இரான் அணுசக்தி தளங்களை அமெரிக்காவின் பங்கர் குண்டு துளைத்துச் சென்ற வீடியோ

இரான் அணுசக்தி தளங்களை அமெரிக்காவின் பங்கர் குண்டு துளைத்துச் சென்ற வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் பதுங்குக்குழிகளை தாக்கி அழிக்கும் குண்டுகளை பயன்படுத்தி இரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இரான் - இஸ்ரேல் இடையே நீடித்த பதற்றத்தின் நடுவே, இந்த தாக்குதலை அரங்கேற்றியது அமெரிக்கா. அந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 'பங்கர் பஸ்டர்' குண்டுகளின் சோதனைக் காட்சிகளை அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய அதிகாரி, "15 ஆண்டுக்கும் மேலான பரிசோதனை மற்றும் மேம்பாட்டின் உச்சத்தை இந்த வீடியோ காட்டும். நூற்றுக்கணக்கான தடவை இது சோதனை செய்யப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு ஆயுதம்தான். ஆனால், நீங்கள் இதைப் பார்க்கும் போது கூடுதலாக 5 ஆயுதங்கள் இருப்பதைப் போன்று தோன்றும். ஒரு நிமிடம் பாருங்கள்.

தாக்குதல் நடந்த இடத்தின் உட்புறக் காட்சியை நீங்கள் பார்க்கிறீர்கள். சாதாரண வெடிகுண்டுகளைப் போல இது நிலப்பரப்பில் பள்ளத்தை ஏற்படுத்தாது. இது நிலத்திற்குள் ஆழமாக ஊடுருவி பின்னர் வெடிக்கக் கூடியது. இதுகுறித்து பலவாறான கேள்விகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஃபோர்டோ அணுசக்தி மையத்தில் நாங்கள் குறிவைத்தபடி இலக்கு மிகச்சரியாக தாக்கப்பட்டது," என்று கூறினார்.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்" என அறியப்படுகின்றது.

இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.

போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும். இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

"அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காகப் பயன்படுத்தப்பட்டது.

தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான்.

B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது.

இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ).

குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு