“தன்பாலின நபர்களே! உங்களை கொலை செய்யப்போகிறோம்” – குறிவைக்கப்படும் தன்பால் ஈர்ப்பு சமூகத்தினர்

- எழுதியவர், பேஷன்ஸ் அடுஹைர்
- பதவி, பிபிசி நியூஸ்
- இருந்து, கம்பாலாவில் இருந்து
- பிரசுரிக்கப்பட்டது
உகாண்டா நாடாளுமன்றம் கடந்த வாரம் தன்பால் ஈர்ப்பு சமூகத்தினருக்கு எதிராக மிகக் கடினமான சட்டத்தை நிறைவேற்றியது. அந்த நடவடிக்கை பரவலான கண்டனங்களையும் பெற்றது. இந்தச் சட்டத்துக்கு, அதிபர் ஒப்புதல் அளித்தால், தன்பால் ஈர்ப்பு சமூகத்தினராக அடையாளப்படுத்திக்கொள்ளும் எவராக இருந்தாலும், ஆயுள் தண்டனையைப் பெற நேரிடும்.
இந்தக் காரணத்தால் தன்பாலின மக்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அகதிகளாக இருப்பிடம் தேடி வந்த தன்பாலின மக்கள் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றனர். பிபிசி அவர்களுக்கான ரகசிய தங்குமிடங்களில் ஒன்றுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றது. அங்கு தங்கியிருப்பவர்கள், அவர்களுடைய எதிர்காலம் குறித்த கவலைகளை வெளிப்படுத்தினர்.
அலி, தனது பாலினத் தேர்வை ரகசியமாக வைத்திருந்தார். ஆனால், 2019இல் உகாண்டாவின் தலைநகரமான கம்பாலாவில் உள்ள தன்பாலினத்தவருக்கான ரகசிய பார் ஒன்றில் உகாண்டா போலீசார் சோதனையிட்டபோது அவர் கைது செய்யப்படவே அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது.
“நான் இனி உன்னை ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை’ என்று என் தந்தை கூறினார். ‘நீ என் மகன் இல்லை. உன்னைப் போன்ற ஒரு மகனை எனக்குத் தேவையில்லை’ என்று கூறினார்.” அலியின் உண்மை அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தனது 20களில் இருக்கும் அலி, இத்தகைய அனுபவம் ஏற்படுத்திய அதிர்ச்சியையும் தாண்டி, மென்மையாகவும் அமைதியாகவும் பேசினார்.
“அவர் என்னை அடிப்பதற்காகத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால், என் அம்மா அந்த விஷயத்தைச் சொல்லி மறைந்திருக்குமாறு சொன்னார். என்னிடம் எந்தவித திட்டமும் இருக்கவில்லை. ஆனால், நான் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது,” என்கிறார் அலி.
களங்கம், வன்முறை, அச்சம் கலந்த அவரது கதை உகாண்டாவில் உள்ள தன்பாலின மக்களின் வாழ்க்கை என்ன நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பார்வையை வழங்குகிறது.
தன்பாலின உறவு ஏற்கெனவே நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் புதிய தன்பாலின எதிர்ப்பு மசோதா அதைவிட ஒரு படி மேலே செல்கிறது.
இந்த நடவடிக்கை சட்டமாக மாறுவதற்காக அதிபரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. பாலியல் சிறுபான்மையினராக அடையாளம் காணப்படும் எவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, தன்பாலினத்தவர்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால் மரண தண்டனை விதிக்கப்படும். 14 வயதுக்கு உட்பட்டோர் பாலியல் வல்லுறவுக்கு ஆளானாலோ, குற்றவாளி எச்.ஐ.வி பாசிட்டிவாக இருந்தாலோ ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இது அரிதாகவே நிறைவேற்றப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
“தன்பாலின உறவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஓர் இடத்தை வாடகைக்கு எடுப்பது குற்றம் என்று வரையறுக்கப்படுகிறது. ஆகையால், அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பிற்காகச் செல்லும் எந்தவொரு தங்குமிடத்திலும் அவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகிறது. அவர்கள் தங்கக்கூடிய இடம் ஒரு பாலியல் தொழில் செய்யும் விடுதி என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, வசிப்பதற்கான பாதுகாப்பான இடம் குறித்துக் கூறப்பட்டது. அங்கு உணவு வழங்கப்பட்டதோடு, வீடற்ற தன்பால் ஈர்ப்பு சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு வேலை தேடும் முயற்சிகளைய்ம் அந்த விடுதி மேற்கொண்டது.
