இந்தியாவை விட பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிக நெருக்கம் காட்டுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரா ஹாசன்
- பதவி, பிபிசி உருது
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்காவின் வாஷிங்டனில் அதிபர் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் மற்றும் அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோர் சந்தித்தனர். டிரம்ப் இவர்களை 'சிறந்த ஆளுமைகள்' எனக் குறிப்பிட்டார்.
மறுபுறம், பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் அவர் உலகின் அமைதிக்கான தூதுவர் எனக் கூறியதாக பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப், "2025 வெற்றிகளால் நிரம்பிய ஆண்டு" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
கடந்த வியாழக்கிழமை டிரம்பை சந்திப்பதற்காக நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்றார் ஷெபாஸ் ஷெரிஃப்.
ஐநா கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் நியூயார்க் சென்றிருந்தார்.
இந்த சந்திப்பின்போது ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஒரே வாரத்தில் ஷெபாஸ் ஷெரிஃப், டிரம்பை சந்திப்பது இது 2வது முறையாகும்.
முன்னதாக காஸா பிரச்னை தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடனான சந்திப்பு நடந்தபோதும் அவர் டிரம்பை சந்தித்திருந்தார்.
ஷெபாஸ் ஷெரிஃப்-ஐ சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், இரு சிறந்த ஆளுமைகளை சந்திக்கப் போவதாக தெரிவித்திருந்தார். "பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் இருவரும் சிறந்த ஆளுமைகள்" என்றார்.
டிரம்புடனான சந்திப்பில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை மதிய உணவிற்கு அழைத்திருந்தார். அதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் பங்கேற்கவில்லை.
சமீபத்திய சந்திப்புக்கு பின் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 'இது அன்பான சந்திப்பு' எனக் குறிப்பிட்டிருந்தது.
டிரம்பை அமைதியின் உருவம் (Man of Peace) எனக் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில் அமைதியை நிலைநாட்ட டிரம்ப் எடுத்த முயற்சிகளை அங்கீகரிப்பதாக இருந்தது.
மத்திய கிழக்கில் குறிப்பாக பாலத்தீனத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு டிரம்பிடம், பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த சந்திப்பில் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானின் பங்கு குறித்து புரிந்துகொண்டதற்காக டிரம்பிற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனங்கள் பாகிஸ்தானில் வேளாண்மை, ஆற்றல் போன்ற துறைகளில் முதலீடு செய்ய பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அழைப்பு விடுத்தார்.
ஐநாவின் 80வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அமெரிக்கா சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஐநாவில் உரையாற்றினார்.
அதிபர் டிரம்பை சந்திப்பதற்காக அவர் நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூ விமான தளத்திற்கு சென்றடைந்தார். அங்கு அமெரிக்க விமானப்படையின் உயரதிகாரிகள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
பாகிஸ்தான் பிரதமரின் வாகன அணிவகுப்பு அமெரிக்க பாதுகாப்புடன் விமான தளத்திலிருந்து வெள்ளை மாளிகைக்கு புறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபரை பாகிஸ்தான் பிரதமர் வெள்ளை மாளிகையில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
6 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபரை சந்தித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் பேசப்படுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப், ஷெபாஸ் ஷெரிஃப், அசிம் முனீரின் சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் அரசின் அறிக்கையைத் தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும் சமூக வலைதளத்தில் இந்த சந்திப்பு குறித்து பல தகவல்கள் பரவின.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் உடன் அசிம் முனீர் பங்கேற்றது குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். ஒரு சிலர் அமெரிக்காவின் கோரிக்கைகள் பற்றி பேசினர்.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா அசிப் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்தார். அதில் "இந்தியாவுக்கு எதிரான வெற்றி, சௌதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாகிஸ்தான் - அமெரிக்க உறவுகளில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம். 2025 வெற்றிகளால் நிரம்பிய ஆண்டு." என இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
எனினும் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூரின் கீழ் பாகிஸ்தானில் பல பயங்கரவாத அமைப்புகளை தாக்கி அழித்ததாக இந்தியா கூறுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தடுத்ததில் எந்த மூன்றாம் நாடும் பங்கு வகிக்கவில்லை என இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. இது இருதரப்பு பிரச்னை என இந்தியா கூறுகிறது. ஆனால் இந்த மோதலை தடுத்ததில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்ததாக பாகிஸ்தான் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது.
ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் அஷோக் ஸ்வைன், பாகிஸ்தான் பிரதமர் விமான நிலையத்திலிருந்து வெள்ளை மாளிகை வரை சென்ற அணிவகுப்பு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மட்டுமல்ல, ராணுவத் தளபதி அசிம் முனீருக்கும் வாஷிங்டனில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது" என பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க சிந்தனைக் குழுவான ஆசியா பசிபிக் ஃபவுண்டேஷனின் பகுப்பாய்வாளர் மைக்கேல் கூகல்மேன், இம்ரான் கான் மற்றும் அதிபர் டிரம்ப் சந்தித்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, அசிம் முனீரின் முக்கிய பங்கு குறித்து பேசியுள்ளார்.
