இலங்கையை புரட்டிப்போட்ட திட்வா புயல்: 90 பேர் பலி, ரயில் சேவைகள் நிறுத்தம் - நிலவரம் என்ன?

இலங்கையில் திட்வா புயல் தாக்கத்தால் 90 பேர் பலியாகியுள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடுமையான பேரிடர்ச் சூழல் காரணமாக, கண்டி, பதுளை, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 90 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கண்டி மாவட்டத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 67 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.
இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவம்பர் 27) புயலாக மாறியது. இதற்கு திட்வா என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கால கட்டத்தில் 219,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி இலங்கையில் கண்டி மற்றும் மதாலே மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 செ.மீக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. கம்மதுவா பகுதியில் 57.8 செ.மீ மழை பெய்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹாவெலி, தெதுரு ஒயா, மஹா ஒயா, காலா ஒயா, மெனிக் கங்கா, மல்வாது ஒயா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக இலங்கையின் நீர்பாசனத்துறை எச்சரித்துள்ளது.
எனவே, இந்த ஆறுகளுக்கு அருகில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும், வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 51 ஆயிரம் ஏக்கரிலான நெல் வயல்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Tharindu Niroshan / Facebook
'இதுபோன்ற ஒரு வெள்ளத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை'
இலங்கையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து பேசிய இலங்கை வானிலை ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் சரத் பிரேமலால், "1978 சூறாவளியின் போது, பேராதனையில் ஒரு மலை இடிந்து விழுந்து நிலச்சரிவை ஏற்படுத்தியது. பேராதனை சந்திப்பில், கம்போலா நோக்கி சாலை திரும்பும் இடத்தில், ஒரு மலை இடிந்து விழுந்தது, சில வீடுகள் சேதமடைந்தன. இன்று, பேராதனை பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. எனக்கு நினைவில் உள்ள வரை, எனது 40 ஆண்டுகால சேவையில் இதுபோன்ற ஒரு வெள்ளம் ஏற்பட்டதில்லை." என்று கூறினார்.
மேலும், "பேராதனையில் உள்ள மல்வத்தை நீரில் மூழ்க வேண்டுமென்றால், மகாவலி ஆறு நிரம்பி வழிய வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த காலத்தில் அது ஒருபோதும் நடந்ததில்லை. நானும் கண்டியில் இருக்கிறேன். ஆனால் கண்டி நகரம் இப்படி நீரில் மூழ்கியதில்லை. இதற்கு முன்பு பல சூறாவளிகள் இருந்தபோதிலும், இவ்வளவு மழை பெய்ததில்லை." என்று அவர் கூறினார்.
இன்று விடுமுறை
கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இலங்கை முழுவதும் இன்று அரசு நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களுக்கு தேவையான அவசர சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொது நிர்வாகத்துறை இதனை பிபிசியிடம் தெரிவித்தது.
மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், எனினும், மருத்துவம் போன்ற அவசர சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு, பேரிடர் மேலாண்மை மையத்தை 117 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
மீட்புப் பணியில் 20,500 ராணுவ துருப்புகள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்காக சுமார் 20,500 துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
நேற்று (நவம்பர் 27) மத்திய மலைப்பகுதி உட்பட இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள 3,740 பேரை பாதுகாப்பாக வெளியேற்ற ராணுவ துருப்புகள் நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.

இன்றும் கனமழை பெய்யும்
இலங்கையில் இன்றும் பல பகுதிகளில் 20 செ.மீக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாட்டின் வடக்கு, வட-மத்திய, மத்திய, வடமேற்கு, மற்றும் மேற்கு பிராந்தியங்களில் 20 செ.மீக்கு அதிகமான மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, திரிகோணமலை, பதுல்லா, படியகலோஆ, மதரா மாவட்டங்களில் 15 செ.மீக்கு அதிகமான மழை பெய்யக்கூடும்.
ரயில் சேவைகள் நிறுத்தம்
ஒரு சில அத்தியாவசிய ரயில் சேவைகளைத் தவிர அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில அத்தியாவசிய ரயில்கள் தவிர மற்ற அனைத்து ரயில் சேவைகளும் இன்று காலை 6:00 மணி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் ஹசன்க சமரசிங்க பிபிசிக்கு தெரிவித்தார். இது பயணிகளின் பாதுகாப்பை கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவு என்று அவர் தெரிவித்தார்.
எனினும் காலி, அளுத்கம, மீரிகம மற்றும் சிலாபம் ஆகிய இடங்களிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு சில ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மண்சரிவு அபாயம்: தற்காலிகமாக மூடப்பட்ட சாலை
கேகாலை மீப்பிட்டிய பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக அப்பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு – கண்டி சாலையில் 88 மற்றும் 89 ஆவது கிலோமீட்டர் கற்களுக்கு அருகில் கேகாலை – மீப்பிட்டிய பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கொழும்பு – கண்டி சாலையில் அந்த பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
அந்த பாதையில் பயணிக்கும் மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்துகிறது.
சாலையில் சிக்கிய பேருந்து - குறைந்தது 60 பயணிகள் தவிப்பு
அநுராதபுரம் – புத்தளம் சாலையில் உள்ள கலாவெவ பாலத்தில் பயணிகள் பல பேருடன் சென்ற பேருந்து சிக்கிக்கொண்டது. அந்த பேருந்தில் உள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என்று சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிக்கியிருக்கும் பேருந்தில் உள்ள 70 பேரை மீட்பதற்காக விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தேவையான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேராவுக்கு கிடைத்த தகவல்கள் சரியானவை என தெரிவித்தார்.
" பேருந்தில் சுமார் 60 பேர் இருந்தனர். அங்கு இரண்டு ராணுவப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஹெலிகாப்டர்களை நிலைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































