அரவிந்த் கெஜ்ரிவால் கைது: ஜெர்மனி வெளியுறவு அதிகாரி கருத்தும் இந்தியா எச்சரிக்கையும்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21, 2024 அன்று இரவு கைது செய்தது. புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமலாக்கத்துறை கேஜ்ரிவாலுக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றைச் சட்டவிரோதமானது என்று நிராகரித்தார். இதையடுத்து, கேஜ்ரிவால் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், ANI/SOCIAL MEDIA
மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிரசாரங்களும் தொடங்கிவிட்ட நிலையில் கேஜ்ரிவாலின் கைது அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை கிளப்பியுள்ளது.
கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஜெர்மனியும் அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து பேசியிருக்கிறது.
ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் தேர்தலுக்கு முன்பு அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இந்த விஷயத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகள் இந்த வழக்கிலும் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,
"குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எந்தவொரு நபரைப் போலவே, கெஜ்ரிவாலுக்கும் நியாயமான விசாரணைக்கு உரிமை உண்டு என்றார். ஜெர்மனி செய்தித் தொடர்பாளரின் கருத்து சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
இதையடுத்து புதுதில்லியில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் என்ஸ்வீலருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. சனிக்கிழமை காலை அவர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு சென்றார்.
அப்போது ஜெர்மன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "இதுபோன்ற கருத்துகள் நமது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், நமது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதை போன்று நாங்கள் கருதுகிறோம்" என கூறியுள்ளது.
இந்தியா, சட்டத்தின் ஆட்சியுடன் கூடிய துடிப்பான மற்றும் வலுவான ஜனநாயக நாடு.ஜனநாயக நாடுகளில், அனைத்து சட்ட வழக்குகளிலும் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இதில் பக்கசார்புடைய கருத்துகள் தேவையற்றவை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதனிடையே, ஜெர்மனியின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளரும் டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் ஜெர்மனியின் வெளியுறவு செய்தித்தொடர்பாளர் பேசிய காணொளியை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "ஹிட்லர் எப்படி வெறுப்பை பரப்பி சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை நாசமாக்கினார் என்பது ஜெர்மனிக்குத் தெரியும் அதனால்தான் அவர்கள் கவலைப்படுகிறார்கள்" என கருத்து பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், "ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் நீதியையும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது எல்லா ஜனநாயக நாடுகளும் சொல்லும் விஷயம்தான். பாஜக ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனி இந்திய விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பது இது முதல்முறையல்ல..
கடந்த 2022-ல் ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் ஜனநாயகத்தை விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



