You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செங்கடலில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஹூத்தி தாக்குதல் - என்ன நடந்தது?
செங்கடல் பகுதியில் இரு எண்ணெய் கப்பல்களை தாங்கள் தாக்கியதாக யேமனைச் சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளனர்.
ஹுத்தியின் ராணுவ செய்தித் தொடர்பாளர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தாக்குதலுக்கு உள்ளான டேங்கர்களில் ஒன்று பனாமா கொடியைக் கொண்ட எண்ணெய் டேங்கர் என்றும் மற்றொன்று லைபீரியா கொடியைக் கொண்ட கச்சா எண்ணெய் டேங்கர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் உரிமையாளர்கள் இஸ்ரேலிய துறைமுகங்களை பயன்படுத்தியதால் இந்த டேங்கர்களை இலக்கு வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதற்கு பதில் தரும் விதமாக தங்களது சமீபத்திய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது போன்றவற்றை தங்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.
இரான் ஆதரவு பெற்ற யேமன் கிளர்ச்சி குழுவான ஹூத்தி, காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதில் தரும் விதமாக கடந்த நவம்பர் மாதம் முதல் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஹூத்தி தாக்குதலில் இதுவரை 2 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன என்றும் ஒரு கப்பல் சிறை பிடிக்கப்பட்டதாகவும் குறைந்தது 3 மாலுமிகள் கொல்லபப்ட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது. ஹூத்தி தாக்குதலால் குறைந்தது 65 நாடுகள், கப்பல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு உளவு ஏஜென்சியின் தரவு கூறுகிறது.
ஹூத்திகளின் தாக்குதலை தடுக்கும் பணியில் அமெரிக்கா,பிரிட்டன் ஆகிய நாடுகளின் படைகள் செங்கடல் பகுதியில் ஈடுபட்டுள்ளன.
ஜூலை 16ஆம் தேதி அமெரிக்காவின் சென்ட்காம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ இரானிய ஆதரவுபெற்ற ஹூத்திகளின் ஐந்து ஆளில்லா வான்வழி வாகனங்களை செண்ட்காம் படைகள் வெற்றிகரமாக அழித்ததாக’ கூறியிருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)