“2020ஆம் ஆண்டில், தங்குமிடம் போலீசாரால் சோதனை செய்யப்பட்டது. நாங்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டோம். பொதுமக்கள் எங்களை முறைத்துப் பார்த்தனர், கேலி செய்தனர். எங்களை அவமானப்படுத்துவதற்கு பொதுமக்கள் அழைக்கப்பட்டார்கள். மக்கள் எங்கள்மீது எச்சிலைத் துப்பினார்கள்,” என்று அலி பிபிசியிடம் கூறுகிறார்.
அவரும் 20க்கும் மேற்பட்ட ஆண்களும் கைது செய்யப்பட்டு, பெருந்தொற்றுப் பேரிடர் கட்டுப்பாடுகளை மீறியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.
“நாங்கள் சிறைக்குச் சென்ற நேரத்தில், சில கைதிகளுக்கு எங்களைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தது. அவர்கள் அதைப் பற்றி செய்தித்தாள்களில் படித்திருந்தார்கள். எங்கள் பாதுகாப்பு கருதி, நாங்கள் தன்பால் ஈர்ப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறுக்க வேண்டியிருந்தது,” என்று அவர் தனது நிலை குறித்து விளக்கினார்.
அவர் சிறையில் மோசமான, அதிர்ச்சியளிக்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

“எங்கள் வழக்கின் விவரங்களைப் பார்த்த ஒரு சிறைக்காவலர் மற்ற கைதிகள் எங்களைத் தாக்குவதற்கு உத்தரவிட்டார். அவர்களுடன் அவரும் சேர்ந்துகொண்டார். எனது நண்பர்கள் சிலரின் அந்தரங்கப் பகுதிகள் விறகுக்குப் பயன்படுத்தும் கரிகளால் எரிக்கப்பட்டன. நாங்கள் சுமார் மூன்று மணிநேரம் கம்பிகள், பலகைகள் என்று பல பொருட்களால் தாக்கப்பட்டோம்,” என்று தனது உடலிலுள்ள தழும்புகளைக் காட்டினார் அலி.
உகாண்டா சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் ஃபிராங்க் பெய்ன், காவலில் இருந்தபோது அவர்கள் தாக்கப்பட்டதை மறுக்கிறார். “அவர்கள் அங்கு இருந்தபோது, அவர்கள் தன்பால் ஈர்ப்பு சமூகத்தினராக அறியப்படவில்லை. யாரும் அவர்களைச் சித்திரவதை செய்யவில்லை,” என்றார். மேலும், “சிறை பொறுப்பாளரின் கூற்றுப்படி, சித்திரவதை அடையாளங்கள் எதுவும் இல்லை. அவர்கள் பிணையில் விடுவிக்கப்படும் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
அரசாங்கம் பிறகு கைதுசெய்யப்பட்ட அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டது. அவர்கள் 50 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அலி வேறொரு தங்குமிடத்திற்குச் சென்றார்.
உகாண்டா முழுவதும் இதுபோன்ற 20க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. அவை பல்வேறு அளவிலான ரகசியத்துடன் செயல்படுகின்றன.
உகாண்டா சிறுபான்மையினர் தங்குமிடக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிரேஸ், “பொதுவாக நாங்கள் எந்த நேரத்திலும் ஒரு தங்குமிடத்தில் 10, 15 பேர் வரை இருப்போம்,” என்கிறார்.
பல பால் புதுமையினர் இந்தத் தற்காலிக இல்லங்களில் பாதுகாப்பையும் தங்களுக்கான இடம் என்ற உணர்வையும் உணர்கிறார்கள். ஆனால், இங்கும்கூட அபாயம் இல்லாமல் இல்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு மாலைவேளையில் தான் தாக்கப்பட்ட அனுபவம் குறித்து அலி விவரிதார்.

