போரை நிறுத்தக் கோரி போராடிய இஸ்ரேலியர்கள்
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஹமாஸ் வசமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் எட்டவும் கோரி, இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல் அவிவின் "Hostages Square" பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய கூட்டம் காணப்பட்டது.
காஸா நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசு திட்டமிடுவது, அங்கு இன்னும் ஹமாஸ் வசமுள்ள சுமார் 20 பணையக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை காஸா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதன் தொடர்ச்சியாக இந்த போராட்டம் நடந்துள்ளது. காஸாவில் 22 மாதங்களாக நீடித்து வரும் இந்த போரில் இதுவரை நடந்த மிகப்பெரிய போராட்டமாக இது கருதப்படுகிறது.
போராட்டங்களின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. சில பகுதிகளில் சாலைகள், அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. போராட்டக்காரர்கள் சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல் அவிவில், பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் தலைமையகத்துக்கு வெளியே நடந்த போராட்டத்தை காவல்துறையினர் கலைத்தனர்.
போராட்டக்காரர்களில் ஒருவரான டோரோன் வில்ஃபாண்ட் தொடக்கத்தில் 90 சதவிகித இஸ்ரேலியர்கள் போரை ஆதரித்தாலும் இப்போது நிலைமை மாறிவிட்டதாக கூறுகிறார்.
இந்த போராட்டம் பற்றி பேசிய நெதன்யாகு, இன்று ஹமாஸை தோற்கடிக்காமல் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோருபவர்கள், ஹமாஸின் நிலைப்பாட்டுக்கு மேலும் வலு சேர்ப்பது மட்டுமல்லாமல் பணயக்கைதிகளின் விடுவிப்பையும் தாமதப்படுத்துகிறார்கள் என கூறினார்.
மேலும், "பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யவும் காஸா இனிமேல் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாததை உறுதி செய்யவும், நாம் இந்த பணியை முடித்து ஹமாஸை தோற்கடிக்க வேண்டியது அவசியம்." என நெதன்யாகு பேசினார்.
இஸ்ரேல், காஸா நகரிலிருந்து 10 லட்சம் மக்களை தெற்குப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு இடம்பெயர்க்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், படைகள் நகருக்குள் எப்போது நுழையும் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
ஐ.நா. தகவலின்படி, காஸாவில் ஏற்கெனவே 90% மக்கள் – அதாவது, குறைந்தபட்சம் 19 லட்சம் பேர் – தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு நிலவி வருவதாக ஐ.நா. குறிப்பிடுகிறது. மேலும், கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "பசி காரணமாக மிக மோசமான நிலை" காஸாவில் நிலவுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலால் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதோடு, 251 பேர் பணையக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதுவே காஸா போருக்கான தொடக்கமாக அமைந்தது.
ஹமாஸ் நிர்வகிக்கும் காஸா சுகாதார அமைச்சகத் தரவின்படி, இதுவரை 61,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகளை ஐ.நா. நம்பத்தக்கதாக கருதுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



