தினமும் 11 நிமிடங்கள் இதை செய்தால் மரண ஆபத்தை குறைக்கலாம் (காணொளி)

தினமும் 11 நிமிடங்கள் இதை செய்தால் மரண ஆபத்தை குறைக்கலாம் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

உடற் பயிற்சியின் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் ஓட வேண்டும் என்பதோ, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பதோ இல்லை. தினசரி காலையில் கைகளை வீசி ஒரு நல்ல நடை நடந்தாலே அது போதுமானது என்கிறது பிரிட்டனில் நடந்த ஓர் ஆராய்ச்சி.

தினமும் குறைந்தது 11 நிமிடம் ஏதோ ஓர் உடல் சார்ந்த பயிற்சியில் ஈடுபடுவது பத்தில் ஒரு அகால மரணத்தை தடுக்கும் என்கிறது அந்த ஆய்வு.

குறைந்தபட்சமாக வாரத்துக்கு 150 நிமிட உடற் பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் அதைக்கூட செய்வதில்லை.

ஆனால், ஏதோ கொஞ்சம் உடற்பயிற்சி செய்வது எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட சிறந்தது என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓர் ஆய்வாளர்.

கடுமையாக மூச்சி வாங்கவைக்கும் உடற்பயிற்சியில் வாரத்திற்கு 75 முதல் 150 நிமிடங்கள் வரை ஈடுபடுவது நல்லது என்று பிரிட்டனின் நேஷனல் ஹெல்த் சர்விஸ் பரிந்துரைக்கிறது.

வாரத்திற்கு 75 நிமிடங்கள் அல்லது தினமும் 11 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது, வேகமாக நடப்பது, நடனமாடுவது, டென்னிஸ் விளையாடுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

நீங்கள் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் இதயம் வேகமாக துடிக்கும் என்று கூறுகிறார் இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த சோரன் ப்ரீச்.

இத்தகைய உடற்பயிற்சியில் ஈடுபடுவது இதய நோய், பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை 17 சதவீதமும், புற்றுநோய் ஆபத்தை 7 சதவீதமும் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதோடு தூக்கம், இதய நலம் ஆகியவற்றை இது மேம்படுத்தும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: