முதலை உங்களை தண்ணீருக்குள் இழுத்தால் தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உயிரிழந்த இளைஞர் முனீஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயிரிழந்த இளைஞர் முனீஸ்
    • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருவண்ணாமலையில் கால்நடைகளை மேய்க்கச் சென்ற இளைஞர் ஒருவர், சாத்தனூர் அணையில் முதலையிடம் சிக்கி உயிரிழந்தார்.

முதலையின் மேல் அமர்ந்து அதன் வாயை மூடுவதன் மூலம் அதனிடமிருந்து தப்பிக்க முடியுமா? அது எளிதான செயலா?

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே பெரிய மலை கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ் (வயது18) கல்லூரியில் படித்து வருகிறார்.

அவரின் தந்தை கண்ணன் கால்நடைகளை பராமரித்து அதன் மூலம் வரும் வருமானமே அக்குடும்பத்தின் வாழ்வாதாரமாக உள்ளது. இவருடைய மாடுகளை சாத்தனூர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் கண்ணன் மேய்த்து வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாத்தனூர் அணை பகுதியில் முனீஸ் மாடுகளை மேய்க்க சென்றிருக்கிறார்.

வழக்கம்போல மாடுகளை சாத்தனூர் அணையின் நீர்தேக்கத்தை ஒட்டியுள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டிருக்கிறார். சோர்வடைந்த முனீஸ், முகம், கை, கால்களை கழுவ அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு நீரில் மறைந்திருந்த முதலை, முனீஸை கடித்து நீருக்குள் இழுத்து சென்றிருக்கிறது. உயிருக்குப் போராடிய முனீஸ், நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

முதலையிடம் அகப்பட்டால் தப்பிப்பது எப்படி?
படக்குறிப்பு, சாத்தனூர் முதலை பண்ணையில் சுமார் 300 முதலைகள் இருக்கின்றன

சாத்தனூர் அணை முதலை பண்ணை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணை - தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1957-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணை 119 அடி உயரம் கொண்டதாகும்.

நீர்பிடிப்புப் பகுதிகளில் முதலை பெருக்கத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் 1977-ஆம் ஆண்டு முதலைப் பண்ணை தொடங்கப்பட்டது.

"இந்த முதலைப் பண்ணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய முதலைப் பண்ணை ஆகும். தற்போது முதலை பண்ணையில் சுமார் 300 முதலைகள் இருக்கின்றன. இந்த முதலைகள் மக்கர் (mugger-சதுப்புநில முதலை)வகை இனத்தைச் சேர்ந்தது" என்கிறார், வனச்சரக அலுவலர் விஸ்வநாதன்.

பெரும்பாலும் சாத்தனூர் அணையின் நீர்பிடிப்புப் பகுதி மற்றும் அணையின் தண்ணீர் வெளியேறும் பகுதியிலும் முதலைகள் இருக்க வாய்ப்பு அதிகம். இதனால் ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

முதலையிடம் அகப்பட்டால் தப்பிப்பது எப்படி?
படக்குறிப்பு, சாத்தனூர் அணையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை

நீருக்குள் மறைந்து வேட்டையாடும் முதலை

முதலைகளின் குணாதிசயங்கள் குறித்து பேசிய விஸ்வநாதன், அவை இயல்பில் வேட்டை குணம் கொண்டவை என்றும் நீருக்குள் மறைந்திருந்து, தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை அடித்து சாப்பிடுவதுதான் அதன் இயல்பு என்றும் தெரிவித்தார்.

அப்படி இளைஞர் முனீஸை விலங்கு என்று நினைத்து முதலை தாக்கியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"பொதுவாக முதலைகள் மனிதர்களை தாக்குவதில்லை. இதுபோன்று எப்போதாவது நடக்கும். சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை முதலை தாக்கியதில் காயத்துடன் அவர் உயிர் தப்பினார்" என்கிறார் வனச்சரக அலுவலர் விஸ்வநாதன்.

பெரும்பாலும் விலங்குகள் மனிதர்களை தாக்குவதில்லை என்றாலும், அவை தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தாக்குதலை நடத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

"முதலைக்கு தரையை விட நீரில் பலம் கூடுதலாகும். மேலும், நீர்பிடிப்புப் பகுதியில் முதலைகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, முதலை இருக்கும் பகுதிக்கு செல்லாமல் இருத்தல் நல்லது" என்றார் வனச்சரகர் விஸ்வநாதன்.

முதலையிடம் அகப்பட்டால் தப்பிப்பது எப்படி?
படக்குறிப்பு, சாத்தனூர் அணைக்கட்டு பகுதியில் காணப்பட்ட முதலை

முதலையிடமிருந்து தப்பிப்பது எப்படி?

