You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேசத்தில் இனி அடுத்து என்ன நடக்கலாம்? இந்தியா என்ன செய்யப் போகிறது?
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து அங்கு ஆட்சி கவிழ்ந்திருக்கிறது. அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா திங்கட்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லிதில்லிக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து என்ன நடந்தது, இந்தியாவின் நிலைப்பாடு என்ன, அந்நாட்டின் எதிர்காலம் எப்படியாக இருக்கும் என்பதெல்லாம் குறித்து ‘உலக நாடுகளுக்கு இடையேயான மோதல் மற்றும் அமைதி உருவாக்கம்’ தொடர்பான ஆய்வுகளில் நிபுணரும், லயோலா கல்லூரியின் சமூக பணித்துறை பேராசிரியருமான கிளாட்சன் சேவியரிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பிரச்சனையின் தொடக்கப்புள்ளி
கேள்வி: வங்கதேசத்தில் பிரச்னை எப்படித் துவங்கியது? அடிப்படையான காரணம் என்ன?
"வங்கதேசத்தில் இன்று நடக்கக்கூடிய பிரச்சனை என்பது கடந்த ஐந்தாண்டுகளில் சிறிது சிறிதாக நடந்த பல பிரச்சனைகளின் வெளிப்பாடுதான். தொடர் மனித உரிமை மீறல்கள், அளவுக்கு அதிகமான ஊழல், அரசின் அதீதமான கட்டுப்பாடு போன்றவற்றால் ஒரு அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், இட ஒதுக்கீட்டை முன்னிட்டு எழுந்த ஆர்ப்பாட்டங்கள், மற்ற பிரச்னைகளையும் மனதில் வைத்து மிகப் பெரிய கலவரமாக உருவெடுத்தது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா சீனாவிலிருந்து முதலீடுகளை ஈர்க்க அந்நாட்டிற்கு சென்றார். பல மாதங்களாகத் திட்டமிட்ட பயணம் அது. அவர் திட்டமிட்டு சென்ற காரியம் என்ன ஆனதெனத் தெரியாத நிலையில், அவர் நாடு திரும்பினார்.
ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்தில் கலவரம் துவங்கியிருந்தது. அவர் இங்கே இருந்திருந்தால் இரும்புக் கரம் கொண்டு அதனை ஒடுக்கியிருப்பார். அடுத்தடுத்த தலைமைகள் இருந்திருந்தால், முடிவெடுத்து கலவரத்தை ஒடுக்கியிருப்பார்கள். ஆனால், அங்கே அப்படியில்லை. அவருக்கு அடுத்து இருந்தவர்கள் முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக இல்லை.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் இருந்த ஆலோசகர்கள், இப்போது அவருடன் இல்லை. இதெல்லாம் சேர்ந்து இந்த நிலைக்கு இட்டுவந்துவிட்டது."
இடஒதுக்கீடுதான் தான் காரணமா?
கேள்வி: இடஒதுக்கீடுதான் முக்கியக் காரணமென்றால், அந்த இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட மாட்டாது அல்லது அளவு குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து அரசு பிரச்னையை எளிதில் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாமே?
"இந்த இட ஒதுக்கீடு விவகாரம் கலவரம் துவங்க ஒரு காரணமாக இருந்ததே தவிர, அதுவே மொத்த பிரச்னையுமல்ல. பல்வேறு அதிருப்திகள் இருந்தன. இட ஒதுக்கீடு விவகாரத்தை சரிசெய்துவிட்டால்கூட மற்ற பிரச்னைகளைச் சரி செய்திருக்க முடியாது.
அங்கே சாதாரண கூலி வேலை செய்பவர்களின் நிலை மோசமாக இருக்கிறது. இட நெருக்கடி இருக்கிறது. ஆங்காங்கே வளர்ச்சி இருக்கிறதே தவிர, பரவலான வளர்ச்சி இல்லை. இப்படி பல்வேறு அதிருப்திகள் சேர்ந்துதான் இதுபோன்ற கலவரமாக வெடித்திருக்கிறது.
இதுபோன்ற அதிருப்தியை வாக்குச்சீட்டின் மூலமாக காட்டலாம் அல்லது கலவரத்தின் மூலமாகக் காட்டலாம். வங்கதேச மக்கள் கலவரத்தின் மூலமாகக் காட்டுகிறார்கள். ஆனால், கலவரம் செய்பவர்களைப் பொறுத்தவரை நீண்ட கால இலக்கு இருப்பதைப் போலத் தெரியவில்லை.
