ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி - நடந்தது என்ன?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானில் புத்தாண்டு துவக்கம் மகிழ்வாக அமையவில்லை. ஜப்பானின் மத்திய பிராந்தியத்தில் இன்று 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  முதலில் தீவிர  சுனாமி வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது சுனாமி எச்சரிக்கையாக மட்டும் குறைக்கப்பட்டது. 

ஐந்து மணிநேரங்களில் மட்டும் 3.4 முதல் 7.6  என்ற அளவு வரை 50 முறை நிலநடுக்கம் இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது. 

ஜப்பான் கடலோர பகுதியில் வசிக்கும் மக்களை அரசு பாதுகாப்பாக  வெளியேறுமாறு அறிவுறுத்தியது."சுனாமி ஏச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவுறுத்தினார். 

 சில இடங்களில் ஐந்து மீட்டர் அதாவது 16 அடி வரை சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என முன்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது 3 மீட்டர் அளவுக்கு அலை எழும்பக்கூடிய சுனாமி எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இதுவரை சுமார் ஒரு மீட்டர் உயர அளவு மட்டுமே அலைகள் எழும்பியதாக பதிவாகியுள்ளது. 

 நிலநடுக்கம் மற்றும் சுனாமியைடுத்து இஷிகவா பகுதியிலிருந்து டோக்கியோ நகரத்திற்கு இயக்கப்படும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் ரயில்வே அறிவித்தது.

இஷிகவா பகுதியிலுள்ள சூசு நகரத்தில் நிலநடுக்கத்தால் பல வீடுகள் மற்றும் மின்சார கம்பங்கள் ஆகியவை முற்றிலும் இடிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஷிகவா பிராந்தியத்தில் 36,000 வீடுகளுக்கு மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை சுட்டிக் காட்டி கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான இஷிகவாவிற்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டதையும், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளதையும் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.  

6 இடங்களில் மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் தகவல் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நோட்டோவின் கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்லும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

டொயாமா நகரில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் போன்ற வாகனங்களும் நிலநடுக்கத்தால் குலுங்கின.  

  ஜப்பானின் மிகப்பெரிய அணு உலை மின்சார தயாரிப்பாளரான கன்சாய் எலெக்ட்ரிக் நிறுவனம், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் அணுஉலைகளில் 'அசாதாரண நிலை ஏதுமில்லை' என்று விளக்கமளித்தது.

ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தை அதிகாரிகள், நிலநடுக்கத்தால் அணு உலையிலிருந்து எவ்வித அணுக் கதிர்வீச்சும் கசியவில்லை என்று தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டில்  ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 20 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானைப் போலவே வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்ய அரசு தெரிவித்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)