You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிளாம்பாக்கம் சர்ச்சை: கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது என்ன நடந்தது? அமைச்சர் விளக்கம்
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் குறித்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திலும் இது தொடர்பான விவாதம் நடந்தது.
அதிமுகவினர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பதிலளித்தனர்.
பாரிஸில் இருந்து கோயம்பேட்டிற்கு பேருந்து நிலையத்தை மாற்றிய போது அதிமுக ஆட்சியிலும் இதே போன்ற பிரச்னை வந்ததாகவும், பேருந்தில் பயணிக்கும் யாரும் கிளாம்பாக்கம் குறித்து எந்தப் புகாரும் கூறவில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
பேருந்து வசதிகள் இல்லை எனக் கூறுவது தவறான கருத்து எனக் கூறிய அமைச்சர் சிவசங்கர், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளும் தற்போதும் இயக்கப்படுவதாக் கூறினார்.
பின்னர் பேசிய சேகர் பாபு கோயம்பேடு பேருந்து நிலையம் 2002ஆம் ஆண்டு திறக்கப்பட்டாலும் 2009ஆம் ஆண்டே ஆம்னி பேருந்துகள் அங்கு செல்ல முடிந்ததாகவும், ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட உடனயே முழு பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாகக் கூறினார். இது திமுக அரசின் நிர்வாக திறனுக்கு சாட்சி எனக் கூறிய சேகர் பாபு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் வைத்ததாலேயே சிலர் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள சிறு சிறு பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம் என்றார்.
அவசர அவசரமாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் சேகர் பாபு, 2021 மார்ச் 13ஆம் தேதியோடு முடிய வேண்டிய பணிகள் அதிமுக ஆட்சி முடியும்வரை 30 சதவீதம் மட்டுமே முடிந்திருந்ததாகவும், 70 சதவீத பணிகளை முடித்து திமுக அரசு திறந்ததாகவும் கூறினார்.
சேகர் பாபுவின் இந்த கருத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். பின்னர் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, கொரோனா காரணமாக பணிகள் தாமதமானதாகக் கூறினார்.
இதையடுத்து, குறுக்கிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், என்ன பிரச்னை என்று சொன்னால் அதை அரசு தீர்த்து வைக்கும் என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)