இந்தக் கலவரத்தின் பின்னால் யாராவது தலைவர்கள் இருந்தால், ஒருவேளை அவர்களுக்கு சில நோக்கங்கள் இருக்கலாம். இந்தக் கலவரக்காரர்களைப் பொறுத்தவரை அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை."
சதிக் கோட்பாடுகள் உள்ளதா?
கேள்வி: இதுபோல ஒரு நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டால், அதற்குப் பின்னால் பல சதிக் கோட்பாடுகள் சொல்லப்படும். இந்த விவகாரத்தில் அப்படி யாரையும் சுட்டிக்காட்ட முடியுமா?
"இதில் அப்படி யாரையும் சொல்ல முடியாது. வங்கதேசத்தைப் பொறுத்தவரை மூன்று பக்கமும் இந்தியா. ஒரு பக்கம் கடல். சற்று தூரம் சென்றால் மியான்மர். இந்தச் சூழலில் எல்லோரோடும் நட்பு பாராட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது வங்கதேசம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பத்து லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் திடீரென வங்கதேசத்திற்கு வந்தார்கள். அவர்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னது வங்கதேசம். அதேபோல, சீனா, இந்தியாவின் முதலீடுகளும் வங்கதேசத்திற்கு மிகவும் தேவை.
வங்கதேசம் உருவாவதற்கு முக்கியக் காரணமே இந்தியாதான். ஆகவே வங்கதேசம் இந்தியாவுக்கு மிகவும் நெருங்கிய நாடு. யார் பிரதமராக இருந்தாலும் அதுதான் நிலை. இம்மாதிரி சூழலில் வெளிநாட்டு சதி என்பதெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
இது தவிர, அமெரிக்காவின் முதலீடுகளும் பெரிய அளவில் வங்கதேசத்தில் செய்யப்பட்டிருக்கின்றன.
ரோஹிங்கியாகளுக்காகவும் மற்ற சில உதவியாகவும் 2017ஆம் ஆண்டில் இருந்து வருடத்திற்கு 2 பில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கிவருகிறது. தவிர, உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவையும் அந்நாட்டிற்கு தொடர்ந்து உதவிகளைச் செய்துவருகின்றன.
இந்த உதவிகளை வைத்துத்தான் வளர்ச்சியடையும் ஒரு நாடாக வங்கதேசம் இருக்கிறது. இந்தச் சூழலில் இப்படி ஒரு கலவரம் என்பது வருந்தத்தக்கது."
வங்கதேசத்தின் வளர்ச்சி
கேள்வி: ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் கீழ் வங்கதேசம் கடந்த 15 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், இவ்வளவு பெரிய அதிருப்தி உருவாகக் காரணம் என்ன?
"ஆட்சியாளர்கள் திடீரென தாங்கள் சார்ந்திருக்கும் சித்தாந்தத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்தால் இதுபோல நடக்க வாய்ப்புண்டு. அதிருப்தி என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்படியான சூழலில், ஷேக் ஹசீனாவை மாற்றுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. கலீதா ஜியா சிறையில் தள்ளப்பட்டுவிட்டார்.
நோபல் விருதுபெற்ற முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இதெல்லாம் சேர்ந்துதான் இப்படியான சூழலை உருவாக்கியிருக்கிறது.
மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். வங்கதேசம் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் ஷேக் ஹசீனா ஒரு மதச்சார்பற்ற தலைவராக இருந்தார். மற்றொரு பக்கம் அங்கே சில அடிப்படைவாத அமைப்புகளும் வளர்ந்துவந்தன. அவர்களும் இந்த புகைச்சலுக்கு தூபமிட்டார்கள்.
ஆகவே, அதிருப்தி என்பது வெறும் புள்ளிவிவரம் சார்ந்து மட்டும் ஏற்பட்டதாக இல்லை. கருத்து ரீதியாகவும் அதிருப்தி ஏற்பட்டுவந்தது என்பதை ஷேக் ஹசீனா உணரவில்லை. உணர்ந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்."
தீர்வு என்ன?
கேள்வி: இந்தச் சூழலில் வங்கதேசத்திற்கு என்ன தீர்வு இருக்கிறது?
"உடனடியான தீர்வு என்பது இடைக்கால அரசுதான். இப்போது ஆட்சியை ராணுவம் கையில் எடுத்திருக்கிறது. அவர்கள் ஒரு இடைக்கால ஆட்சியை அமைக்கப்போகிறார்கள். அதில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என ஒரு பட்டியலே இருக்கிறது. அவர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும்.
