நேபாளத்தில் 18 பேரை பலி கொண்ட விமான விபத்திற்கு என்ன காரணம்? - காணொளி

நேபாளத்தில் 18 பேரை பலி கொண்ட விமான விபத்திற்கு என்ன காரணம்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

காத்மாண்டுவிலிருந்து பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு செல்லவிருந்து செளர்யா விமான சேவை நிறுவனத்தின் அந்த விமானம் புறப்படும் சமயத்தில் விபத்துக்குள்ளானது

பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்துள்ளனர்.

பிபிசி நேபாள சேவையிடம் பேசிய காத்மாண்டு காவல்துறை செய்தி தொடர்பாளர், தினேஷ் மைனலி, இந்த விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். விமானி ஒருவர் மட்டும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிருடன் மீட்கப்பட்ட விமானிக்கு கண்கள் மற்றும் நெற்றியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் காவல்துறை செய்திதொடர்பாளர் டான் பஹதூர் கார்கி பிபிசி நேபாள சேவையிடம் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் என்ன?

பிபிசி நேபாள சேவையிடம் பேசிய திரிபுவன் விமான நிலையத்தின் தலைவர் ஜகநாத் நிரூவுலா, காத்மாண்டுவிலிருந்து போகாரா செல்லவிருந்த விமானம் தவறான திசையில் திரும்பியதாக தெரிவித்தார்.

டேக் ஆஃப் ஆனதும் அந்த விமானம் வலது பக்கம் திரும்பிவிட்டது. ஆனால் அது இடது பக்கம்தான் திரும்பியிருக்க வேண்டும். இருப்பினும் விபத்துக்கான காரணம் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

விமான டேக் ஆஃப் ஆகி ஒரு நிமிடம் கூட நிறைவடையவில்லை அதற்குள் விபத்து நிகழ்ந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடந்த விபத்துக்கள்

நேபாளத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பல்வேறு விமான விபத்துக்கள் நடந்தேறியுள்ளன. கணிக்க முடியாத வானிலை மற்றும் தளர்வான விதிமுறைகள் என பல்வேறு காரணங்கள் அதற்கு சொல்லப்படுகின்றன

  • நேபாளத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் யேத்தி ஏர்லைனிஸில் பயணித்த 72 நபர்கள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் முடிவில், விமானிகள் தவறுதலாக மின்சார இணைப்பை துண்டித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.
  • கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதாம் போகாராவிலிருந்து ஜாம்சமிற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்.
  • 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டேபிள்ஜங் என்ற இடத்திற்கு அருகில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நேபாளத்தின் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துறை துறை அமைச்சர் ரபின்ந்திரா அதிகாரி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
  • அதே ஆண்டு ஏப்ரல் மாதம் லகாலா விமான நிலையத்தில் விமானம் ஒன்று இரு ஹெலிகாப்டர்கள் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
  • 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்திலிருந்து நேபாளத்திற்கு வந்த விமானம் திரிபுவன் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்தனர்.
  • அதே ஆண்டு செப்டர்மபர் மாதம் கோர்காவிலிருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஜப்பானை சேர்ந்த ஒருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
  • 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போகாராவிலிருந்து ஜாம்சனிற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர்.
  • 2015ஆம் ஆண்டு மே மாதம் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணியிலிருந்து ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு அமெரிக்க சிப்பாய்கள், இரு நேபாள அதிகாரிகள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)