You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாதையை மாற்றிய பாரதிராஜா - கடைசி வரை நிறைவேறாத மனோஜின் ஆசை
தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் திரையுலகில் நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர் என பல நிலைகளில் பணியாற்றியிருந்த மனோஜ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 1976ஆம் ஆண்டு பாரதிராஜா - சந்திரலீலா தம்பதிக்குப் பிறந்தவர் மனோஜ்.
தந்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்ததால் சிறு வயது முதலே திரைப்படத் துறையின் பரிச்சயத்துடன் வளர்ந்த மனோஜ், அத்துறையின் மீது ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டார். பள்ளி முடிக்கும் முன்னரே தனது தந்தையிடம் உதவி இயக்குநராக பணியாற்ற விருப்பம் தெரிவித்தார் மனோஜ்.
ஆனால் பாரதிராஜா, வேறு ஒரு இயக்குநரிடம் பணியாற்றுமாறும் அறிவுறுத்த, அடுத்த சில நாட்களில், மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கினார் மனோஜ். என்றுமே தனது காட்ஃபாதர் என்று மணிரத்னத்தையே குறிப்பிட்டுள்ளார் மனோஜ்.
இதன் பின் பாரதிராஜாவின் தமிழ்ச் செல்வன் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ், திரைப்படம் இயக்கும் தன் ஆர்வத்தை அப்பாவிடம் கூறினார்.
ஆனால் நடிகனாகத் தன்னால் சாதிக்க முடியாததை, மகன் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய பாரதிராஜா, மனோஜை நடிகனாகச் சொன்னார். இதன் பிறகே மனோஜ் நடிகனாகத் தன் பாதையை மாற்றிக் கொண்டார்.
நடிகராக அறிமுகமாவதற்கு முன்னர் தென் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளுக்கான பட்டப்படிப்பை முடித்தவர் மனோஜ். தனது இந்த படிப்பே, நடிப்புக்குத் தன்னை தயார்படுத்தியதாக மனோஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பின் 1999 ஆம் ஆண்டு, தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் மனோஜ். இந்தத் திரைப்படம் அவருக்கு வெற்றி தேடித் தரவில்லையென்றாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
இதன் பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சமுத்திரம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தம்பிகளில் ஒருவராக முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இதன் பிறகு மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் கடல் பூக்கள் படத்தில் நடிகர் முரளியுடன் இணை நாயகனாக நடித்தார். இதுவும் தோல்விப்படமாக அமைந்தாலும், பாரதிராஜா, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார்.
தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் அல்லி அர்ஜுனா, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வருஷமெல்லாம் வசந்தம், பத்ம மகன் இயக்கத்தில் பல்லவன், பாரதிராஜா இயக்கத்தில் ஈர நிலம். அறிமுக இயக்குநர் டிஜே குமாரின் சாதுர்யன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், எதுவும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியினைத் தரவில்லை.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.