தமிழ்நாடு 2025-2026 பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு 2025-2026 பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தற்போதைய அரசின் முழுமையாக கடைசி பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

அதன்படி 1 லட்சம் புதிய வீடுகள், கல்லூரி மாணவர்கள் லேப்டாப் அல்லது டேப்லட் வழங்குவது போன்ற பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் இடம்பெற்றிருந்தன. அதில் முக்கியமானவற்றை இந்த காணொளியில் பார்ப்போம்.

மும்மொழிக் கொள்கை விவகாரம் தற்போது பேசுபொருளாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தமிழ்மொழி தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும், வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாட்டின் நகரங்களிலும் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையில், அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களில் தொல் மரபணுவியல், உலோகவியல் பகுப்பாய்வு, நுண் தாவரவியல், மகரந்த பகுப்பாய்வு, தூண்டொளி வெப்பக் காலக் கணிப்பு, மட்பாண்டவியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வுகள் உலக புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் என குறிப்பிட்டார்.

தென்கிழக்கு ஆசியா, மத்திய தரைக்கடல் பகுதி, அரேபியர்கள் மற்றும் ரோமர்களுடன் தமிழர்கள் கடல்வழி வணிகம் கொண்டதை கண்டறியும் விதமாக தமிழ்நாட்டில் ஆழ்க்கடல் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)