யானைகளின் காதலன் பொம்மன் - 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி இப்போது என்ன செய்கின்றனர்?

காணொளிக் குறிப்பு, யானைகளின் காதலன் பொம்மன் - எலிபெண்ட் விஸ்பரர்ஸ் தம்பதி இப்போது என்ன செய்கின்றனர்?
யானைகளின் காதலன் பொம்மன் - 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி இப்போது என்ன செய்கின்றனர்?
பிரசுரிக்கப்பட்டது

2017ஆம் ஆண்டு தாயைப் பிரிந்த ஒரு குட்டி யானை உடம்பில் பல காயங்களுடன் இறக்கும் தறுவாயில் காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்த பலரும் இனி அதைக் காப்பாற்றுவது கடினம் என ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

அங்கு யானைகளைப் பராமரிக்கும் பணியில் இருந்த பொம்மன் அதைத் தன்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி அந்தக் குட்டியைப் பராமரிக்கத் துவங்குகிறார். யானையை வளர்ப்பதில் பொம்மனுக்குத் துணையாக பெள்ளி என்ற பெண்ணும் வருகிறார்.

ரகு என்று பெயரிடப்பட்ட அந்த யானைக் குட்டி, நாளடைவில் அவர்களது குழந்தையாகவே மாறிப் போகிறது. அவர்களது பராமரிப்பில் அது உடல்நலம் தேறி இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு பொம்மி என்ற இன்னொரு யானைக்குட்டியும் அவர்களது பராமரிப்பின் கீழ் வருகிறது.

யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

2022ஆம் ஆண்டு பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும் அவர்கள் பராமரித்து வந்த யானைக்குட்டிகளுக்கும் இருந்த பிணைப்பைப் பற்றி கார்த்திகி கோன்சால்வேஸ் என்ற புகைப்படக் கலைஞர் 'The Elephant Whisperers' என ஓர் ஆவணப்படத்தைத் தயாரித்து NETFLIX தளத்தில் வெளியிடுகிறார்.

அப்படம் இந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில், ஆவணக் குறும்படப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் ஒரு மூலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்த காட்டுநாயக்கர் பழங்குடியின தம்பதிகளான பொம்மன்-பெள்ளியை உலகம் முழுவதும் அறிமுகம் செய்திருக்கிறது.

ஆஸ்கர் விருதை எதிர்நோக்கியுள்ள இந்தக் குடும்பத்தைச் சந்திக்க நேரில் சென்றோம்.

ஆவணப்படம் எடுக்கப்பட்டபோது பொம்மன், பெள்ளி தம்பதி பராமரித்து வந்த ரகு மற்றும் பொம்மி யானைகள் தற்போது இவர்களின் வளர்ப்பில் இல்லை. அவை தற்போது வேறு பாகனின் பராமரிப்பில் உள்ளன.

ரகு, பொம்மிக்குப் பிறகு பெள்ளி யானை வளர்க்கும் பணியில் இல்லை. பாகன் பொம்மன் தற்போது கிருஷ்ணா என்கிற யானையைப் பராமரித்து வருகிறார்.

பொம்மன், பெள்ளி யானைகளுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்த காலகட்டம், ஆவணப்படத்தில் நடித்த அனுபவம், ஆஸ்கர் பற்றி கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட உணர்வு போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பு: மோகன்

ஒளிப்பதிவு: மதன் பிரசாத்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

எலிபெண்ட் விஸ்பரர்ஸ் தம்பதி இப்போது என்ன செய்கின்றனர்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: