காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களில் உயிர் வாழும் குடும்பங்கள்
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களைப் பிணைக் கைதிகளாகக் கொண்டு சென்றபின் இஸ்ரேல் காஸா மீது வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
அந்தத் தாக்குதல்கள் இன்றும் தொடர்வதாக அங்கிருக்கும் மக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தாக்குதலால் இடிந்த கட்டடங்களில் தான் பல குடும்பங்கள் இன்றும் வாழ்வதாக அங்கிருப்பவர்கள் கூறினர். அங்குள்ள மக்களில் ஒருவரான மருந்து கடை வைத்திருந்த காலித், தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் காயங்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார். ஆனால், அவர் மருத்துவர் அல்ல.
வடக்கு காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையும் மூடப்பட்டுள்ளதால், இவர் தனது வீட்டை ஒரு தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளார். எங்கு தாக்குதல் நடந்தாலும் சம்பவ இடத்திற்கே சென்றும் காயமடைந்த மக்களுக்கு இவர் முதலுதவி சிகிச்சையளித்து வருகிறார்.
அவரது குடும்பம் மூன்று முறை வான்வழி தாக்குதல்களிலிருந்து தப்பித்துள்ளது. ஒவ்வொரு இரவு தூங்கும் போதும், தனது குழந்தைகளுக்கு 'குட் பை ' சொல்லிவிட்டு தூங்குகிறார், ஏனென்றால் தூங்கி எழும்போது யார் உயிருடன் இருப்பார்கள், யார் இறப்பார்கள் என தெரியாது என்கிறார்.
ஒரு முறை ஜன்னல் அருகில் இல்லாததால், ராக்கெட் தாக்குதலிலிருந்து தப்பியதாக கூறுகிறான் காலித்தின் மகன். காலித் வீட்டு பிள்ளைகளின் விளையாட்டே, ஒரு பொம்மைக்கு அடிபட்டது போலவும், அதற்கு சிறுவர்கள் சிகிச்சை செய்வதுமே தான்.
முழு விவரம் வீடியோவில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