“இளைஞர்கள் குழு ஒன்று என்னைப் பின்தொடர்ந்து வந்து, ‘தன்பாலினத்தவர்களே, நாங்கள் உங்களைக் கொலை செய்யப் போகிறோம்’ என்று மிரட்டல் தொனியில் கத்தத் தொடங்கினார்கள். நான் பதில் சொல்லாமல் நடந்துகொண்டே இருந்தேன். அவர்களில் ஒருவர் பின்னாலிருந்து என் தலையில் அடித்தார்.
எனக்கு சுயநினைவு திரும்பியபோது, நான் மருத்துவமனையில் இருந்தேன். என் முகம் முழுவதும், தலையின் பின்னால் ஒரு பெரிய காயம் இருந்தது.”
கம்பாலாவுக்கு வடக்கிலுள்ள ஒரு பகுதியில் அவர் மூன்று ஆண்டுகளாக வசித்து வந்த விடுதிக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு தங்கியிருப்பவர்கள் அந்த இடத்தை வெளிப்படுத்துவதில் மிகுந்த கவனமாக உள்ளார்கள்.
அந்த பங்களா தனியாக இருக்கிறது. அதன் உரிமையாளர் ஆரம்பத்தில் அதை ஒரு குடும்பம் வாழ்வதற்கான வீடாக அமைத்திருந்ததைப் போல் தெரிகிறது. அதன் வண்ணப்பூச்சு பல இடங்களில் விரிசல் விழுந்தும் தூர் விட்டும் இருந்தது. பிரமாண்ட மாமரங்களும் பலா மரங்களும் மறைத்திருந்த ஒரு வளாகத்திற்குள் தனிமையில் அந்த பங்களா இருந்தது. அந்த மரங்களைக் கடந்து சென்றால், ஆடைகள் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன.
உணவுகள் நிரம்பி வழியும் சமையலறையைத் தவிர, வாகனங்களை நிறுத்த, பழுதுபார்க்கப் பயன்படும் கேரேஜ் உட்பட உட்புறத்திலுள்ள மற்ற அனைத்து இடங்களும் படுக்கையறைகளாக மாற்றப்பட்டிருந்தன. வீட்டின் முன் அறையில்கூட மெத்தைகள், படுக்கைகள், கொசுவலைகள் மற்றும் பாதி நிரம்பிய பைகள் இருக்கின்றன. அவற்றுக்கு இடையே ஆங்காங்கே உட்கார்ந்தும் படுத்தும் இருந்தார்கள்.
தன்பாலின சமூத்திற்கு எதிரான மசோதா சட்டமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒரு குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
“மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, வீட்டு உரிமையாளர் எங்களை வெளியேறச் சொன்னார். தங்குமிடத்தின் மேலாளர் ஒரு புதிய வீட்டைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறார். அது கிடைக்கும் நேரத்தில் நாங்கள் உடனடியாக இடம் மாறுவதற்குத் தயாராக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்,” என்று விரிக்கப்பட்ட டிரிப்பிள் டெக்கர் படுக்கைகளுக்கு நடுவில் நின்றவாறு அலி பிபிசியிடம் கூறினார்.
ஆனால் வாய்ப்பு பிரகாசமாக இல்லை.
“தற்போது தங்குமிடத்தில் வசிப்பவர்கள், நில உரிமையாளரால் வெளியேற்றப்பட்டுவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதற்கு எங்களிடம் சாத்தியமான வாய்ப்புகள் எதுவுமில்லை,” என்று ஷெல்டர்ஸ் அம்பிரெல்லா அமைப்பைச் சேர்ந்த ஜான் கிரேஸ் நிலைமையின் தீவிரத்தை ஒப்புக்கொள்கிறார்.
