுல்கர், "உன்னை முதன் முதலில் ட்ரெஸிங் ரூமில் பார்த்த போது, மற்ற வீரர்கள் விளையாட்டாக நீ என் காலை தொட வேண்டும், அது தான் வழக்கம், அப்போது தான் ஆசி கிடைக்கும் என்று கூறினர். என்னால் அப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவிலேயே நீ, உனது கிரிக்கெட் ஆர்வம் மற்றும் திறனால் என் மனதை தொட்டு விட்டாய். அப்போது பார்த்த அந்த இளைஞன் கோலி இன்று கிரிக்கெட் வீரர் விராட் கோலியாக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி. எனது சாதனையை முறியடித்ததில் என்னை விட மகிழ்ச்சியாக இருக்கும் இந்தியர் வேறு யாரும் இருக்க முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.
விராட் கோலி அந்த தருணம் கனவு போல் இருந்தது என்றார். தனது மனைவி அனுஷ்கா, தனது ஹீரோ சச்சின் ஆகியோர் நேரில் காண 50வது சதத்தை அடித்தது மிகவும் மகிழ்ச்சி என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)