முதலைகளின் மேல் பகுதியில் அமர்ந்துகொண்டு அதன் வாயை மூடிவிட்டால் முதலையிடம் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற தகவலை பகிர்ந்துகொண்டார், மெட்ராஸ் முதலை வங்கி அறக்கட்டளை மற்றும் ஹெர்பெட்டாலஜி மையத்தின் கல்வியாளர் (ஹெர்பெட்டாலஜி மையம்) வாணிஸ்ரீ.

"முதலை ஒரு காட்டு விலங்கு. அது நீர்நிலைகளில் அதிகமாக வாழும். ஆனால், முதலை இருக்கும் இடத்தை நாம் அவ்வளவு எளிதில் கண்டறிந்து கொள்ள இயலாது. சில நேரங்களில் மழை - வெள்ளக் காலங்களில் நகர் பகுதியில் இருந்து வெளிப்படுவதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். பெரும்பாலும் மனிதர்களை பாம்புகள், நாய்கள் கடிப்பதை அதிகம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், முதலைகளின் தாக்குதல் மிக குறைவாகும். பெரும்பாலும் இவை தாக்குதலில் அதிகமாக ஈடுபடுவதில்லை." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மனிதர்களை விட வலிமையானதா?

மனிதர்களை விட மிக வலிமை வாய்ந்தது முதலை என்றும் விதிவிலக்காக சிறிய முதலைகளை நாம் கட்டுப்படுத்தி விடலாம், ஆனால் பெரிய வகை முதலைகளை கட்டுப்படுத்துவது என்பது மிக மிக கடினம் என்றும் கூறுகிறார் வாணிஸ்ரீ.

"முதலை நம்மை கடித்து விட்டால் அதன் பிடியிலிருந்து விலக்கிக்கொள்வது என்பது மிக கடினமான செயலாகும். குறிப்பாக தண்ணீரில் நம்மை இழுத்து சுற்றிவிட்டால் தப்பிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல" என்றார்.

முதலையிடம் அகப்பட்டால் தப்பிப்பது எப்படி?
படக்குறிப்பு, முதலை நம்மை கடித்து விட்டால் அதன் பிடியிலிருந்து விலக்கிக்கொள்வது என்பது மிக கடினமான செயல் என்கிறார், வாணிஸ்ரீ

முதலை தண்ணீருக்குள் இழுத்தால் தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"முதலை நமது கை அல்லது கால் பகுதியை கடித்து விட்டால் உடனடியாக அதனிடமிருந்து விலக முயற்சிக்க வேண்டும். ஆனால். அது சற்று கடினமான செயலாகும். ஏனென்றால். முதலையின் வாய் மற்றும் அதன் வாய்ப்புற தசைகளுக்கு வலு அதிகம்.

அது கடித்து இரையை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று சுற்றி விட்டால் தப்பிக்க வாய்ப்பில்லை. உடனடியாக அது தண்ணீருக்குள் இழுத்து இரையை மூழ்கடித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தி சாகடிக்கும். அதுதான் முதலையின் இயல்பாகும்" என்கிறார்.

ஆனால், அதன் வாய் பகுதியில் இருந்து தப்பிப்பதற்கு உடனடியாக அதன் மேல் பகுதியில் அமர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றே வாணிஸ்ரீயும் கூறுகிறார்.

''முதலைகளின் வாய் மூடும் தசைகளுக்கு கூடுதல் சக்தி உள்ளது. இருப்பினும் மேல்புற தசைகளுக்கு (வாய் திறக்கும் தசைகள்) வலு சற்று குறைவு. மேல் பகுதியில் அமர்ந்து அழுத்தம் கொடுப்பது சற்று கடினம்தான். ஆனால் அதுதான் சிறந்த வழி. முதலைகளை பிடிப்பவர்கள் கூட, அதன் மேல் புறப்பகுதியில் அமர்ந்துதான் வாயை மூடி பிடிப்பார்கள். முதலை கை அல்லது கால் பகுதியை கடித்து நீருக்குள் இழுத்துச் செல்வதற்குள் நாம் சுதாரித்துக்கொண்டு முழு பலத்தையும் உபயோகப்படுத்தி மேற்பகுதியில் அமர்ந்து விட்டால் தப்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளது." என கூறினார்.

முதலைகள் எப்போதும் தமது இரையை தண்ணீருக்குள் எடுத்துச் சென்று தான் சாப்பிடும் என்றும் முதலை பண்ணைகளில் இதற்கு சற்று விதிவிலக்கு உண்டு என்றும் கூறினார் வாணிஸ்ரீ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு