புதிய அணுசக்தி ஆயுதம்: பூமியை தாண்டி விண்வெளியில் ரஷ்யா எதை குறிவைக்கிறது? அமெரிக்கா கவலை
ரஷ்யா செயற்கைக்கோள்களை தாக்கக் கூடிய புதிய ஆயுதத்தை உருவாக்கி வருவதாகவும், அது தனக்கு கவலையளிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால், அமெரிக்காவின் கூற்றை மறுத்துள்ள ரஷ்யா, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமெரிக்க காங்கிரஸை கட்டாயப்படுத்தி, உக்ரைனுக்கு கூடுதல் நிதியை எப்படியாவது ஏற்பாடு செய்வதற்கான கூட்டுச்சதி இது என ரஷ்யா கூறியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ், ஏபிசி மற்றும் சிபிஎஸ் போன்ற செய்தி நெட்வொர்க்குகள் தங்கள் அறிக்கைகளில், இந்த அச்சுறுத்தல் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் ஆயுதத்தால் வந்ததாகக் கூறியது. இது விண்வெளியில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்க பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
சமீபத்தில், ஜான் கிர்பி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த ஆயுதம் குறித்து பேசிய அவர், அமெரிக்க மக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
“நாங்கள் மனிதர்களைத் தாக்கும் ஆயுதம் அல்லது பூமியில் ஏதேனும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆயுதம் குறித்து பேசவில்லை,” என்று கூறினார்.
இது குறித்து அதிபர் ஜோ பைடனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறும், ஜான் கிர்பி, பைடன் தலைமையிலான அரசு இந்தப் பிரச்னையை 'மிகவும் தீவிரமாக' எடுத்துக் கொண்டதாகக் கூறினார்.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடி இராஜ தந்திர தொடர்பை ஏற்படுத்த அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
புதிய அணுசக்தி ஆயுதம் - எதை குறிவைக்கிறது ரஷ்யா?
ஜான் கிர்பியின் கருத்துகளைத் தவிர, அமெரிக்க அரசு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல் பற்றிய எந்த உறுதியான தகவலையும் இன்னும் வெளியிடவில்லை.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்க அரசு தெரிந்தே மெளனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அச்சுறுத்தல் பற்றிய தகவல்களை சேகரிக்க அமெரிக்க உளவு அமைப்புகள் செயல்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நியூயார்க் டைம்ஸ், ஏபிசி மற்றும் சிபிஎஸ் போன்ற செய்தி நெட்வொர்க்குகள் தங்கள் அறிக்கைகளில், இந்த அச்சுறுத்தல் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் ஆயுதத்தால் வந்ததாகக் கூறியது. இது விண்வெளியில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்க பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அமெரிக்கா இந்த அச்சுறுத்தலை 'மிக தீவிரமாக' எடுத்துக் கொள்கிறது என்றார்.

பட மூலாதாரம், EPA
அமெரிக்கா கவலை ஏன்?
அமெரிக்க செயற்கைக்கோள்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமானால் அது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்களும், முன்னாள் அரசு அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க ராணுவம் செயற்கைக்கோள் தகவல் தொடர்பைத்தான் பெருமளவு நம்பியுள்ளது.
அதில், கண்காணிப்பு, ஏவுகணை ஏவுதல்களைக் கண்டறிதல், வான் மற்றும் கடல் தாக்குதல் முதல் ஜிபிஎஸ் வழிகாட்டுதல் மூலம் இலக்கை தாக்கும் குண்டுகள் மற்றும் போர்க் களத் தொடர்பு வரை அனைத்திற்கும் செயற்கைக்கோள்களைத்தான் அமெரிக்கா பயன்படுத்துகிறது.
காரி பிங்கன் அமெரிக்க பாதுகாப்புத் துறையில் இரண்டாவது உயர் மட்ட உளவுத்துறை அதிகாரியாக இருந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"இன்று நமது ராணுவம் போராடும் விதம் மற்றும் நாம் முதலீடு செய்யும் ஆயுதங்கள் அனைத்தும் நமது விண்வெளி திறன்களைப் பொறுத்தது. அது இல்லாவிட்டால், நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்போம். நாங்கள் இப்படி போராடக் கற்றுக்கொண்டோம். எங்களால், அது இல்லாமல் போராட முடியாது,” என்றார்.
இருப்பினும், ராணுவத் தேவைகளைத் தவிர, ஜிபிஎஸ் போக்குவரத்து சேவை, உணவு விநியோகம் மற்றும் வானிலை தகவல் போன்ற பல இடங்களில் செயற்கைக்கோள்களும் பயன்படுத்தப்படுகின்றன.
விவசாயம் முதல் சிக்னல் சார்ந்த நிதி பரிவர்த்தனைகள் வரை அனைத்திலும் இது தேவைப்படுகிறது.
தொடர்ந்து பேசிய காரி பிங்கன்,"செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அமெரிக்கர்களும் உலகெங்கிலும் உள்ள மக்களும் விண்வெளியை நம்பியிருக்கிறார்கள்," என்றார்.
பல ஆண்டுகளாக ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவுடன் போட்டியிட விண்வெளியில் தங்கள் ராணுவத் திறன்களை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகளும், விண்வெளி நிபுணர்களும் கூறி வருகின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள செயற்கைக்கோள்களை தாக்கும் திறன் உள்ளது.
ஆனாலும், மூன்று நாடுகளும் 1967 விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, அதன் மூலம் ஆயுதம் ஏந்திய எதையும் பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்ப முடியாது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



