'உணவே இல்லை; குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பது?' - காஸாவில் குமுறும் பெற்றோர்கள்
(இந்த காணொளியில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சங்கடம் தரலாம்.)
காஸாவில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி நிலவி வருகிறது. தொடரும் போர், இடம்பெயர்வு மற்றும் உதவி பொருட்கள் வருவதை பெரும்பாலும் முடக்கி வைத்திருப்பது ஆகியவற்றின் காரணமாக காஸா மக்கள், குறிப்பாக குழந்தைகள், கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான இறப்புகளில் ஆபத்தான அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு மட்டுமின்றி, யுனிசெஃப் (UNICEF), மற்றும் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) ஆகியவை இந்த நிலைமை குறித்து எச்சரித்துள்ளன.
புதன்கிழமையன்று ஹமாஸ் நடத்தி வரும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பட்டினியால் 10-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு பட்டியானால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 111-ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் தொடர்புடைய 21 மரணங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட போரில் பெற்றோரை இழந்த ஏஉதய்-ஐ (Auday) 'பேஷன்ட்ஸ் ஃப்ரெண்ட்ஸ்' (Patient's Friends) மருத்துவமனைக்குச் சோதனைக்காக அவரது உறவினர் ஈத் சயீத் சியம் (Eid Saeed Siyam) அழைத்து வந்தார். அவரது மனைவி குழந்தையைக் கவனித்து வருவதாகக் கூறிய அவர், குழந்தைக்கு உணவளிக்க அத்தியாவசியப் பொருட்களை பெற மிகவும் சிரமப்படுவதாகக் கூறினார்.
இஸ்ரேல், தேவையான உதவிகளை காஸாவுக்கு அனுப்பி வருவதாகக் கூறுகிறது. ஆனால், இஸ்ரேலின் கட்டுப்பாடுகளால் ஐ.நா. உதவி முகமைகள் காஸாவில் உதவிகளை விநியோகிக்க முடியவில்லை என தெரிவிக்கின்றன.
முன்னதாக, காஸாவில் பெரிய அளவில் உணவு பற்றாக்குறை நிலவி வருவதாக 100க்கும் மேற்பட்ட உதவி அமைப்புகள் தெரிவித்திருந்தன.
மருத்துவமனையில் அலிவாவுடன் (Aliwa) இருந்த அவரது பாட்டி ஃபயாசா காமேஸ் அப்துல் ரஹ்மான் (Fayaza Khames Abdulrahman)ஆறு மாத குழந்தைக்கு உணவு கொடுக்க பிஸ்கெட் கூட கிடைக்கவில்லை எனக் கூறினார்.
உதவி பொருட்களைப் பெற வந்த மக்கள் மீது இஸ்ரேலிய படைகள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், எச்சரிக்கைக்காகவே துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், இறப்பு எண்ணிக்கை மிகைப்படுத்தப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
சர்வதேச செய்தியாளர்கள் காஸாவிலிருந்து செய்தி சேகரிக்க இஸ்ரேலால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உள்ளூர் செய்தியாளர்கள் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.நா போன்ற பிற மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புகள் மே மாதம் முதல் காஸாவில் இயங்க இஸ்ரேலால் அனுமதிக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் காஸா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் உதவி பொருட்கள் விநியோகத்தை இஸ்ரேல் செய்து வருகிறது. எனினும், இந்த அமைப்பு மூலம் வழங்கப்படும் உதவிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இஸ்ரேலின் இந்த செயலுக்குச் சர்வதேச ஆதரவு குறைந்து வருகிறது. காஸாவில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என, பிரிட்டன் உள்ளிட்ட 27 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தச் சூழலில், இஸ்ரேலின் நாடாளுமன்றம் சில நாட்களில் கூட உள்ளது. நெதன்யாகு ஆட்சி அமைக்க ஆதரவளித்த தீவிர தேசியவாதிகள் காஸா போர் நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக உள்ளனர். அவர்கள் நெதன்யாகு அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதால், நெதன்யாகு தற்போது அழுத்தத்தில் உள்ளார்.
தற்போதைய சூழலில், தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானதாகத் தெரிகிறது. இது பணயக்கைதிகளை மீட்கவும், காஸாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும் வழிவகுக்கும். எனினும், இதனால் மோதல் முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், போர் இதை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. ஒருவேளை சண்டை நிறுத்தம் ஏற்பட்டால் தாக்குதலை நிறுத்தி ராஜீய ரீதியான முயற்சியை தொடர மற்றொரு வாய்ப்பு அமையும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