தலைநகர் டாக்காவில் மட்டுமல்லாமல், ஆங்காங்கே கலவரம் நடந்துவருகிறது. முதலில் அங்கு ஏற்பட்டிருக்கும் கலவரத்தை அடக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் தேர்தல் நடத்தப்படும். இதற்கு சில மாதங்கள் ஆகலாம்.
வங்கதேசத்தில் விரைவில் மழைக் காலம் வரவிருக்கிறது. அங்கு மழைக் காலம் மிக மோசமாக இருக்கும். அதற்குள் இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டுவிட்டால் நிலைமை மேம்படும்.
இப்போதைய சூழலில் ஜனநாயகம் மட்டும்தான் ஒரே தீர்வு. ராணுவ ஆட்சியோ, சர்வாதிகாரியோ வருவதற்கான சூழல் அங்கே இல்லை. பாகிஸ்தானைப் போன்ற நிலை இங்கே வராது. தேர்தல் அரசியல்தான் ஒரே தீர்வு. ஆனால், தேர்தல் நடக்க சில நாட்களாகலாம். தவிர, இந்தியாவைப் பொறுத்தவரை வங்கதேசத்தில் ஸ்திரத்தன்மை இருப்பதுதான் நல்லது. பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் அதுவே சரியாக இருக்கும்."
வங்கதேசத்திற்கு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு
கேள்வி: இந்தக் கலவரத்தையொட்டி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலைகளும் தாக்கப்படுகின்றன. அந்நாட்டின் விடுதலையில் முக்கியத் தலைவராக இருந்தவர் அவர். அவருடைய சிலைகளைத் தகர்க்கும் அளவு அதிருப்தி இருக்கிறதா?
"அப்படியல்ல. இந்தியாவில் காந்தி படத்தை வைத்து சுடுகிறார்கள். இந்தியாவில் காந்தி மீது அதிருப்தி இருக்கிறதா என கேட்க முடியுமா.. அதுபோலத்தான். ஷேக் ஹசீனா மீதான அதிருப்தி அவர் தொடர்புடைய எல்லோர் மீதும் காட்டப்படுகிறது. இது ஒரு சித்தரிப்பு, அவ்வளவுதான்.
எல்லோருமே ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக இருப்பதாகவும் சொல்ல முடியாது. அடிமட்டத்தில் இருக்கக்கூடிய கலவரக்காரர்கள்தான் இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார்கள். ஷேக் முஜிபுர் ரஹ்மான் இல்லையென்றால் இப்போதைய வங்கதேசம் உருவாகியிருக்காது. ஆகவே இந்த விவகாரத்தை கவனமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வருவதையெல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது.
சோவியத் யூனியன் சரிந்தபோது, லெனினின் சிலைகள் தகர்க்கப்பட்டதைப் போன்ற நிகழ்வு அல்ல இது. இதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்."
இந்தியா என்ன செய்யும்?
கேள்வி: இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருக்கும்?
"இந்தியா இதுவரை இந்த விவகாரத்தில் பொறுப்போடு செயல்படுவதாகத்தான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியா நேரடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அதே நேரத்தில் இந்தியா இல்லாமல் வங்கதேசம் செயல்படவும் முடியாது.
இப்போதைய சூழலில் இநதியா ஷேக் ஹசீனாவுக்கு புகலிடம் அளிக்க வேண்டும். அது குறுகிய கால புகலிடமாக இருக்கலாம் அல்லது நீண்ட கால புகலிடமாக இருக்கலாம். அடுத்ததாக அந்நாட்டின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்ய வேண்டும்.
மூன்றாவதாக மீண்டும் மக்களாட்சியை அங்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள அமைப்புகளை (Institutions) வலுப்படுத்த வேண்டும். ஏற்கனவே செய்திருக்கிறோம். அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, வங்கதேசம் மிக மிக முக்கியமான கூட்டாளி. ஒரு பாதுகாப்பு அரண். ஆகவே, அதன் நலனின் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்."
உலக நாடுகளின் பார்வை
கேள்வி: உலக நாடுகள் எம்மாதிரி இந்த விவகாரத்தை அணுகுகின்றன?
"உலக நாடுகள் கூர்ந்து கவனித்துவருகின்றன. இலங்கை கவலை தெரிவித்துள்ளது. பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளன. மற்ற நாடுகளும் இந்த விவகாரத்தை கவனித்துவருகின்றன. ஏனென்றால், வங்கதேசம் முக்கியமான உற்பத்தி கேந்திரம். ஆகவே எல்லா நாடுகளுமே அதனை உற்று நோக்கிவருகின்றன."
காணொளி தயாரிப்பு- முரளிதரன் காசி விஸ்வநாதன்.
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு- ஜனார்த்தனன்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)