மேலும், அந்த அமைப்பின் எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும், “மசோதாவில் அதிபர் கையெழுத்திட்டுவிட்டால், வீடற்ற பாலியல் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான வீடுகளைப் பெறுவதற்கும் பாலியல் சிறுபான்மையினராக அடையாளம் காணப்படுவதற்கும் நாங்கள் சட்டரீதியான துன்புறுத்தல், வன்முறை, பாகுபாடு, களங்கம் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும்,” என்று ஜான் கிரேஸ் கூறுகிறார்.
அந்தத் தங்குமிடத்தில் வசிக்கும் மற்றொருவர் டிம் (உண்மையான பெயர் இல்லை). அவரது பெற்றோர் பல்கலைக்கழகப் படிப்புக்குப் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டார்கள். அவரது தந்தை ஒரு மத போதகர். அவருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக்கொண்டார்.
டிம் தனது வாழ்வில் நிகழ்ந்த மிக மோசமான அனுபவத்தை நினைவுகூறினார்.

பட மூலாதாரம், Getty Images
“நான் பாலியல் தொழில் செய்தேன். ஏதாவது சாப்பிட்டாக வேண்டுமே! அதற்காக வெவ்வேறு ஆண்களுடன் உடலுறவு கொண்டேன். சில இரவுகளில் என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக இருக்கும். 10 முறை என் உடலை தேய்த்துத் தேய்த்துக் குளிப்பேன். எனக்கான எதிர்காலம் எதுவும் தெரியவில்லை. நான் என் குடும்பத்தை இழந்தேன், கல்வியை இழந்தேன், உணர்ச்சிகளை இழந்தேன்,” என்று வேதனையோடு கூறினார் டிம்.
தன்பாலின சமூகத்திற்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நாளில் டிம் சைபர் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
“உனக்கு என்ன ஆகப் போகிறது என்று பார்’ எனக் கூறி பலரும் எனக்கு அதுதொடர்பான செய்திகளை அனுப்பினார்கள்.”
“எங்களில் சிலருக்கு மனநலம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரத் தொடங்கியது. ஆனால், இப்போது இப்படியொரு இடத்தை ‘விபச்சார விடுதி’ எனக் குறிப்பிடுவதைப் பார்க்கையில் எனக்குப் பயமாக இருக்கிறது,” என்று டிம் பிபிசியிடம் கூறினார்.
“எங்கள் மீது குவிந்துள்ள வெறுப்பின் காரணமாக இப்போது நாங்கள் எங்களுடைய கண்ணியத்தை மீண்டும் பெற முடியுமா என்பதே சந்தேகமாக உள்ளது.”
ஏற்கெனவே, வயது வந்தோருக்கு இடையில் சம்மதத்தின் பேரில் வைத்துக்கொள்ளும் தன்பால் ஈர்ப்பு உடலுறவை குற்றமாகப் பார்க்கும் 32 ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக உகாண்டா உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த மசோதா சர்வதேச அளவில் பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்த நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவது குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் மரண தண்டனை விதிப்பதற்கு எதிராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச ஆர்வலர்களும் இதை எதிர்த்தனர்.
விடுதியைவிட்டு வெளியேற்ற இடமாற்றம் செய்ய முடியாமல் போனால் என்ன செய்வதற்குத் திட்டமிட்டுள்ளார் எனக் கேட்டபோது, அலி குரல் உடைந்து தலையைத் தொங்கப் போட்டுவிட்டார்.
“நான் எங்கே போவேன்?”
இதுதான் அவரது மனதில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி.
“நாங்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், இதுதான் நான். நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்பினேன். ஆனால் என் தந்தை என்னை ஒருபோதும் வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்,” என்று அவர் கூறுகிறார்.
ஓர் அடிப்படை ஆதரவைப் பெறுவதற்காக, அலி தனது இஸ்லாமிய நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொண்டார்.
“கடவுள்தான் என்னைப் படைத்தார் என்பது எனக்குத் தெரியும். நான் ஏன் தன்பால் ஈர்ப்பு கொண்டவனாக இருக்கிறேன் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால் நான் தொடர்ந்து பிரார்த்தனைகளைச் செய்கிறேன். இப்போதும் நான் நோன்பு இருக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























