ஐபிஎல் இறுதிபோட்டி: உலகக்கோப்பை நாயகன் கம்மின்ஸின் வியூகம் கொல்கத்தாவிடம் எடுபடுமா?

ஐபிஎல் இறுதிபோட்டி: உலகக்கோப்பை நாயகன் கம்மின்ஸின் வியூகம் கொல்கத்தாவிடம் எடுபடுமா?
பிரசுரிக்கப்பட்டது

பேட் கமின்ஸ்...

6 மாத இடைவெளியில் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நாள் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர். ஆஸ்திரேலியாவுக்காக ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தவர். ஆஸ்திரேலியா அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படும் பேட் கமெண்ட்ஸ் தான், தோல்விகளால் தடுமாறிக் கொண்டிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தற்போது ஐபிஎல் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றிருக்கிறார்.

பேட் கமின்ஸின் சாமர்த்தியத்தை எதிர்கொண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசர்ஸ் - ஹைதராபாத் அணிகள் இறுதி யுத்தத்தில் மோதுகின்றன.

நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்வி கண்டு 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதேசமயம் ஹைதராபாத் அணி லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்வி என 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

குவாலிஃபயர் முதல் சுற்று ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே நேருக்கு நேர் மோதின. இதில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கொல்கத்தாவிடம் தோற்ற ஹைதராபாத் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குவாலிஃபயர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கடந்த மூன்று சீசன்களாக ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமலேயே தவித்தது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்திற்கு பின்தங்கியது. தற்போது பேட் கம்மின்ஸ் தலைமையில் புதிய எழுச்சியுடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. வெறும் ஆறு மாத இடைவெளியில் பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா ஒருநாள் உலக கோப்பையையும். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் வென்றதோடு ஆஷஸ் கோப்பையையும் தக்க வைத்தது. தற்போது அதே பேட் கம்மின்ஸின் கேப்டன்ஸி ஹைதராபாத்துக்கும் இந்த தொடரில் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

வீரர்களை சாமர்த்தியமாக கையாளும் அவரது உத்தி பல நேரங்களில் பலன் தந்துள்ளது.

உதாரணமாக ராஜஸ்தானுக்கு எதிரான குவாலிஃபயர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவுக்கு பந்து வீசும் வாய்ப்பை வழங்கினார். அது பெரிய ரிஸ்காக கருதப்பட்டாலும் அந்த முடிவு ஹைதராபாத் அணிக்கு சாதகமாக அமைந்தது. பேட் கம்மின்ஸின் உத்திகளை சமாளிப்பது கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாசுக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடும்.

ஹைதராபாத் அணிக்கு பேட்டிங்கில் வலு சேர்க்க டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கிளாஸன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். சவாலான ஆடுகளங்களில் ஹெட், கிளாசன் ரன் சேர்க்க தடுமாறியுள்ளனர். இது போன்ற தருணங்களில் அணிக்கு வலு வலுசேர்க்க வேண்டிய அழுத்தம் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதிக்கு ஏற்படுகிறது.

இறுதிப் போட்டியில் பேட்டர்கள் தங்களது வழக்கமான அதிரடி பாணியை வெளிப்படுத்துவது ஹைதராபாத் அணிக்கு சாதகமாக அமையும். இவர்களை கட்டுப்படுத்துவதில் கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்கள் தீர்க்கமாக செயல்படுவார்கள். வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், ரஸ்ஸல், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத்திற்கு கடும் நெருக்கடி அளிக்கலாம்.

கொல்கத்தா அணியில் சுனில் நரைன் ஆபத்தான பேட்டராக வலம் வருகிறார். நடப்பு தொடரில் சுனில் நரைன் மூன்று அரைசதம், ஒரு சதம் விளாசி இருக்கிறார். பில் சால்ட் இல்லாத குறையை ரஹ்மானுல்லா குர்பாஸ் போக்குவார் என்றே அணி நிர்வாகம் நம்புகிறது.

மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் அய்யர், ஷ்ரேயாஸ் ஆகிய இருவரும் குவாலிஃபயர் முதல் சுற்று ஆட்டத்தில் அரை சதம் விளாசினர். அதே பார்மை இறுதி போட்டியிலும் தொடர அவர்கள் விரும்புவர். இதுதவிர பினிஷிங்க்காக ரிங்கு சிங், ரஸ்ஸல் ஆகிய இருவரையும் நம்பி இருக்கிறது கொல்கத்தா அணி.

கொல்கத்தாவை ரன் சேர்க்கவிடாமல் தடுக்க பேட் கம்மின்ஸ் என்ன மாதிரியான உத்தியை கையாள போகிறார் என்பதை பலரது எதிர்பார்ப்பாக இருக்கும். அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர், பேட் கம்மின்ஸ் ஆகியோருடன் நட்ராஜனும் இணைந்து வேகப்பந்து வீச்சில் கொல்கத்தாவை திணறடிக்க முயல்வார்கள். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்றே நம்பலாம்.

இறுதிப் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மை நடப்பு தொடரில் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டே இருந்துள்ளது. ஆடுகளத்தின் தன்மை இறுதிப் போட்டியிலும் அதிக தாக்கம் செலுத்தும். 2012ம் ஆண்டில் சென்னை மண்ணில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது மீண்டும் இறுதிப் போட்டியில் களமிறங்கும் கொல்கத்தா மூன்றாவது முறையாக ஐபிஎல் பட்டம் வெல்லுமா அல்லது பேட் கம்மின்ஸ் தலைமையில் ஹைதராபாத் அணி மகுடம் சூடுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி யுத்தம் எப்படி இருக்க போகிறது என்பதை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)