அதில், "2019ஆம் ஆண்டு இம்ரான் கான் வெள்ளை மாளிகை சென்றபோது அப்போதைய ராணுவ தளபதி ஜெனரல் பஜவா சீருடையில் இருந்தார். ஆனால் அப்போது அவர் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. ஆனால் முனீர் விஷயத்தில் இது அப்படியே தலைகீழாக உள்ளது. அவர்தான் மையமாக திகழ்கிறார். அவரின் இருப்பு கண்கூடாக தெரிகிறது" எனக் கூறியுள்ளார்.
பத்திரிகையாளரும், கட்டுரையாளருமான சிரில் அல்மெடியா தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த சந்திப்பு பற்றி நிறைய வதந்திகள் உள்ளன. ஆனால் குறைந்த தகவல்களே உள்ளன. இது வருத்தத்திற்குரியது" எனப் பதிவிட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் நசீம் ஸெஹ்ரா பாலத்தீன மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்னைதான் இந்த சந்திப்பில் மிகவும் முக்கியமானது எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில், "முதலீடு மற்றும் பாதுகாப்பில் பாகிஸ்தான் - அமெரிக்க இடையிலான உறவு நேர்மறையானதாகவே உள்ளது. பாகிஸ்தான் எப்போதும் பாலத்தீனத்துக்காக நின்றுள்ளது என்பதே இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக உள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பாதுகாப்பு சவால்களை இருநாடுகளும் ஒன்றை ஒன்று எப்படி பார்க்கின்றன?" என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணக்கமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
"கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்காவில் அதிகமான மூலோபாய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய கிழக்கு பிரச்னைக்குப் பிறகு, அமெரிக்க நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் முக்கியமாக உள்ளது." என்கிறார் மைக்கேல் கூகல்மேன்.
பிபிசியிடம் பேசிய அவர், "பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு முக்கியமானதாக மாறியதற்கு சில வர்த்தக மற்றும் மூலோபாய காரணங்களும் உள்ளன. வர்த்தக கோணத்தில், பாகிஸ்தான் வாஷிங்டனில் தன்னைச் சிறப்பாகக் காட்டியுள்ளது. அதில் அரிய கனிமங்கள், கிரிப்டோகரன்சிகள், குறிப்பாக எண்ணெய் போன்ற ஆற்றல் வளங்களை ஆராய்வது குறித்து பேசியுள்ளது. இதில் டிரம்ப் நிர்வாகம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் தன்னை மத்திய கிழக்கில் ஒரு முக்கிய நாடாக நிலைநிறுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் அதிகமான பதற்றம் நிலவுகிறது, அதில் அமெரிக்காவுக்கும் அதிகமான ஆர்வம் உள்ளது. இரான் உட்பட வளைகுடா நாடுகளுடன் பாகிஸ்தானுக்கு நல்ல உறவு உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளும், ரஷ்யாவுடன் நட்புறவும் உள்ளன." என்றார்.
"அமெரிக்க இலக்குகளை தாக்கத் திட்டமிட்ட பயங்கரவாதிகளை பிடிக்க எடுக்கப்பட்ட முயற்சியில் கிடைத்த முதல் வெற்றியாக, காபூல் விமான நிலையத் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை பாகிஸ்தான் அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. டிரம்பின் பாகிஸ்தானுடனான நெருக்கத்திற்கு இது முக்கிய காரணமாகும்" என மைக்கேல் கூகல்மன் கூறினார்.

இந்தியாவுடனான டிரம்ப் நிர்வாகத்தின் பதற்றமும் பாகிஸ்தானை அமெரிக்காவுக்கு நெருக்கமாக்கியது என கூகல்மன் கருதுகிறார். "அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் நல்ல உறவு இருந்திருந்தால், ராணுவ தளபதி முனீர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்திருக்க முடியாது".
மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் பங்கு குறித்து பேசுகையில், "மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவது பாகிஸ்தானுக்கு முக்கியமாக உள்ளது. ஏனெனில் எரிசக்திக்கு பாகிஸ்தான் இந்த பகுதியைதான் நம்பியுள்ளது" என்றார் கூகல்மன்.
"இந்த நாடுகளுடன் பாகிஸ்தான் நல்ல உறவைக் கொண்டுள்ளது. அதிகளவிலான பாகிஸ்தான் மக்கள் அங்கே வேலை செய்கின்றனர். அதனால்தான் பாகிஸ்தானை அமெரிக்கா முக்கியமாக கருதுகிறது." என்றார்.
"பாகிஸ்தான், சௌதி அரேபியா இடையிலான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் தற்போது பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்றுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது" என கூகல்மன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































