ரத்தன் டாடாவின் உற்ற தோழனாக, நிழலாக தொடர்ந்த 31 வயது இளைஞர் யார்? இருவரையும் இணைத்த புள்ளி எது?

ரத்தன் டாடாவின் உற்ற தோழனாக, நிழலாக தொடர்ந்த 31 வயது இளைஞர் யார்? இருவரையும் இணைத்த புள்ளி எது?
பிரசுரிக்கப்பட்டது

புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா அக்டோபர் 9 ஆம் தேதி அன்று காலமானார். அவருக்கு வயது 86.

ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையின் தேசிய கலை மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அக்டோபர் 10 ஆம் தேதி அன்று மாலை அவரது உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது.

ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது சோகம் தோய்ந்த முகத்தோடு ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ரத்தன் டாடாவுக்கு உற்ற நண்பராக திகழ்ந்த இந்த இளைஞர், அவரது இறுதி சடங்கிலும் அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தார்.

அவர் தான் ஷாந்தனு நாயுடு. 86 வயதான ரத்தன் டாடாவின் கடைசி காலகட்டத்தில் அவரது நிழலாக 31 வயதான ஷாந்தனு நாயுடு இருந்தார். டாடா நிறுவனத்தின் 5வது தலைமுறை ஊழியரான ஷாந்தனுவையும் ரத்தன் டாடாவையும் இணைத்த புள்ளி என்பது செல்லப்பிராணியான நாய்கள் மீது இருவரும் கொண்ட காதல் தான்.

இவர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பு 2014-ல் நடந்தது. ஆதரவற்ற நாய்கள் மீது அதிக அக்கறைக் கொண்ட ஷந்தானு, அந்த நேரத்தில், தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் வாகனங்களில் சிக்கி அடிப்படாமல் இருக்க அவற்றுக்கான மின்னும் கழுத்து பட்டைகளை தயாரிக்கும் மோட்டோபாஸ் என்னும் சமூக முன்னெடுப்பை நடத்திக்கொண்டிருந்தார். இது பற்றி டாடா நிறுவனம் அதன் நியூஸ்லேட்டரில் குறிபிட்டு இருந்தது. அதன் பிறகு ரத்தன் டாடா ஷாந்தனுவை மும்பைக்கு வரும்படி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

பின்னர் இருவருக்கும் இடையேயான நட்பு ஆழமானது. படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஷந்தானு இந்தியா திரும்பியவுடன் ரத்தன் டாடாவின் உதவியாளராக மாறினார். ஷாந்தனுவின் பட்டமளிப்பு விழாவிலும் ரத்தன் டாடா கலந்துகொண்டார்.

ரத்தன் டாடா அவரது 84 ஆவது பிறந்தநாளை ஷந்தானுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன் பிறகு மக்கள் ஷாந்தனுவுக்கும் டாடாவுக்குமான நட்பை கண்டு வியந்தனர்.

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)