மாலத்தீவுக்குச் சென்ற சீனக் கப்பல் உண்மையில் உளவுக் கப்பலா? – காணொளி

மாலத்தீவுக்குச் சென்ற சீனக் கப்பல் உண்மையில் உளவுக் கப்பலா? – காணொளி
பிரசுரிக்கப்பட்டது

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன ஆராய்ச்சிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 22) மாலத்தீவு சென்றடைந்தது. இந்தக் கப்பல் கடந்த ஒரு மாதமாக இந்தியப் பெருங்கடலில் இருந்தது.

இது குறித்து மாலத்தீவு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.

பி.டி.ஐ செய்தி முகமையில் அறிக்கையின்படி, இந்தியா மற்றும் இலங்கையின் கடலோர காவல்படை கப்பல்களும் ராணுவ பயிற்சிக்காக அப்பகுதியை வந்தடைந்த அதே நாளில் சீனக் கப்பல் மாலத்தீவுக்குச் சென்றிருக்கிறது.

மாலத்தீவு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடலோர காவல்படையினர் மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கினர்.

தோஸ்தி-16 என பெயரிடப்பட்ட இந்த ராணுவ பயிற்சி பிப்ரவரி 25-ஆம் தேதி நிறைவுபெருகிறது. இதில் வங்கதேசமும் பார்வையாளராக பங்கேற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பயிற்சியில், மூன்று நாடுகளின் ராணுவத்தினரிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், கடலில் நடக்கும் சம்பவங்களை கூட்டாக கையாள்வதற்கான வழிகளை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை தெரிவித்தது.

3 நாடுகளின் கூட்டுப் பயிற்சி நடைபெற்று வரும் சூழலில் சீனக் கப்பல் மாலத்தீவு சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள சீன கப்பல் குறித்து இந்தியா முன்னர் கவலை தெரிவித்திருந்ததுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலை நிறுத்த மறுக்கும்படி இலங்கைக்கும் அழுத்தம் கொடுத்திருந்தது.

மாலத்தீவு செய்தி இணையதளமான ஆதாதூவை (Aadhadhoo) மேற்கோள் காட்டி, பிடிஐ, ஜனவரி மாதம் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்குச் சென்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு இந்த சீனக் கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியதாக எழுதியுள்ளது.

மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் சுமார் ஒரு மாத காலம் கழித்து அந்தக் கப்பல் பிப்ரவரி 22 அன்று மாலே அருகே காணப்பட்டது.

ஜனவரி 22-ஆம் தேதி முதல் இந்த சீனக் கப்பல் ரேடாரில் எங்கும் தென்படவில்லை என கூறப்படுகிறது.. இந்த கப்பலின் கண்காணிப்பு அமைப்பு 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

முய்சு சீனாவுக்கு ஆதரவானவராகக் கருதப்படுகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்றார். 'இந்தியா வெளியேறு' என்ற முழக்கத்தை தேர்தலின்போது பயன்படுத்தியிருந்தார் முய்சு.

மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு, முய்சு இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. அவர் சமீபத்தில் சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனின் அழைப்பின் பேரில் அவர் துருக்கிக்கும் பயணம் செய்தார்.

சீனா 'அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்' என்று சொல்லிக்கொள்ளும் கப்பலானது உண்மையில் கடலில் இருந்து தரவுகளை சேகரிக்கிறது என்று அமெரிக்காவின் சிந்தனை திணைக்களம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்தது. இந்தக் கப்பல் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் தொடர்பான சட்டத்தின் கீழ் மட்டுமே இயங்குவதாக கூறுகிறது.

இந்த ஆராய்ச்சிக் கப்பலுக்கு இந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி மாலத்தீவு அரசு அனுமதி வழங்கியது. இந்தக் கப்பல் மாலத்தீவு கடற்பரப்பில் தங்கியிருந்து எந்தவிதமான ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ளாது என மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

எனினும், இந்த கப்பலின் நகர்வுகளை இந்தியா கண்காணித்து வருவதாக இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பான ஆதாரங்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இம்மாதம், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், "கடந்த சில ஆண்டுகளில் சுற்றியுள்ள கடல்களில் சீனாவின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் அமைதியின் நோக்கத்திற்காகவும், மனிதகுலத்தின் பார்வையில் இருந்து அறிவியல் புரிதலை மேம்படுத்துவதற்காகவே அமைந்துள்ளன என்றார்.

முன்னதாக சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருகை தர அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்தது.

இந்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி, சீனக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை தடை விதித்ததுடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுக் கப்பல்கள் வருவதற்கு ஓராண்டு தடை விதித்துள்ளதாகவும் கூறியது.

முன்னதாக, அண்டை நாடுகளின் எல்லைக்குள் சீனக் கப்பல்கள் செல்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

2022-ஆம் ஆண்டு யுவான் வாங் 5 என்ற சீன ராணுவக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது. ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை கண்காணிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்தது

இதனை 'உளவுக்கப்பல்' என்று கூறிய இந்தியா, இலங்கை அரசிடம் முறைப்படி தனது ஆட்சேபனையையும் தெரிவித்தது.

இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், "பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது, இது நியாயமற்றது," என சீனா கூறியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)