பணம் சேர்க்க நூதன வழி - ஆன்லைனில் சீனப் பெண்கள் என்ன செய்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, சீன பொருளாதாரத்தில் நம்பிக்கை இழக்கும் பெண்கள் - பணம் சேர்க்க ஆன்லைனில் செய்வது என்ன?
பணம் சேர்க்க நூதன வழி - ஆன்லைனில் சீனப் பெண்கள் என்ன செய்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க புதிய வழிகளைத் தேடுகிறார்கள்.

"சேவிங் டா ஜி" என்ற ஹேஷ்டேக் முதன்முதலில் 2023 பிப்ரவரியில் சீனாவின் இன்ஸ்டாகிராம் பதிப்பான Xiahongshu இல் தோன்றியது. இதுவரை 17 லட்சம் பார்வைகளை அது பெற்றுள்ளது என்று தரவு பகுப்பாய்வு நிறுவனமான NewsRank தெரிவித்துள்ளது. சமூக ஊடக தளமான Weibo வில், தொடர்புடைய தலைப்புகள் மில்லியன்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. சரியான எண்ணிக்கையை பெறுவது கடினம். ஆனால் குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது ஆன்லைன் குழுக்களில் இருந்து சேமிப்புக் கூட்டாளிகளைக் கண்டறிந்துள்ளனர் என்று சமூக ஊடக ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

பெரும்பாலான உறுப்பினர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள். அவர்களில் பலர் தாய்மார்கள். சிலர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக சேமிக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள். அங்கு கல்விக்கான செலவு அதிகம். பங்குகள், வீடுகள் உட்பட சில முதலீடுகளே லாபகரமானவை என்பதால் சிலர் ரொக்கப்பணத்தை வைத்திருக்க விரும்புவதாகக் கூறுகிறார்கள். பொருளாதாரம் இப்போது தள்ளாடி வருவதால், சாத்தியமான வேலை இழப்புகள் அல்லது ஊதியக் குறைப்புகளுக்குத் தயாராக வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

சியாவோ ஜுவோ பிப்ரவரியில் பல்வேறு சேமிப்புக் குழுக்களில் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் உறுப்பினர்கள் தங்கள் பட்ஜெட் மற்றும் நுகர்வை பதிவு செய்ய வேண்டும். திடீர் தூண்டுதல் காரணமான வாங்கல்களை அவர்கள் பரஸ்பரம் தடுக்கிறார்கள். ஒரு உறுப்பினர் 5,000 யுவான் விலையில் ஒரு சொகுசு பையை வாங்க ஆசைப்பட்டார். மற்ற பெண்களிடம் பேசிவிட்டு அவர் 1,000 யுவானுக்கும் குறைவான விலையுள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பையை வாங்கினார்.

சியாவோ ஜுவோ பணத்தை சேமிக்கும் சில தந்திரங்களையும் கற்றுக்கொண்டார். எடுத்துக்காட்டாக, 1 முதல் 183 யுவான் வரையிலான தினசரி சேமிப்பு இலக்கைக் குறிக்கும் 365 செல்கள் உடைய இதய வடிவ விரிதாளைக் கொண்ட மொபைல் பயன்பாட்டைப் பற்றி அவர் அறிந்துகொண்டார். ஒரு வருடம் கழித்து அவரால் சுமார் 34,000 யுவான் சேமிக்க முடியும்.

மேலும் பலர் பணத்தைச் சேமிக்க விரும்புவதைக் கண்டு அவர் வியப்படைந்தார். தாங்கள் அனைவரும் ஒன்று என்ற உணர்வு இந்த சேமிப்புக் கூட்டாளிகள் மீது அவருக்கு ஏற்படுகிறது. "நான் தனியாக இந்த இலக்கை அடைவது கடினமாக இருந்திருக்கும்," என்றார் அவர்.

பணம் சேமிக்க சீனர்களின் நூதன வழி

பட மூலாதாரம், Getty Images

2023 ஆம் ஆண்டில் சீனக் குடும்பங்கள் சுமார் 138 டிரில்லியன் யுவானை (19.1 டிரில்லியன் டாலர்கள்; 15.1 டிரில்லியன் பவுண்டுகள்) வங்கி வைப்புகளில் சேமித்துள்ளன என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட சுமார் 14% அதிகமாகும்.

பல ஆண்டுகளாக கடுமையான ஜீரோ கோவிட் கொள்கையை பின்பற்றிய பிறகு சீனப் பொருளாதாரத்தின் மீட்சி குறுகிய காலமே இருந்தது. அது இப்போது சொத்து நெருக்கடி, விலையிறக்க அழுத்தங்கள், வெளிநாட்டு முதலீடு வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் உள்ளூர் அரசு கடன் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளது.

சீனாவில் அன்றாட வீட்டுச் செலவுகளை நிர்வகிப்பது பொதுவாக பெண்களின் பொறுப்பு. அதிகமான பெண்கள் சேமிப்பில் இறங்கியிருப்பது இளைஞர்களிடையே மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் வேலையில்லாத் திண்டாட்டம் பரவுகிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும் என்று டாக்டர். லூ கூறுகிறார். சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, வேலையின்மை விகிதம் தொடர்ந்து மூன்று மாதங்களாக அதிகரித்துள்ளது.

தனிநபர்களிடையே காணப்படும் சேமிப்பதற்கான வலுவான விருப்பம், சீனா தனது பொருளாதாரத்தை மறுசீரமைப்பதை மிகவும் கடினமாக்கும். முந்தைய தசாப்தங்களில், விரைவான வளர்ச்சியானது உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் குறைந்த உற்பத்தி விலை ஆகியவற்றால் உந்தப்பட்டது. ஆனால் சீனப் பொருளாதாரம் முதிர்ச்சியடையும் போது வளர்ச்சியை தக்கவைக்க உள்நாட்டு நுகர்வு அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)