You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இப்படி ஒரு கனமழையா? தென்மாவட்டங்களின் நிலை என்ன? – காணொளி
தென் தமிழகத்தில் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை கொட்டித்தீர்த்தது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய 4 மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் ஆறுபோல மழைநீர் ஓடியது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த 3 மாத கைகுழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி உள்பட பல்வேறு பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தூத்துக்குடி துறைமுக பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது.
கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாகர்கோவிலில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரப்பர் படகுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதிகனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது திங்கட்கிழமை காலை வரை 7,500 பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு 84 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)