You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாக்குதலுக்குப் பின் பஹல்காமில் தற்போது என்ன நிலை? உள்ளூர்வாசிகள் என்ன சொல்கிறார்கள்?
மூன்று தினங்களுக்கு முன்பு வரை இந்தப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
தற்போது பஹல்காம் வெறிச்சோடிப் போயிருக்கிறது.
ஏப்ரல் 22ம் தேதி இங்கு நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு இங்கிருக்கும் மக்களின் முகத்தில் கவலையின் ரேகை வெளிப்படையாக தெரிகிறது.
இப்பகுதியை சேர்ந்த உணவக மேலாளர் உஜைர் பஷீர் கூறுகையில், "இங்குள்ள சூழ்நிலை தற்போது அச்சமூட்டுவதாக இருக்கிறது. பீதி பரவி இருக்கிறது. எங்களுடைய முன்பதிவு, அதிலும் ஏப்ரல் மாத முன்பதிவு அனைத்தும் ரத்தாகிவிட்டது. தாக்குதல் நடக்கும்போது சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்கியிருந்தார்கள். தாக்குதலைப் பற்றி தெரிய வந்ததும் நிலைமை மாறிவிட்டது. அனைவருக்கும் பயம் வந்துவிட்டது, அடுத்த நாள் காலையிலேயே வெளியேறிவிட்டனர்" என்றார்.
முகமது சுல்தான் ஷேக் என்பவர் தெரிவிக்கையில், "இங்கு இப்போது நிலைமை சரியில்லை. அதாவது இங்கு இதுவரை இருந்த வேலை இனி இருக்காது. பஹல்காமில் எப்போதும் வேலை கிடைக்கும். இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவார்கள். நன்றாக இருக்கும். இப்போது நடந்தது சரியில்லை, நடந்திருக்கக் கூடாது. எதுவும் சரியில்லை, மனிதாபிமானத்துக்கும் ஏற்றதல்ல. இங்கு நடந்ததை நினைத்து எங்கள் இதயம் அழுகிறது. மொத்தமாக தவறு நடந்துள்ளது. நாங்கள் இதை எதிர்க்கிறோம்." என தெரிவித்தார்.
"இங்குள்ள மக்கள் சுற்றுலாவையே நம்பியிருந்தோம். பஹல்காமில், சால்வை விற்பவர்கள், குதிரை வைத்திருப்பவர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் என நாங்கள் அனைவரும் சுற்றுலாவையே நம்பி இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு இப்படியாகிவிட்டது, எங்களின் விதி, இப்படியெல்லாம் நடந்துவிட்டது." என்கிறார் அப்துல் ரஹ்மான்.
மொஹம்மத் ஆசிஃப் என்பவர் கூறுகையில், "இங்கே வேலையில்லை. நிலைமை மோசமாகிவிட்டது. வெளியே போகவே விடுவதில்லை. இங்கே இனி வேலையில்லை, உங்கள் வீட்டுக்கு போய்விடுங்கள் என்று சொல்கின்றனர். திடீரென இங்கு தாக்குதல் நடைபெறுகிறது. நம்பிக்கையே இல்லை." என்கிறார்.
நஜாகத் அலி கூறுகையில், "இப்போது நாங்கள் வீட்டுக்கு திரும்புகிறோம். இன்ஷா அல்லா… எல்லாம் சரியாகி, மீண்டும் வேலை தொடங்கினால் திரும்பி வந்துவிடுவோம். ஆனால், எதுவும் சரியாகாவிட்டால், திரும்பி வந்து என்ன செய்வது?" என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு